பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராமன் தயாரிக்க, ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன், விஜய லக்ஷ்மி, சார்லி, அழகம்பெருமாள் நடிப்பில் அஹமது இயக்கி, வெளிவந்திருக்கும் படம்.
போலீஸ் அதிகாரி நண்பர்கள் இருவரில், மனைவி (விஜயலட்சுமி) குழந்தை என்று இருக்கும் ஒருவனின் ( நரேன்) தங்கை ( நயன்தாரா), தனது அண்ணனின் நண்பனை (ஜெயம்ரவி) விரும்புகிறாள். எப்போது வேண்டுமானாலும் உயிருக்கு ஆபத்துள்ள நிலையில் தனக்கு திருமணமே வேண்டாம் என்பது அவன் எண்ணம்.
மாநகரில் ஒரு சைக்கோ (ராகுல் ) அடுத்தடுத்து இளம் பெண்களைக் கடத்தி சித்திரவதை செய்து கொலைகள் செய்கிறான். அவனைப் பிடிக்கும் முயற்சியில் திருமணம் ஆன நண்பன் சைக்கோவால் கொல்லப்படுகிறான் .
அது மட்டுமின்றி சைக்கோவாக இதுவரை அறியப்பட்ட நபர் மட்டுமே எல்லா கொலைகளையும் செய்யவில்லை. காப்பி கேட் பாணியில் அவன் பாணியில் கொலை செய்யும் இன்னொரு சைக்கோவும் இருப்பது தெரிய வர , நடந்தது என்ன என்பதே படம்.
ஒளிப்பதிவாளர் ஹரி கே வேதாந்தின் இருள் ஒளிப் பயன்பாடு சிறப்பாக அமைந்த ஒளிப்பதிவு ஒரு சைக்கோ கில்லர் கதைக்கு அவ்வளவு அருமையாக பொருந்தி இருக்கிறது. . ஜாக்கியின் கலை இயக்கமும் அப்படியே அட்டகாசம் . யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மட்டும் பரவாயில்லை ரகம்.
ஜெயம் ரவி, நயன்தாரா , சார்லி, விஜயலட்சுமி பண்பட்ட நடிப்பைத் தந்துள்ளனர் . முதல் சைக்கோ ராகுல் போஸ் மிரட்டுகிறார் . இரண்டாவது சைக்கோ வினோத் கிஷன் ஓவர் ஆக்டிங் .
இயக்குனர் அஹமது மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் . எனினும் இளம்பெண்கள் கொல்லப்படுவதையும் சித்திரவதை செய்யப்படுவதையும் கொடூரமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் . . மிக பலவீனமான திரைக்கதை. குடும்பம் செண்டிமெண்ட் காதல் என்று சில காட்சிகள் தன் பாட்டுக்கு வருகின்றன .
அப்பாவிகள் நல்லவர்கள் இவ்வளவு கொடூரங்களுக்கு ஆளாவதை விலாவாரியாகக் காட்டியவர்கள் அதே போல குற்றவாளிகளை நாயகன் கிழித்துப் போடுவதையும் காட்டினாலாவது குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் ஏற்படும் . அதுவும் இல்லை .
இரண்டு சைக்கொக்களையும் கம்பீரமாகவும் ஒரு செகண்டிலும் முடித்து விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறார் இயக்குனர்