ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்சில் பார்த்துக் கொண்ட அந்த நொடியில் இருவருமே ஒருவரால் ஒருவர் சற்றே ஈர்க்கப்படுகிறார்கள். ஆளுக்கொரு காதலுக்கு மரியாதை பட வீடியோ கேசட் வாங்கிக் கொண்டு பிரிகிறார்கள். அதே நேரம் இவர்களுக்கு தெரியாமலேயே கார்த்திக்கின் அம்மாவும் மெல்லினாவின் அப்பாவும் இந்த இருவருக்கும் இடையிலான பெண் பார்ப்பு – மாப்பிள்ளை பார்ப்பு வைபவங்களுக்கு திட்டமிடுகிறார்கள் .
இருவரும் வக்கீலாக பிராக்டீஸ் செய்ய முடிவு செய்து ஆபீஸ் பார்க்க, கிடைக்கும் ஒரே ஆபீசும் பெரியதாக இருக்க, இருவரும் ஒரே தொழில் செய்வதை அறியாத நிலையில் ஒரே ஆபீசை பகிர்ந்து கொள்ள புரோக்கர் ஹரிதாஸ் (ஜெகன்) மூலம் அட்வான்ஸ் கொடுக்கிறார்கள். அதன் பிறகே இருவருமே வக்கீல்கள் என்பது தெரிய வர, உண்மையை மறைத்தது யார் என்ற வாக்கு வாதத்தில் இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.
யாருக்கு முதல் கேஸ் கிடைக்கிறதோ அவரிடம் அலுவலகத்தை ஒப்படைத்து விட்டு மற்றவர் வெளியேற வேண்டும் என்று முடிவாகிறது . கிராமத்து நிலத் தகராறு காரணமாக ஹரிதாசின் ஊரைச் சேர்ந்த காட்ட முத்து (பசுபதி) என்பவரின் வழக்கு கார்த்திக்குக்கு கிடைக்க, அவரது எதிர்பார்ட்டியான அதே ஊரைச் சேர்ந்த மருது (எம் எஸ் பாஸ்கர்), தனது வக்கீலாக மெல்லினாவை நியமிக்கிறார் . இருவருக்கும் ஒரே நேரத்தில் வழக்கு கிடைத்த நிலையில் ஜெயிப்பவருக்கே ஆபீசில் தொடர்ந்து இருக்கும் உரிமை என்று தீர்மானமாகிறது
இது இப்படி இருக்க….
நில மோசடி வழக்கு ஒன்றில் அரசு தரப்பு சாட்சியாக மாறிய புரோக்கர் ஒருவரை குற்றவாளிகள் தரப்பு , அராஜக இன்ஸ்பெக்டர் சம்பத் (சரத் லோகி தாஸ்வா) மூலமாக போலி என்கவுண்டரில் போட்டுத் தள்ள , அதை ரகசியமாக ஒரு டி வி நிருபர் படம் எடுக்க, அதை பார்த்து விடும் இன்ஸ்பெக்டர் நிருபரை கொலை செய்ய துரத்த….
நிருபர் தான் எடுத்த காட்சியை டிவிடியில் காப்பி செய்து, ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளே நுழைந்து அங்கு விற்பனைக்கு இருக்கும் காதலுக்கு மரியாதை பட டிவிடிக்குள் வைத்து விட …..
இதுவரை சீரியசாய் நீங்கள் படித்ததை மறுபடியும் ஒருமுறை காமெடியாக எண்ணி படித்துப் பாருங்கள் . உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் இந்தப் படம் .
விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களில் இருந்த இறுக்கம் இல்லை. சீரியஸ்னஸ் இல்லை . சைலன்ட் இல்லை. சமூக அக்கறை விசயங்கள் இல்லை . இலகுவாக நகர்கிறது. கலகலவென போகிறது . வசனங்களால் நிரம்பி வழிகிறது படம் . பல வெத்து வெட்டு காட்சிகளும் உண்டு . முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம் !
