செலிபிரைட் புரடக்ஷன்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரீஷ் பெராடி, நிஹரிகா, வியான் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ராஜ் தேவ் இயக்கி இருக்கும் படம்.
ஒரு பெண்ணை (பிரியங்கா திம்மேஷ்) வீடு புகுந்து கொலை செய்ய முயல்கிறது ஓர் உருவம். தப்பி வெளியே வரும் அவளை ஒரு கார் மோதிக் கொலை செய்ய முயல்கிறது . உயிர் தப்பும் அவளை, பணத்துக்குக் கொலை செய்யும் ஒருவன் (ஸ்ரீகாந்த்) காப்பாற்றுகிறான் .
விபத்தில் அவளுக்கு பழைய நினைவுகள் போய்விட்ட நிலையில் அவளை மனைவி என்றும் சொல்லும் அந்தக் கொலைகாரனுடனேயே அவள் இருக்கிறாள் . அந்த வீட்டில் உள்ள ஓர் ஆல்பத்தைப் பார்த்து அவனை தனது சிறுவயது நண்பன் மற்றும் முதல் காதல் நாயகன் என்று உணர்கிறாள் அவள்.

இந்த நிலையில் மனைவியைப் பல நாட்களாகக் காணவில்லை என்று ஒருவன் (வியான்) புகார் தர , அவன் மனைவிதான் கொலைகாரனுடன் வாழ்பவள் என்பதைக் கண்டு பிடிக்கிறார் இன்ஸ்பெக்டர் (ஹரீஷ் பெராடி). நடந்தது என்ன என்பதே படம்.
திரில்லாக ஆரம்பிக்கிறது படம். நாயகி பிரியங்கா திம்மேஷ் கதாபாத்திரத்துக்கு கனம் சேர்க்கிறார் . இடைவேளை வரை ஈர்க்கும்படி இருக்கும் படம் பிறகு மெல்ல மெல்ல வழக்கமான ரூட்டில் பயணித்து ஒரு நிலையில் படுத்தே விட்டானய்யா என்ற நிலைக்கு ஆளாகிறது .
நடிகைகளை நன்றாக கிளாமராக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் .

ஜுபின் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது
“செம்பரப்பாக்கம் ஏறி அளவுக்கு தண்ணி குடிக்க ஆசை இருக்கு . சொம்புல கொஞ்சம் கொடுத்துப்புட்டு சும்மா போனா என்ன கொழுப்பு?” போன்ற வரிகளால் ‘அட..’ போட வைக்கிறார் பாடலாசிரியர் விவேகா.
லாஜிக் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்தப் பாடலை கில்மாவாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் .
பாடலிலும் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார் நிஹாரிகா

கிளைமாக்ஸ் எளிமை ஆனால் அழகு
பெரிதாக சங்கடமின்றி முத்தம் தரலாம் .