தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போட்டியிலிருந்து விலகி
கலைப்புலி எஸ் தாணுவின் ஆதரவு பெற்ற ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்
இந்த இணைப்பு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, “நான் தமிழ் திரைப்பட தொழிலில் நிற்கக் காரணம் கலைப்புலி ஜி.சேகரன்தான்.
இப்போது இந்த அணிக்கு அசகாய சக்தியாக அவர் வந்திருக்கிறார். அவர் எங்களுடன் இணைந்திருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அன்று 5, மீரான் சாஹிப் தெருவிலிருந்து தொடங்கிய எங்களின் நட்பு பழமையானது. ஆழமானது. அப்போதெல்லாம் அவர் எவ்வளவோ கதைகள் கூறுவார் ‘
பொல்லாத ஊரு’ என்றொரு கதை. இன்று எடுத்தாலும் ஓடும். விஷால் இதில் நடிக்கலாம். விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாவது கிடைக்கும்.
விஷாலை வைத்து படமெடுத்த 12 தயாரிப்பாளர்கள் தெருவுக்கு வந்து விடட்டார்கள். . உதாரணத்துக்கு ‘சமர்’ படம் எடுத்த தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடுவின் அனுபவத்தைக் கேளுங்கள்”
— என்று சொல்லி தொலைபேசியில் ரமேஷ் நாயுடுவைத் தொடர்பு கொண்டு பேசி ஸ்பீக்கர் போன் மூலம் கேட்க வைத்தார்
செல்போனில் வந்த குரல் “நான் ‘சமர்’ படத்தின் தயாரிப்பாளர் பேசுகிறேன். அன்று ‘சமர்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பாண்டிச்சேரியில் படமாகிக் கொண்டிருந்தது.
நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் அந்தக் காட்சியில் நடித்தார்கள். கனல் கண்ணன்தான் ஸ்டண்ட் மாஸ்டர்.
அன்றுதான் கடைசி நாள். பூசணிக்காய் உடைக்க வேண்டும் என்பதால் நான் மதிய உணவு இடைவேளையின்போது என் மனைவி, மகன் என்று குடும்பத்துடன் அங்கே போனேன்.
ஆனால் தயாரிப்பாளர் இங்கு வந்தால், நான் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று விஷால் அங்கிருந்து கிளம்பி வெளியேறிவிட்டார். அதனால் படப்பிடிப்பு நின்று விட்டது.
இத்தனைக்கும் அவருக்கு சம்பளம் முழுவதையும் ஏற்கெனவே கொடுத்து விட்டேன்.
கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டுப் படம் எடுக்கும் தயாரிப்பாளரின் நிலைமையைப் பாருங்கள். நான் படப்பிடிப்புக்கு வரக் கூடாதாம்.
அந்த ஒரு படத்தோடு தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன். எனக்கு நேர்ந்த அவமானம் வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது…” என்றார்
பிறகு தாணு தொடர்ந்து பேசும்போது, ”பார்த்தீர்களா ஒரு தயாரிப்பாளரின் நிலைமையை..? தயாரிப்பாளர் என்றால் கிள்ளுக் கீரையா..?
தயாரிப்பாளர்களை நாடக நடிகர்கள் என்று நினைத்தாயா? இது என்ன கேலிக் கூத்து..? அப்படி எதற்கு இந்த பதவி வெறி..? ஏன் இந்த நாற்காலி வெறி..?
இவர் இப்படி என்றால் தேர்தலில் இன்னொரு அணியில் நிற்கும் கேயார், சங்கப் பணத்தை வைத்துக் கொண்டு செலவு செய்தவர். 1.35 கோடி ரூபாய்,
அந்த டிரஸ்ட் பணத்தைத் தராமல் இருந்தவர். போராடித்தான் வாங்கினோம். இது அவர் கூட இருக்கும் எஸ்.ஏ.சிக்கும் தெரியும்.
விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்துக்கு 4 கோடி என்பது முதல் பிரதி பட்ஜெட்டாம். படம் 21 கோடி ரூபாய் வியாபாரமாம். 17 கோடி லாபமாம்.
இதை வைத்து யாருக்கு உதவப் போகிறாய் விஷால்..? கிடைத்த லாபத்தில் கடைசியாய் உன்னை வைத்து ‘கத்திச் சண்டை’ படமெடுத்து நஷ்டமடைந்து உட்கார்ந்திருக்கும் அந்தத் தயாரிப்பாளருக்கு கொடுப்பாயா..?
நாசர் நல்லவர். குறை சொல்ல இடமில்லாதவர். உன்னுடன் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்.
விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன. போட்டோ ஆதாரத்துடன் 1-ம் தேதி வெளியிடுவேன். ராதாகிருஷ்ணன் தயாரிப்பாளர்களின் நலம் காப்பவர்.
சிறுபடத் தயாரிப்பாளர்ளுக்காகப் போராடுபவர். அவர் அணி வெற்றி பெறும். அதற்காக நாங்கள் என்றும் துணை நிற்போம்…” என்றார்.
துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் பேச்சில் ,
“தனக்கு வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் நடிகர்கள் இந்தச் சங்கத்துக்கு வரக் கூடாது என்று,
நமது அணி வெற்றிக்காக விட்டுக் கொடுத்துள்ள கலைப்புலி ஜி.சேகரன் அவர்களுக்கு நன்றி.
விஷால் தினமும் ஒரு ஸ்டண்ட் அடிக்கிறார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஸ்டண்ட் அடிக்கிறார். விஷால் பதவிக்கு வந்து நடிகர் சங்கத்துக்கு எதுவும் செய்யவில்லை.
பதவிக்கு வந்து ஓராண்டில் செய்யா விட்டால் ராஜினாமா செய்வேன் என்றார். ஆனால் ஒன்றே முக்கால் ஆண்டாகிறது. எதுவும் செய்யவில்லை.
இப்போது நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டுவதாக நாடகம் போடுகிறார். அந்த இடத்துக்கு மாநகராட்சி அனுமதிகூட இன்னமும் வாங்கவில்லை.
தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் வீடு கட்டித் தருவாராம். எப்படி என்று சொல்ல முடியவில்லை.
தினமும் யாருக்காச்சும் 2000 ரூபாய் கொடுத்தேன். 1500 ரூபாய் கொடுத்தேன். 1000 ரூபாய் கொடுத்தேன் என்று செய்தி அனுப்புகிறார்.
யாரை ஏமாற்ற இப்படி செய்திகளை பரப்புகிறார் விஷால்..? ஏன் இப்படி ஸ்டண்ட் அடிக்கிறார்..? அவருக்கு ஏதோ மன வியாதி வந்திருக்கிறது.
தான் நடிக்கும் படப்பிடிப்புக்கே நேரத்துக்குப் போகாத பிரகாஷ்ராஜ் எப்படி சங்கத்துக்கு உதவுவார்..? இரவு 10 மணிக்குமேல் அவர் எங்கே இருப்பார் என்று அவருக்கே தெரியாது.
தயாரிப்பாளர்களுக்கு வருகிற பெரும்பாலான பிரச்சினைகளே நடிகர்களால்தான்.. அப்படி இருக்கும்போது அவர்களால் எப்படி தயாரிப்பாளர்களுக்கு உதவ முடியும்..?” என்றார்.
முன்னாள் எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது,
“எங்கள் வெற்றி விழாவுக்கு விஷால் வரட்டும். நடிகர் சங்கத்து கட்டடத்துக்கு சென்ற ஆண்டு மார்ச் 5-ம் தேதியே அடிக்கல் நாட்டியாகிவிட்டது.
இப்போது மீண்டும் அடிக்கல் நாட்டு விழா என்று விஷால் ஏன் நாடகம் போடுகிறார்? யாரை ஏமாற்றப் பார்க்கிறார்..?
விஷால் எங்களுக்குப் போட்டியே இல்லை. அவருக்கு வாக்குகளே இல்லை. எங்களுக்குப் போட்டி அண்ணன் கேயார் அணி மட்டும்தான்..” என்றார்.
தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் தன் பேச்சில்,
“தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியே இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான்.இது சேவை சார்ந்த அமைப்பு. உதவும் குணம், அர்ப்பணிப்பு, புரிதல் உள்ளவர்கள்,
மட்டுமே இங்கு வரவேண்டும். தேவையற்ற சக்திகள் வந்து விடக் கூடாது என்றுதான் டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் போன்றவர்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்…” என்றார்.
செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்,
“நாங்கள் எந்தக் கோமாளி பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.
நாங்கள்தான் உண்மையான ஆம்பளைகள். ஜி.சேகரன் வந்திருப்பது. இரட்டைக் குழல் துப்பாக்கியாக மாறி எங்களை பலமாகியுள்ளது…” என்றார்.
தயாரிப்பாளர் முன்னேற்ற அணி’யின் தலைவர் வேட்பாளரான ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும்போது,
“வரலாற்றில் நடக்காதது எல்லாம் நடந்து வருகிறது.
ஒரு தொழில் முறை தயாரிப்பாளர்தான் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வர வேண்டும் என்று ஒருமித்த சிந்தனையோடு இங்கே ஒன்றாக இருக்கிறார்கள்.
அண்ணன் கலைப்புலி தாணுவின் பெரு முயற்சியால், மதிப்புக்குரிய டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் போன்றவர்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.இந்த
ஒரே குடும்பத்தின் பெருமை காக்க, மானம் காக்க, சுயமாரியாதை காக்க ஒன்று சேர்ந்துள்ளார்கள்…” என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தன் பேச்சில்
“ராதாகிருஷ்ணன் என்னைவிட திறமையாகச் செயல்படுவார். அவருக்கு எதிர்பார்ப்பு எதுவுமில்லை.
நாங்கள்கூட தேர்தல் நேரத்தில் மட்டுமே பேசுவோம். ஜி.சேகரன் எப்போதும் தொடர்பில் இருப்பவர். அவர் வரவுக்குக் கண்கள் பனிக்க நன்றி கூறுகிறேன்…” என்றார்.
கலைப்புலி ஜி.சேகரன் பேசும்போது,
“குடும்பத்தில் பிரிவதும், சேர்வதும் சகஜம். மணப்பெண் தாய்மாமனை மணக்கும் போதுள்ள உணர்வில் நான் நிற்கிறேன்.
நட்பும் நதி போன்றதுதான். நதி ஓடும்.. பிரியும்.. விலகும்… பின் சேரும். நட்பும் அப்படித்தான்.
என்னை நேற்று இரவு நண்பர்கள் வந்து சந்தித்தபோது யாரும் பேசிக் கொள்ளவில்லை. காரணம் பழைய சில கருத்து வேறுபாடுகள்.. முரண்பாடுகள்.
அதனால்15 நிமிடம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. அப்போது தாணு ‘எங்களுக்கு நீ இதைச் செய்ய வேண்டும்’ என்றார். அதுதான் நட்பு. கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பர் இரு பக்கமும் செயல்பட முடியுமா..?
ஆனால் விஷால் அப்படிச் செய்ய நினைக்கிறார். அவர் மரபுகளை மீறக்கூடாது..” என்றார்.
தொடர்கிறது சொற்போர் !









