“பத்தாவது ஃபெயில் ஆனவர்களும் சேரலாம் ;படிக்கும் போதே வேலை ; மாதம் பத்தாயிரம் சம்பளம் ” என்ற கவர்ச்சியான வாசகம் , தொடர் விளம்பரங்கள், இவற்றின் மூலம் பிரபலமான நிறுவனம் சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் .
2009 ஆம் ஆண்டு தாம்பரத்தில் தொடங்கப்பட்டு, அடுத்து தாம்பரம், தி.நகர், பெரம்பூர், அண்ணா சாலை , ஓ.எம்.ஆர். சாலை ஆகிய இடங்களில் கிளைகளைப் பரப்பி இருக்கும் நிறுவனம் .
”உலக மயமாக்கல் காரணமாக ஹோட்டல் தொழில் பெருகி விட்ட நிலையில் அதன் தேவையை முன்னிறுத்தி துவங்கப்பட்டு….
ஹோட்டல் மேனேஜ்மென்ட் பணிக்கு தொழில் நுட்ப அறிவை விட , பயிற்சி மூலம் கிடைக்கும் அறிவே முக்கியம் என்பதால் பத்தாவது பெயில் ஆனவர்களையும் சேர்த்துக் கொண்டு …
இதே நோக்கம் காரணமாக கிராமப்புற பின் தங்கிய மாணவர்களுக்கு முக்கியத்துவம் தந்து …
எல்லோருக்கும் இந்த பயிற்சி நிறுவனம் போய்ச் சேர வேண்டியது கட்டாயம் என்பதால் அதிக விளம்பரங்கள் செய்து…
பயிற்சிக்காக உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி …
கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் என்றாலும் சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து….
நாங்கள் இயங்கி வருகிறோம்” என்பது இந்த நிறுவனம் தரும் சுய அறிமுகம் .
இந்த அமிர்தா நிறுவனத்துக்காக நடிகை ராதிகா நடித்த விளம்பரம் ஒன்று வெகு பிரபலம் . அதில் வரும் பாடல் கிட்டத்தட்ட பலரும் முணுமுணுக்கும் பாடலாகவே மாறி விட்டது.
இந்நிலையில் சென்னை அமிர்தாவின் ஓ.எம்.ஆர் . சாலை கிளையில் படித்த மாணவர் கார்த்திக் பிரபு என்பவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் .
அந்த மாணவரின் தந்தையான கண்ணன் . “என் மகன் இறக்கக் காரணம் அமிர்தா நிறுவனம்தான் . படிப்புக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்த நிறுவனம் உரிய வசதிகள் செய்து தரவில்லை . அவர்கள் வாக்குக் கொடுப்பது போல அவர்கள் நிறுவனத்தில் எந்த வசதியும் இல்லை .
உரிய கட்டிடங்கள் கூட இல்லை. அது மட்டுமல்ல. என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை . அது ஒரு கொலை. உண்மைகளை அமிர்தா மூடி மறைக்கிறது” என்பது உள்ளிட்ட பல காரணங்களைக் கூறி அமிர்தா நிறுவனத்தைக் குற்றம் சாட்டினார்.
தவறான நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் நடித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை ராதிகா கூட ஆளானார் . (சினேகா நடித்த விளம்பரம் கொஞ்சம் பழசு என்பதால் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை)
தனது தரப்பை சமூக ஊடகங்கள் மூலம் கண்ணன் முன் வைத்தார். கண்ணனும் ராம கிருஷ்ணன் இருவரும் அமிர்த நிறுவனத்தை குற்றம் சாட்டி, ஒரு வலை தள தொலைக்காட்சிக்கு பல தகவல்களைக் கூற, அவை எல்லாம் சமூக ஊடகங்கள் வழியே விரைவாகப் பரவின .
சென்னை அமிர்தா நிறுவனத்தின் அடையாளங்கள் , சின்னங்கள் மற்றும் விளம்பரப் படங்களை பயன்படுத்தி நேரடியாகக் குற்றம் சாட்டின அந்த வீடியோக்கள் .
இதனால் தங்கள் நிறுவனம் மிகவும் பாதிக்கப்படுவதாக அமிர்தா நிறுவனம் கோர்ட்டுக்குப் போனது.
நிறுவனத்தின் புகாரை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் , ‘இனி சம்மந்தப்பட்ட நபர்கள் யாரும் மேற்சொன்ன தற்கொலை விசயத்தில் சென்னை அமிர்தா நிறுவனத்தைக் குற்றம் சாட்டி செய்தி வெளியிடக் கூடாது என்று கட்டளை இட்டிருக்கிறது .
அது மட்டும் அல்ல இந்த தீர்ப்பின்படி, மேற்கண்ட நபர்கள் மட்டும் அல்லாது, அமிர்தா நிறுவனத்தைக் குற்றம் சாட்டி இந்த நபர்கள் வெளியிடும் வீடியோக்கள் அல்லது செய்திகளை தெரிந்தோ தெரியாமலோ வேறு யார் பகிர்ந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சென்னை அமிர்தா நிறுவனத்தின் சி.ஈ.ஓ வான பூமிநாதன் இது குறித்துப் பேசும் போது
” தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில திரைப்படம் சம்மந்தப்பட்ட வழக்குகளில்தான் தவறான செய்தியை பரப்பும் முன் பின் அறியாதவர்களும் தண்டனைக்குள்ளாவார்கள் என்று அறிவிக்கப்பட்டது . சினிமாவுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் இந்த வகையில் தீர்ப்புப் பெற்று இருக்கும் முதல் வழக்கு இதுதான் .
அதற்குக் காரணம் உண்டு. இறந்த மாணவர் கார்த்திக் பிரபு தற்கொலை செய்து கொண்டது எங்கள் நிறுவனக் கட்டிடத்தில் அல்ல. அது ஒரு தனியார் விடுதி. எது எங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்டது அல்ல.
இன்னொரு பக்கம், நாங்கள் ஆரம்பம் முதலே போலீசுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறோம்.
மாணவர் இறந்த நிலையில் அவரது தந்தை கண்ணன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க , கல்விக் கடனாக அவர்கள் வாங்கி இருந்த 65 ஆயிரம் ரூபாய்க்கான தொகையை மனிதாபிமான அடிப்படையில் காசோலையாகக் கொடுத்தோம். இப்படி கல்விக் கட்டணத்தை திருப்பித் தந்தது மட்டுமின்றி இறுதிச் சடங்குக்கான பணமும் வழங்கப்பட்டது.
இதன் பிறகும் சர்வதேச மனித உரிமை அமைப்பு என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் ராம கிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து கொண்டு கண்ணன் எங்கள் நிறுவனம் மீது குற்றம் சாட்டியதால்தான் கோர்ட்டுக்குப் போனோம்.
நாங்கள் விளம்பரத்தில் குறிப்பிடும் எல்லா கட்டமைப்புகளும் எங்களிடம் சிறப்பாக உள்ளன ” என்கிறார் .
இந்த தீர்ப்புக்குப் பிறகு ராதிகாவும் இந்த விசயத்தில் இயல்பு நிலைக்கு வந்திருக்கிறாராம்.