காக்கி சட்டை @ விமர்சனம்

kakki 2

தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் வெளியிட,  சிவ கார்த்திகேயன் , இளைய திலகம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில்,  எதிர் நீச்சல் படத்தின் மூலம் இதயங்களை கவர்ந்த இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கும் படம் காக்கிச் சட்டை.

விறைப்பு எப்படி ? பார்க்கலாம் .

கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் பணிபுரியும் சாதாரண கான்ஸ்டபிளான நாயகனுக்கு (சிவகார்த்திகேயன் ) , சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக வந்து,  குற்றவாளிகளை நாடு ரோட்டில் பந்தாடி , பொது மக்கள் மத்தியில் ஹீரோவாக  வலம் வர ஆசை. அலுவலகத்தில் எல்லோரும் அவனை சின்ன பையன் போல நடத்தினாலும் , தடயம் தேடுதல், விசாரணை போன்ற பணிகளில் தனது புத்திசாலித்தனத்தால் பல குற்றவாளிகளை கண்டு பிடித்து , இன்ஸ்பெக்டரிடம் (பிரபு)  பாராட்டு வாங்கவும் தவறுவது இல்லை அவன் .

ஆனால் நகை திருட்டு போன்ற விசயங்களில்,  அப்படி அவனது புத்திசாலித்தனத்தால் மீட்கப்படும் நகைகள் யாவும் அதை இழந்த மக்களுக்கு போவது இல்லை. அவற்றில் பெரும்பகுதியை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் இன்ஸ்பெக்டர் , சொற்ப நகையை மட்டுமே பாதிக்கப்பட்ட சிலருக்கு அன் அஃபிஷியலாக கொடுக்கிறார் .

இந்த அநியாயத்துக்கு எதிராக  இவன் கொந்தளிக்க, மேலதிகாரிகளின் கட்டளையை மீற முடியாத நிலையை கொதிப்புடன் கூறும் இன்ஸ்பெகடர் , ‘எல்லோரும் திரும்பிப் பார்க்கிற மாதிரி ஒரு கேஸ் பிடிச்சுட்டு வா. நியாயமான போலீஸ்னா என்னன்னு எல்லாருக்கும் காட்டுவோம் ” என்கிறார்.

 சமூக சேவகராக அறியப்படும் ஒரு பெரிய மனிதர் நடத்தும் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலி (ஸ்ரீ திவ்யா) மீது நாயகனுக்கு காதல் வருகிறது.

வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்கு வருகிற,  ஆள் பலம் இல்லாத ஏழை சிறுவர்களை குறிவைத்து விபத்துக்கு ஆளாக்கி , சிகிச்சை என்ற பெயரில் கார்பன் மோனாக்சைடு (CO) செலுத்தி மூளைச் சாவு அடைய வைத்து உடல் உறுப்புகளை விற்கும் கொடிய வியாபாரம் , நாயகி பணி புரியும் மருத்துவமனையில் நடப்பதும் , அதில் பெரும் பணக்காரர்கள் ,    கொடூர ரவுடிகள் , படு பயங்கர தாதாக்கள் , அரசியல்வாதிகள் , ஆள்பவர்கள் , அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு கொடுக்கும் உயர் அதிகாரிகள் என்று தகர்க்க முடியாத பெரும்பலம் கொண்ட பலருக்கும் பங்கு இருப்பதும் அடுத்தடுத்து தெரிய வருகிறது .

அது பற்றி இன்ஸ்பெக்டரிடம் நாயகன் சொல்ல, விசாரணை துவங்கிய உடனே இன்ஸ்பெக்டர் வெடிகுண்டு வைத்து தகர்த்து எரிக்கப்படுகிறார் .

மேற்கொண்டு உடல் உறுப்புகளை திருதுவதற்காக  பல அப்பாவி சிறுவர்கள் மீது அந்த கொடிய கும்பல் குறி வைத்து ஒவ்வொருவரையும் தூக்க, அதைத் தடுக்க நினைக்கும் நாயகனின் காதலி  , அம்மா  , தங்கை என்று பலருக்கும் உயிராபத்து வர, எல்லாவற்றையும் சமாளித்து நாயகன் எப்படி குடும்பத்தினரையும் அப்பாவி சிறுவர்களையும் காப்பாற்றுகிறான் என்பதே, இந்த  காக்கி சட்டை .

kakki 1

பழகிய, சின்ன சின்ன காட்சிகளைக் கூட படமாக்கிய விதத்தில் மனம் கவர்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். எந்த பிசிறோ , தவறோ வராதபடி சிவா கார்த்திகேயனை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக  மாற்றி விட்டார் . வெரிகுட் .

உறுப்புகள் திருடப்படும் விதத்தை  நாயகன் நாயகி இருவரும் உணரும் காட்சிகளை சொன்ன விதம் அருமை . உதாரணமாக, உறுப்பு திருட்டு சந்தேகம் பற்றி ஆரம்பத்தில் அடித்துக் கொள்ளும் இருவரும் ஒரு நிலையில் “நீ சொன்னதுதான் சரி … இல்லல்ல நீ சொன்னதுதான் சரி …’ என்று கூறி , அதன் வழியே மொத்த நெட் ஒர்க்கையும் உணரும் விதம் .

ஆக்ஷன் , காமெடி இரண்டு வகையிலும் கலக்குகிறார் சிவா. போலீஸ் இன்ஸ்பெக்டர் கெட்டப், செட்டப் , உடல் பொருத்தம் , நடை உடை பாவனைகள், பாடல் காட்சிகளில் ஸ்மார்ட் ஹீரோ அவதாரம் எல்லாமே அருமை .

ஸ்ரீ திவ்யா வழக்கம் போல அழகாக வருகிறார் . பல் வரிசை தெரிய சிரிக்கிறார் . லேசாக நடிக்கிறார் . இந்தப் படத்துக்கென்று எக்ஸ்ட்ராவாக  கும்மாங்குத்து ஆட்டமும் ஆடுகிறார் .

kakki 4

பிரபு சிம்ப்ளி சூப்பர்ப் .

வில்லன் விஜய் ராஸ் மிரட்டுகிறார் . ஒரு செண்டிமெண்ட்டான கேரக்டரில்,  குறையில்லாத ஈ. ராமதாஸ் !

படத்தில் ஒரு பத்துப் பதினைந்து இடங்களில் காமெடி வெடி பிரம்மாதமாக வெடிக்கிறது . இந்த ஏரியாவில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக மயில்சாமி , அடுத்து இமான் அண்ணாச்சி , அடுத்து மனோபாலா ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் விட , போலீஸ்காரனிடமே லஞ்சம் கேட்கும் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் காமெடி அதகளம் . சபாஷ் டைரக்டர் துரை செந்தில்குமார் மற்றும் வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் !

அனிருத் இசையில் பாடல்கள் சுமார் ரகமே!  படம் முழுக்கவே சிறப்பாக பங்களிப்பு செய்திருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவு, நார்வே லொக்கேஷன்களில்  வெகு சிறப்பு .

இரண்டாம் பகுதியில் சில காட்சிகள் விஜய் டி வி லொள்ளுசபா பார்க்கிற மாதிரியே இருக்கு.

சிவ கார்த்திகேயனின் அம்மாவாக வரும் கல்பனா  மலையாள வாசனையில் பேசி எரிச்சல் ஊட்டுகிறார் . ஏம்பா ! உங்களுக்கு வேற ஆர்ட்டிஸ்டே கிடைக்கலையா ? ஒரு மலையாளப்படத்தில் ஒரு மலையாளப் பெண் கேரக்டருக்கு ஒரு தமிழ் நடிகை போய் தமிழ் வாசனையில் மலையாளம் பேசி நடித்து விட்டு வந்து விட முடியுமா? நீங்க எல்லாம் மட்டும் எதுலங்க விழறீங்க ?

மருத்துவ மனையின் முக்கிய ரகசியங்களை  ஒரு செவிலியான ஸ்ரீ திவ்யா,   சும்மா போகிற போக்கில் எடுத்து வருவது எல்லாம்…. லாஜிக் லக லக லக லக !

இரண்டாம் பகுதி பார்த்து அலுத்து சலித்து புளித்து நமத்துப் போன ஜெராக்ஸ் காப்பி . (கமிஷனர் மனம் மாற்றம் மட்டும் கொஞ்ச்ச்சம் விதி விலக்கு)

kakki 3வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் மீது அதீத இரக்கம் காட்டும் உணர்வை பிழியப் பிழிய சொல்கிறது இந்தப் படம் , அவர்கள் இங்கே வருவதில் நம்மவர்களுக்கு உள்ள பிரச்னைகள்…. பொது அமைதிக்கான குந்தகம், சட்ட ஒழுங்கு பிரச்னை , அதன் வழியே நுழையும் தீவிரவாதம் , கொலை கொள்ளைகள் , இதன் பின்னால் தமிழகத்தில் இயங்கும் வடக்கத்திய முதலாளிகளின் இனப் பாசம் , இதில் ஊடாடும் தமிழின விரோத அரசியல் இவற்றை எல்லாம் ரொம்ப சுலபமாக மறைக்கிறார்கள்  . கொடுமை !

இதில் ‘ தமிழனை மத்தவங்க காப்பாத்தாம இருக்கலாம் . ஆனால் தமிழன் எல்லாரையும் காப்பாத்துவான் ‘ என்று ஒரு வசனம் வேறு . போதும் .. போதும்! இந்த போதையிலேயே நிறைய பட்டுட்டோம் . நிறைய விட்டுட்டோம் .

அவ்வளவு கொடிய வில்லன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய எழுதிக் கொடுத்தவன் என்று சீன் சொல்வது எல்லாம்…. பெரிய கேரக்டர் அசாசினேஷன் !

அந்த காட்சியில் சிவ காரத்திகேயன் சும்மாவாச்சும் “சாகும்போது தனது உடல் உறுப்புகளை எல்லாம் தானம் பண்ண விரும்பறதா சொன்னாரு. ” என்று ஒரு வசனத்தோடு முடித்துக் கொண்டிருக்கலாம் .

அதில் கூட ஒரு படி மேலே போய் ” இவனோட கிட்னி , லிவர் இதை எல்லாம் கூட யாராவது தேவைப்படும் நோயாளிக்கு பொருத்துங்க . ஆனா இவன் இதயத்தையும் மூளையையும் மட்டும் எந்த  நோயாளிக்கும் பொருத்திடாதீங்க. அந்த நோயாளியும்  இவன் மாதிரி  கொடூரமானவனா ஆயிடப் போறார் ‘ என்று ஒரு  ஃபினிஷிங் டச் கொடுத்து இருக்கலாம் .

காக்கி சட்டை …. கஞ்சி கம்மி .

மகுடம் சூடும் கலைஞர்கள்
—————————————————-
சிவ கார்த்திகேயன், ‘இயக்குனர் ‘ துரை செந்தில்குமார், சுகுமார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →