கடம்பன் @ விமர்சனம்

kada 4

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் பி சவுத்ரி, தி ஷோ பீப்புள் சார்பில் நடிகர் ஆர்யா இணைந்து தயாரிக்க,

ஆர்யா, கேத்தரின் தெரசா,  முருகதாஸ், சூப்பர சுப்பராயன் , ஓய ஜி மகேந்திரன் நடிப்பில் , மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவன் ,

ராகவா என்று சற்றே தன் பெயரை மாற்றிக் கொண்டு எழுதி இயக்கி இருக்கும் படம் கடம்பன் . இவன் ரசிகர் மனதில் தடம் பதிப்பானா ? பார்க்கலாம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடம்பவனம் என்ற பகுதியில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் ஊர்த் தலைவர் மூப்பன் (சூப்பர் சுப்பராயன்), 

kada 1

அவரது மகன் கடம்பன் (ஆர்யா) கடம்பனைக் காதலிக்கும் ரதி ( கேத்தரின் தெரசா)  ரதியின் அண்ணனுக்கும் கடம்பனுக்கும் ஆகாது .

கடம்பவனம் பகுதியில் தரைக்கு அடியில் இருக்கும் சுண்ணாம்பு வளத்தைத் தோண்டி எடுத்து அதை வைத்து சிமென்ட் உற்பத்தித் தொழிலை வளர்க்க விரும்பும் கார்ப்பரேட் முதலாளி ஒருவன் (தீபராஜ் ராணா ),

அந்த மலைக் கிராமத்தையே காலி செய்ய நினைக்கிறான் . அந்த மக்களுக்கு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தியும், 

சொகுசான வாழ்க்கைக்கு பாதை அமைத்துக் கொடுத்தான் அந்த மலைப் பகுதியை காலி செய்ய நினைக்கிறான் .

kada 2

மக்கள் மறுக்க , போலீஸ் பலம் , ஆள் பலம் , பண பலம் , ஆயுத பலம் மூலம் அவர்களை அழிக்க முயல , மலைவாழ் மக்கள் அதை எதிர்க்க , நடந்தது என்ன என்பதே கடம்பன் .

வனவளத்தை அழிப்பதன் மூலம் வருங்கால சந்ததிகளின் நிம்மதியான வாழ்வை அழிக்கும் நவீன தொழில் மேலாண்மையின் கோர முகத்தை தோல் உரிக்கும் கதை,

இன்னும் ஆயிரம் முறை இதை சினிமாவில் சொல்லலாம். தப்பே இல்லை .

மலைச்சரிவுக் குகையில் கடம்பன் மலைத் தேன் எடுக்கும் அசத்தலான காட்சியுடன் படம் துவங்குகிறது . மின்மினிப் பூச்சிகள் பறக்கும் காட்சி ,

நடு இரவில் தன்னை தின்ன வரும் நரிக் கூட்டத்திடம் இருந்து குற்றுயிரான கடம்பன் , புதைக்கப்பட்ட குழியில் இருந்து மீண்டெழுந்து சண்டை இடுவது என்ற பல வனம் சார்ந்த பல காட்சிகள் பாராட்ட வைக்கின்றன .

kada 5

அட்டகாசமான லொக்கேஷன்கள் . திரையில் இருந்து கண்ணை எடுக்கவே மனசு வரவில்லை .

வனத் துறையும் , தொழிலதிபரின் ஆட்களும் காட்டின மக்களைக் கொன்று குவிக்கும் காட்சிகளில் ஈழக் கொடுமைகளும் வீரப்பன் காட்டில் நடந்த கொடுமைகளும் நினைவுக்கு வருகின்றன .

சதீஷ் குமாரின் ஒளிப்பதிவும் இயக்குனர் ராகவாவின் படமாக்கலும் மிக அருமை .

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்க ஒகே . பின்னணி இசையும் சிறப்பு . ஆனால் வாத்தியக் கருவிகள் பயன்பாட்டில் மண் சார் தன்மை குறைவே .

