வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க, வருண், ராஹே, டிடி , கிருஷ்ணா, நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருக்கும் படம்
வெளிநாடு வாழ் பெண் ஒருத்திக்கும் ( ராஹே) பணத்துக்காக கொலைகள் செய்யும் ஹைடெக் இளைஞன் ஒருவனுக்கும் ( வருண்) கண்டதும் வரும் காதல், படுக்கை வரை போகிறது .
ஒரு நிலையில் அவன் தனது கொலைத் தொழில் பற்றிச் சொல்ல , அவள் அவனைப் பிரிகிறாள்.
அவனுக்கு பணிகள் தரும் முகமையின் ஒருங்கிணைப்பாளர் பெண்மணி (டிடி ) அந்தக் காதலை மறந்து விடு என்கிறாள் .
உலகளாவிய மாபியா கும்பல் தலைவன் ஒருவனுக்கு எதிராக அந்தக் காதலி லண்டன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல இருக்கும் நிலையில் அவளைக் கொல்ல, மாஃபியா தலைவனின் ஆட்கள் தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்
இந்த நிலையில் அந்த ஒருங்கிணைப்பாளர் பெண்மணியிடம், அவளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பணி ஒப்பந்தம் வருகிறது
அந்தப் பெண் அதை காதலனுக்கே கொடுக்கிறாள் . காதலியும் வேறு வழி இன்றி ஏற்கிறாள் . அவனால் அவளைக் காப்பாற்ற முடிந்ததா? அந்தக் காதலியின் புரிதல் என்ன ஆனது என்பதுதான் படம்.
மீண்டும் ஓர் அழகான தமிழ்ப் பெயரோடு கூடிய படம். பாராட்டுகள் கவுதம் வாசுதேவ் .
நவ நாகரீகப் பெண்ணாக ராஹே உடல் மொழிகளில் கவர்கிறார். அவருக்கான பின்னணிக் குரலும் எலைட்.
ஆங்கிலப் படங்களில் பார்க்க முடிந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் மேட்டிமையான முக பாவங்களோடு அழகாக நடித்து இருக்கிறார் டிடி . குட்.
அதே போல கொஞ்ச நேரமே வந்தாலும் கிருஷ்ணா நன்றாக நடித்து இருக்கிறார் .
சண்டைக் காட்சிகள் சிறப்பு. சண்டைக் காட்சிகளில் மட்டுமல்ல எல்லா காட்சிகளிலும் தானும் உருண்டு புரண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர்.
ஒரு இளைஞன் தனக்குப் பிடித்த இளம்பெண்ணை முதன் முதலில் சந்தித்துப் பேசும்போது, அவன் பார்வை அவள் மேல் எங்கே எப்படி எல்லாம் நகரும்? அந்தப் பாய்ன்ட் ஆஃப் வியூவில் நாயகி முகத்தில் கேமரா நகரும் ஷாட்களில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிகிறார் .
வழக்கம் போல வண்ணமயம், இருள் ஒளிப் பயன்பாடு , என்று அவருக்கே உரிய மேக்கிங் சிறக்கிறது . எல்லோரிடமும் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார்
அடிப்படையில் ஒரு திரையரங்கு வணிகப் படத்துக்கான கதைதான் இது . ஆனால் இடைவேளைக்குப் பிறகு என்னென்னமோ நினைத்து எழுதி எடுத்து சுத்தி விட்டு படம் பார்ப்பவகளையும் சுத்தலில் விடுகிறார்
கிளைமாக்ஸ் எல்லாம் குரங்கு கை ஃபிலிம் மாலை போல, சின்னா பின்னமாகிறது .
அது என்னவோ தெரியவில்லை, இப்போது எல்லாம் பல தமிழ் டைரக்டர்களுக்கு இரண்டாம் பகுதியை எடுப்பதில் அவ்வளவு அநியாயத் தடுமாற்றம்
மலையாளப் பட இயக்குனர்கள் எல்லாம் எப்படி எடுக்கிறாங்க. பாத்துக் கத்துக்குங்க மேனன் .
ஜோஷ்வா : கண் இருக்கிறது; ஆனால் இமையே இல்லை