நாயகி சுஷ்மா ராஜ் , கொஞ்சம் இளமையான ஒல்லியான அலட்சியமான அனுஷ்கா மாதிரி இருக்கிறார் . சிடு சிடு கேரக்டருக்கு சடசடவென ஒத்துப் போகிறது, அந்த வெடவெட உடம்பும் நெடு நெடு உயரமும் . லவுக்கை வெடிக்காவிட்டாலும் இடுப்பு துடிப்பில் தப்பிக்கிறார்.
ஜெகன் , பசுபதி , எம் எஸ் பாஸ்கர் காமெடி ஏரியாவுக்கு ஒகே . பசுபதி கொஞ்சம் சீரியசும் காட்டுகிறார் . இன்ஸ்பெக்டர் ஏதோ அசலூரு பாஷையில் தமிழ் பேசினாலும் (சொந்தக் குரல்லதான் பேசணுமா? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?) உருவத்தால் மிரட்டுகிறார் .
காளியின் காப்பி காமெடியில் அல்லு சில்லு ஆகிறது தியேட்டர் . (மொக்கை காமெடிதான் . ஆனால் எடுத்த விதத்தில் சிரித்தே கதற வைத்து விடுகிறார் இயக்குனர் ஆனந் )
தீனா தேவராஜன் இசையில் வெரைட்டியாக ஒலிக்கும் ஐந்து பாடல்களுமே (சில மெட்டுகள் முன்பே கேட்டவை என்றாலும்) இனிமை . பாடல் காட்சிகள் மட்டுமல்லாது படம் முழுக்கவே சிறப்பான ஒளிப்பதிவை தந்துள்ளார் ஓம் .

கிராமத்துக் காட்சிகளில் இருக்கும் நாடகத் தன்மையை குறைத்து இன்னும் லைவ் ஆக சொல்லி இருக்கலாம்… கிராமத்தில் இருந்து காதல் ஜோடி வந்தது என்றெல்லாம் சுற்றாமல் இருந்திருக்கலாம்….என்கவுண்டர் விஷயத்தை அடுத்து மெல்லினாவை போலீஸ் துரத்தும் விஷயத்தை இன்னும் பரபரப்பாக பலமான காட்சிகளுடன் வைத்து பரபரப்பை கூட்டி இருக்கலாம்….
என்கவுண்டர் விஷயத்தை வைத்து படத்தை துவக்கி விட்டு, ஒரு சுமாரான காட்சி மூலம் காதல் பிரிவதை இன்டர்வல் காட்சியாக வைப்பதை தவிர்த்து இருக்கலாம்….
இப்படி முதல் பகுதியில் பல ‘லாம்’களை சொல்ல வைக்கிறது என்றாலும் , கலகல காமெடியால் ச’லாம்’ போட வைக்கிறது இரண்டாம் பகுதி.
இந்த காமெடிக்கான அஸ்திவாரத்தை போடுவதை மட்டுமே திரைக்கதையில் வேலையாக படத்தின் முதல் பகுதியில் செய்து இருக்கிறார்கள்.
இப்படியாக ரசிகர்களை சிரிக்கும் மன நிலைக்கு டியூன் செய்த விசயத்தில் வெற்றி பெற்று இருக்கிறது ஆனந்– விஜய் ஆண்டனி டீம்
இந்தப் படம் இயல்பான வெற்றியை அடைந்தால் அது திரைக்கதையில் உள்ள காமெடிக்கு கிடைத்த வெற்றி என்று பொருள் .
ஓஹோ என்று வெற்றி பெற்றால், விஜய் ஆண்டனி இனி என்ன செய்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற அளவுக்கு அவர் ஒரு ஸ்டார் நடிகராகவும் உயர்ந்து விட்டார் என்று பொருள் .
என்ன நடக்கிறது என்று பார்ப்போம் .
இந்தியா பாகிஸ்தான் …. ‘வாகா’ன காமெடி !
மகுடம் சூடும் கலைஞர்கள்
————————————————–
விஜய் ஆண்டனி, ஆனந், தீனா தேவராஜன் , ஓம் .