இறுகப்பற்று @ விமர்சனம்

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு, பிரகாஷ் பாபு, தங்க பிரபாகரன் தயாரிக்க, விக்ரம் பிரபு , ஷ்ரத்தா ஸ்ரீநாத் , விதார்த் , அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் நடிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கி இருக்கும் படம். 

காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட பெண் ( சானியா ஐயப்பன்) தன்னை விட அறிவாளியாக இருப்பது  பொறுக்க முடியாமல் அவளது சிறு சிறு குறைகளைப் பெரிதுபடுத்தி நோகடித்து , அவளை விவாகரத்துவரை கொண்டு போய் நிறுத்தும் ஒரு கணவன் ( ஸ்ரீ)….
 
சிறுவயது முதல் தனக்கு பிடித்ததை – சிறப்பாக வருவதை செய்ய விடாமல் அவர்களுக்குப் பிடித்ததை மட்டும் செய்ய வைத்த தனது அப்பாவின் வழியில் மனைவியும் (அபர்னதி)  செயல்பட,  
 
மனம் வெறுத்துப் போன  நிலையில்  மனைவியின்   குண்டான தோற்றத்தையும்  சாப்பாட்டுப் பிரியத்தையும்  காரணம் காட்டி-  ,பிடிக்லைன்னா பிரிஞ்சிடனும் என்று அலுவலக தோழி ஒருவர் சொன்னதை வைத்து –  ஒரு கைக் குழந்தை உள்ள நிலையில்-  விவாகரத்து கோரும் ஒரு கணவன் (விதார்த்)…
 
இது போன்ற பலருக்கும் ஆலோசனை தரும் மனநல ஆலோசகர் ஒருவருக்கு ( ஷ்ரத்தா ஸ்ரீநாத்) , அவர் சொல்வதை எல்லாம் செய்யும்  கணவன்  (விக்ரம் பிரபு)
 
ஒரு நிலையில் மனநல ஆலோசகருக்கும் அவரது கணவனுக்கும் பிணக்கு வர ,  மூன்று ஜோடிகளின் நிலைமை என்ன ஆனது என்பதே இந்தப் படம். 
 
படப் பெயர் அழகுத் தமிழின் அற்புதம் . வழக்கமாக பல பல தமிழ்ப் படங்களின் தலைப்பில் இருக்கு ஒற்றெழுத்து பிழை . இல்லாமல் இப்படி ஒரு பேரை வைப்பதே  நிஜமான பொட்டன்ஷியல்தான். படத்தின் தயாரிப்புத் தரமும் சிறப்பு .
 
பொறுமையின்மை,  பக்குவமின்மை, விட்டுக் கொடுக்கும் தன்மையின்மை, பொதுச் சமூகம் கொம்பு சீவி விடும்  ஈகோ  இவற்றால் தன் இணையைக் குத்தி தன்னைக் கிழித்துக் கொள்ளும் இன்றைய சில பல   தம்பதிகளுக்கு மிகத் தேவையான கதை இந்தக் கதை . அதற்கு இன்னொரு பாராட்டு . வசனங்கள் கவனிக்க வைக்கின்றன . படைப்பாளி யுவராஜ் தயாளனுக்கு பாராட்டுகள் . 
 
விதார்த் , அபர்னதி ஜோடியின் கதையும் காரணமும் மூன்றிலும் பெஸ்ட் . 
 
 அட்டகாசப்படுத்தி இருக்கிறார் அபர்னதி. படம் சொல்லும் குணாதிசயங்களுக்கு உரிய நிஜமான ஒரு மனைவியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அந்தக் குரலும்  அவருக்கு பெரும்பலம் .. படத்துக்காக உடம்பைக் கூட்டிக் குறைத்து  அசத்தி இருக்கிறார். பாராட்டுக்குரிய உழைப்பு மற்றும் நடிப்பு . ஹெய்ல் அபர்னதி. 
 