ஆர்யாவின் மேற்கத்திய பாணியிலான பாடி பில்டிங் உடம்பு காட்டு வாசி நாயகன் கதாபாத்திரத்தோடு இணையவில்லை என்றாலும் அவரது உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல . பாராட்டுக்கள் ஆர்யா .

kada 6

கேதரின் தெரசாவை மிக அழகாக அழகான காட்டு வாசிப் பெண்ணாக மாற்றிய வகையில் சபாஷ் வாங்குகிறார் இயக்குனர் . அவரும் நன்றாக நடித்துள்ளார் .

சுப்பராயன், முருகதாஸ் ஆகியோரின் தேர்வும் அவர்கள் நடிப்பும் சிறப்பு .

தமிழ் அல்லாத வேற்று மொழி ஃபாரஸ்ட் ரேஞ்சரை காட்டியதன் மூலம் இயக்குனர் ராகவா பேசி இருக்கும் நுண்ணிய அரசியல் ,

சிமென்ட் ஆலைக்கு மகிந்தர் என்ற பெயர் வைத்து இருக்கும் வகையில் உணர்த்தும் செய்தி ஆகியவை பாராட்டுக்குரியவை .

kada 7

அந்த வில்லன் கேரக்டர் வேறு நரேந்திர மோடி போலவே தோன்றுகிறது நமக்கு .  நல்லவர்கள் போல வஞ்சகம் செய்யும் ஓய ஜி மகேந்திராவின் கேரக்டரும் அருமை .

என்ன பிரச்னை என்றால் நல்ல கதையை எடுத்துக் கொண்டவர்கள் திரைக்கதையில் சறுக்கி இருக்கிறார்கள் .

ஒரு மலைக் கிராமத்து மக்களுக்கும் ஒரு முதலாளிக்கும் இடையிலான ஒற்றைச் சங்கிலி போராட்டமாகவே பயணிக்கிறது படம்.

காடு , மலை,  வனம் ,இவை கொடுத்தது, இழந்தது , நசிந்தது , அதன் பின்னால் அந்நிய சக்திகள் , மேற்கத்திய ஆதிக்கம் என்று, 

எவ்வளவோ விசயங்களை பேச வாகான படம் . ஆனால் அதை எல்லாம் பேசவே இல்லை என்பது சோகம்

kada 8

அதே போல இதில் அரசியலின் பங்கு , இன எதிரிகள் துரோகிகள் பங்கு என்று பின்னிப் பெடல் எடுத்திருக்க வேண்டாமா ?

என்னதான் காடு என்றாலும் அரசுக்கு தெரியாமல் ஓர் மலை கிராமத்தை சும்மா வனத்துறை மற்றும் போலீஸ் ஆட்களை வைத்துக் கொண்டு காலி செய்வது சாத்தியமா ? மீடியா எங்கே போனது ?

அப்படியே ரகசியமாக மலைக் கிராம அழிப்பு துவங்கி இருந்தாலும் , ஒரு நிலையில் அம்பானி முன்னால் கும்பிட்டு நின்ற மோடி போல ,

அரசு எந்திரமும் கார்ப்பரேட் ஆட்கள் போடும் நாய் பிஸ்கட்டை கவ்வும் உண்மைகளை படத்தில் சொல்லி யதார்த்தப்படுத்தி இருக்கலாமே .

kada 9

இயற்கையை அழிக்கும் பண முதல் வாத கார்ப்பரேட் சக்தி என்பது ஒரு தனி முகம் அல்ல . அது ஒரு கண்ணி. சக்தி வாய்ந்த வலை.

அப்படி இருக்க படத்தில் அதன் அடையாளமாக வரும் நபரை கடம்பனோடு ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட எல்லாம் வைத்து சினிமாத்தனம் ஏற்றி இருக்கத் தேவை இல்லை

உயர்ந்த கருத்தை சொல்லும் படத்தில் மனசில் நிற்கிற மாதிரி ஒரு வசனமும் இல்லாததும் ஒரு குறையே .

எனினும் ,

சொல்ல வந்த நல்ல கருத்தால், விழிகளை விரியவைக்கும் படமாக்கலால், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிக நடிகையரின் ‘காட்டுத்தனமான’ உழைப்பால்   உயர்ந்து நிற்கிறான் கடம்பன் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *