விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து,மத்தேயு அருளானந்து ஆகியோர் தயாரிக்க, ஏகன், பிரிகிடா சகா, சத்யா தேவி, யோகி பாபு, ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவகுமார் , நவீன், ரியாஸ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி இருக்கும் படம்.
சிறுவன் செல்லத்துரையின் அம்மாவின் (ஐஸ்வர்யா தத்தா) கள்ளக்காதல் மிலிட்டரி அப்பாவுக்குத் (ரியாஸ்) தெரிய வர, இருவரையும் அப்பா கொல்ல முயல,
மகன் செல்லத்துரை, மகள் ஜெயசுதா ஆகியோரை விட்டு விட்டு, கள்ளக் காதலனுடன் ஓடிப் போகிறார் செல்லத்துரையின் அம்மா
மிலிட்டரி அப்பாவும் பிள்ளைகளைக் கொண்டு வந்து மாமியாரிடம் விட்டு விட்டுப் போய் விடுகிறான் .
ஊரில் கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ( யோகி பாபு) உதவி கிடைக்க, அங்கேயே வேலைக்கு சேர்ந்து தானும் வளர்ந்து (ஏகன்), தங்கையையும் வளர்த்தெடுத்து (சத்யாதேவி) படிக்க வைக்கிறான்.
ஊரில் பானைக் கடை வைத்திருக்கும் இளம் பெண் ( பிரிகிடா சகா) அவனை விரும்ப, அவனை கண்டு கொள்வதில்லை .
இந்த நிலையில் தங்கையிடம் அவளைக் காதலிக்கும் நபர், வீட்டுக்கே வந்து பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவனை அடித்து விரட்டி விட்டு தங்கையிடம் வந்து ” அம்மா மாதிரி நீயும் அவுசாரியாகப் போயிடாத” என்கிறான் செல்லத்துரை.
அதன் விளைவுகளும் சம்பவங்களுமே படம் .
எளிய இயல்பான கிராமத்துக் கதை .
பயத்தில் ஓடிப் போகையில் செல்லத்துரையின் அம்மா , சட்டென்று பிள்ளைகள் ஞாபகம் வந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்ப்பது, அதன் மூலமே அவர் பிள்ளைகளை நினைக்கிறார் என்று ஆடியன்சுக்கு உணர்த்துவது ,
ஊருக்குள் யாராக இருந்தாலும் அன்னியமாக எண்ணாமல் பெரியப்பா மாமா என்று உறவு முறை வைத்துக் கூப்பிடுவது
சிறு வயதில் அப்பா அடித்து முறுக்கிய கையில் வலி உடலில் ஒவ்வொரு இடத்திலும் தங்க, முக்கிய நிகழ்வுகளின் போது எல்லாம் செல்லத்துரை கைகளைப் பின்னால் கட்டிக் கொள்வது
போதுமானதாக இல்லாவிட்டாலும் எழுதப்பட்ட வசனங்களை செதுக்கிய வார்த்தைகளால் வெளிப்படுத்துவது என்று சீனு ராமசாமி பல இடங்களில் தெரிகிறார் .
இயல்பான கதாபாத்திரங்கள் , நடிகர்கள் .
ஏகன் கேரக்டருக்குப் பொருந்தி வருகிறார் .
தங்கையாக நடித்து இருக்கும் சத்யா தேவி கருப்பின் அழகை சொல்லும் தோற்றத்தோடு சிறப்பாக நடித்துள்ளார் .
காமெடி பாதி, செண்டிமெண்ட் பாதி என்று கவர்கிறார் யோகிபாபு .
உயர மாற்றுத் திறனாளி நபரின் கமெண்டுகள் சில பல இடங்களில் அதிரடிக் கலகல .
மிலிட்டரிகாரனாக வரும் ரியாஸ், சேட்டனாக வரும நவீன், நூலகராக வரும் ஆகியோர் பவா செல்லத்துரை கவனிக்க வைக்கிறார்கள்.
அசோக் ராஜின் ஒளிப்பதிவு, என் ஆர் ரகுநந்தன் இசை சரவண அபிராமனின் கலை இயக்கம் யாவும் சிறப்பு.
வைரமுத்து , கங்கை அமரன், பா. விஜய், ஏகாதசி ஆகியோரிடம் இருந்து சிறப்பான பாடல் வரிகள் .
திரைக்கதைதான் போதாமையில் தவிக்கிறது .
கடைசிக் காலத்தில் மீண்டும் வரும் அப்பா இன்னொரு கல்யாணத்தின் மூலம் பிறந்த சிறுமியைக் காட்டி , ” நான் சில நாளைக்கு மேல் தாங்க மாட்டேன் னு சொல்லிட்டாங்க. இந்த புள்ளையை எப்படி கரையேத்துவதுன்னு தெரியல” என்று சொல்லும்போது நீ செத்துரு . அதையும் என் தங்கச்சியா பாத்துக்கறேன்” என்று செல்லத்துரை சொல்லி இருந்தால் அது சரவெடி திருப்பம் .
அதை விட்டுவிட்டு அடித்து நொறுக்கி அம்போ என விட்டு விட்டுப் போன அப்பாவுக்கு, ஏகன் கிட்னி தருவது எல்லாம் யதார்த்தமின்மை . பீம்சிங், கே எஸ் கோபாலகிருஷ்ணன் எல்லாம் பார்த்தால் , ” நாங்க கூட இப்படி எல்லாம் யோசிக்கலையேப்பா… ” என்று அழுது விடுவார்கள்.
எதிர்பாராத திருப்பங்களுடன் போவதுதான் வாழ்க்கை என்பது போன்ற டைட்டிலோடு துவங்கும் படத்தில் செல்லத்துரையின் அம்மா உண்மையில் கெட்டவள் இல்லை என்ற மாதிரியான ஒரு திருப்பம் இருந்திருந்தால் இது தியேட்டரிக்கல் படம் . (அப்படி சொல்லி நம்ப வைக்கும்படியான சாத்தியக் கூறுகளும் கேரக்டர்களிடம் இருக்கின்றன. ) ஆனால் அவார்டுக்கு அனுப்பியே சம்பாதித்துக் கொள்ளலாம் என்று படக் குழு முடிவு செய்திருக்கக் கூடும் . எனவே கவலைப்படவில்லை .
பலவீனமான திரைக்கதையால் நியூகேசில் நோய் வந்த பண்ணைக் கோழி மாதிரி முடங்கி விட்டது கோழிப்பண்ணை செல்லத்துரை.