கதாபாத்திரத்துக்கும் அப்பாற்பட்டு தனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் ? என்று புரியாமல் உடைந்து சில்லு சில்லாக நொறுங்கி உருகிக் கரைந்து கண்ணீராக ஓடும் இடத்தில்,  நடிப்பின்  சானியா மிர்சா ஆகிறார் சானியா அய்யப்பன்.   குழம்பிக் குலையும் அந்த முகம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. 
 
சில நிமிடங்கள் நீளும் ஒரே ஷாட்டின் தன் மொத்த வாழ்க்கைக் கதையைக் கொட்டுமிடத்தில் விதார்த் வீரியம் காட்டுகிறார் . 
 
உண்மையில் இந்த சனியன் குடும்பம் நடத்துதா இல்லை குடும்ப ஆபீஸ் நடத்துதா என்று படம் பார்ப்பபவர்கள் கொந்தளிக்கும் அளவுக்கு கதாபாத்திரத்துக்கு தேவையான  அலுவல் தன்மையை சிறப்பாகக் கொடுத்து கேரக்டரை உணர வைக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதனாலேயே விக்ரம் பிரபு கொந்தளிக்கும் போது  அவரும் சிறப்பாக நடிக்கும் உணர்வு நமக்கு வருகிறது . 
 
ஸ்ரீ … விழுதும் இல்லை. பழுதும் இல்லை . 
 
நாயகன் படத்தின் தென்பாண்டிச் சீமையிலே பாட்டின் துவக்கத்தில் வரும் இளையராஜாவின் ஆலாபனையை ( ‘ராஜா ஹம்மிங் செய்ய  ஆரம்பிக்கும்போது காரை ஸ்டார்ட் செய்தான் . பாடல் வரிகள் வருவதற்கும் ஆபீஸ் வந்து சேர்ந்தான்’ என்று பட்டுக்கோட்டை பிரபாகர் கூட ஒரு நாவலில் எழுதி இருப்பாரே ) ஸ்பூஃப் செய்தது போல ஒரு தீம் மியூசிக்கை பெண் குரல் ஆலாபனையில் ஜஸ்டின் பிரபாகரன் போட்டு இருக்கிறார் . அது சில இடங்களில் உணர்வுப் பூர்வமாகவும் சில இடங்களில் கோமாளித்தனமாகவும் இருக்கிறது . மற்றபடி பின்னணி இசை ஒகே . 
 
கோகுல் பினாய் ஒளிப்பதிவு ,   படத் தொகுப்பு சக்தி வெங்கட் ராஜின் கலை இயக்கம் யாவும்…. குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா 
 
இவ்வளவு செய்தவர்கள் திரைக்கதையில்தான் பெரிதாகக் கோட்டை விட்டு இருக்கிறார்கள். 
 
தம்பதிகளுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளைத் தீர்க்கும் மன நல ஆலோசகருகே  கணவனோடு கருத்து வேற்றுமை என்பது  நாலு வரியில் கேட்க நன்றாக இருக்கலாம். நாவலாக சரியாக எழுதினால்  படிக்கக் கூட நன்றாக இருக்கலாம் .ஆனால் ஒரு  திரைக்கதையில் அதை விட சிறுபிள்ளைத்தனம் அரைவேக்காட்டுத்தனம் வேறு ஏதும் இல்லை.  அதுவும் இந்தப் படத்தில் அது அறைவேக்காட்டுத்தனத்தின் உச்சம் 
 
கணவன் சம்மந்தப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்கள் – பிறந்த நாள் , கல்யாண நாள் உட்பட — ஏதோ ஓரிரு சமயம்-  வேலை பளுவில் மனைவி  மறந்து விடுவது என்பது குற்றமில்லை. vice versa.
 
ஆனால் என்னதான் வேலை , பரபரப்பு இருந்தாலும் கணவனுக்கு பிடித்ததை சமைத்துத் தருவது , வெளியே அழைத்துப் போவது, கைகால் அமுக்கி விடுவது . முதுகு பிடித்து விடுவது, சுளுக்கு எடுத்து விடுவது .. இது  எல்லாவற்றையும் ஒரு செல்போன் செயலி சொல்லும் நாளில் சொல்லும் நேரத்தில்தான் ஒரு மனைவி செய்வார் என்பதை ஞாபக மறதியின் பெயரால் நியாயப்படுத்துவது என்ன  நியாயம்? சுய உணர்வே இல்லாத நபரா அந்த மனைவி? vice versa.
 
உண்மையில் இப்படி ஒரு கேரக்டருக்கு குடும்ப நல ஆலோசகராக இருக்கும் அருகதையே இல்லை.  
 
அதற்குப் பதில் கணவனிடம் , ” டேய்..நான் ஒரு செல்போன் செயலியை டெஸ்ட் பண்றேன். அதை பக்கத்து வீட்டுக்கரன்கிட்டயா டெஸ்ட் பண்ண முடியும்? கட்டுன புருஷன் உன்கிட்டதான டெஸ்ட் பண்ண முடியும்? இந்த செயலி வருவதற்கு முன்பே நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோமே . அப்பவும் நான் உன்மேல அன்பா அக்கறையா தானே இருந்தேன்? அது புரியலையா உனக்கு?” என்றுதானே அவர் கேட்டு இருக்க வேண்டும். அப்போதானே அவர் நல்ல மனைவி மற்றும் நல்ல குடும்பநல ஆலோசகர் ?
 
தவிர அந்த மனநல ஆலோசகர்  மற்றவர்களுக்கு சொல்லும் ஆலோசனைகளில் சில ‘அடடே’ ரகம் என்றால் சில ‘அடடா….” ரகமாகவும் இருக்கிறது 
 
எனினும் கூட மற்றவர்களின் பிரச்னைக்கு மன நல ஆலோசகர் ஆலோசனை சொல்லும் வரை சரியாகப் போய்க் கொண்டு இருந்த படம் ,அவர் கணவனுடனேயே அவருக்கு பிரச்னை என்று ஆரம்பித்த போதே  தலைகுப்புற விழுந்து விட்டது . 
 
ஒரு பேச்சுக்கு … இல்லை இல்லை அப்படி ஒரு விஷயம் வேண்டும்  என்றால் … 
 
ஆலோசனைக்கு வந்த ஏதோ ஒரு குடும்பத்தின் பிரச்னை , அதில் வரும் ஒரு புத்திசாலியான மோசமான ஆண் பற்றிய  விஷயங்கள் மன நல ஆலோசகரையே அசைத்துப் பார்க்க , இப்போது அவருக்கு அவர் கணவன் மீதே சந்தேகம் வந்து விட்டது என்று திரைக்கதை அமைத்து அதற்கு ஒரு  தீர்வு, அதன் மூலம் ஆலோசனைக்கு வந்த குடும்பத்தின் பிரச்னைக்கு தீர்வு….
 
 என்று ஒரு  ரொம்ப சுமாரான திரைக்கதையாவது  எழுதி இருக்க வேண்டும் . அதுவும் இல்லை . 
 
உண்மையில் இந்தப் படத்தில் அபர்னதி – விதார்த் நடித்து இருக்கும் கதைப்போக்கை மட்டும்  எடுத்து தனியே ஒரு படம் எடுத்து  இருக்கலாம். கொஞ்சம் சின்சியராக எழுதினால் ஒரு  திரையரங்க வணிக வெற்றிப் படத்துக்கான எல்லா கூறுகளும் அதில் இருக்கின்றன . 
 
சானியா ஐயப்பன் – ஸ்ரீ நடித்து இருக்கும் கதைப்போக்கை வைத்து அதிகம் அலட்டிக் கொள்ளாமலே ஒரு சிறப்பான ஓ டி டி ஒரிஜினல் எடுக்கலாம் . 
 
அதை விட்டு மூன்று கதைகளை வைத்து , இந்தப் படத்தை முட்டுச் சந்தில் நிறுத்தி விட்டார்கள். 
 
மொத்தத்தில் .. 
 
இறுகப் பற்றிக் கொண்டு  இருக்கிறார்கள்… இருதரப்பிலும்,  எண்ணெய் வழியும் கைகளால் . 
 
பிடி விலகாமல் இருக்குமா? 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *