A.B.R . தயாரிக்க, பவன், கோவிந்த், உமா, சத்யஸ்ரீ ஆகியோர் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி கே.பாஸ்கர் இயக்கி இருக்கும் படம் காலகட்டம் . படத்தின் ரசனைக் கட்டம் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்
சென்னையின் மீனவக் குப்பம் ஒன்றில் வாழும் முழு நேர மீனவனான தாமசுக்கு (பவன்) காதலும் பாசமுமான மனைவி மேரியும் (உமா) ஒரு பச்சிளம் ஆண் மகனும் உண்டு. தாமசின் நெருங்கிய நண்பனான சிவா (கோவிந்த்) ஒரு திரைப்பட நடனக் கலைஞன் . அவனை தீவிரமாகக் காதலிக்கிறாள் அந்தக் குப்பம் வாழ் இளம்பெண் கனகா (சத்யஸ்ரீ).
பணம் இருக்கிற சொகுசில் வறுமையால் கஷ்டப்படும் ஏழைப்பெண்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கவே ‘படுக்கை நிபந்தனை’ போடும் அயோக்கியன் பாலா (நான் கடவுள் ராஜேந்திரன்).
டான்ஸ் யூனியனுக்கு பணம் கட்ட முடியாததால் ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் சிவாவுக்கு தனது தோழிகளிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்தும் , கனகாவின் காதலை சிவாவுக்கு புரிய வைக்கவும் மேரி செய்யும் முயற்சிகள் யாவும் தவறாகப் பார்ப்பவர்களின் பார்வைக்கு மேரியையும் சிவாவையும் கள்ள உறவு கொண்டவர்களாக நினைக்க வைக்கிறது . விஷயம் தாமசின் காதுக்கு வர, மனதில் சந்தேக செடி வளர்க்கும் தாமஸ், சிவாவிடம் இருந்து காரணம் சொல்லாமல் விலகுகிறான்.
பணத்தின் பெயரால் மேரியை வளைக்க பாலா செய்த முயற்சி தோல்வியில் முடிவதோடு மேரியிடம் இருந்து அவனுக்கு ‘பளார்’ அறை ஒன்றும் கிடைக்க, அந்தக் கோபத்தில் இருக்கிறான் பாலா.
மேரியின் சிறிய வீட்டுக்குள், நடக்கும் போதும் கால் தடுமாறும் போதும் மேரிக்கும் சிவாவுக்கு ஏற்படும் தொடுகைகளை தவறாக தெரியும் வண்ணம் படம் பிடிக்கும் பாலா அதை மேரியின் கணவனான தாமசிடம் போட்டுக் காட்டுகிறான் . அதை அப்படியே நம்பும் தாமஸ் செய்யும் ஒரு விபரீத செயல் காரணமாக அவன் வாழ்க்கை பாழாகிறது.
மேரி குழந்தையோடு எங்கோ போய் விடுகிறாள் . கடைசியில் எல்லாவற்றுக்கும் காரணம் பாலா என்று முடிவு செய்யும் தாமஸ் என்ன செய்கிறான் என்பதே … இந்த காலகட்டம் .
பவனும் , உமாவும் கதாபாத்திரங்களை உணர்ந்து மிக சிறப்பாக நடித்துள்ளனர் . சத்யஸ்ரீ ஃபிரேமில் அழகாக இருக்கிறார். கோவிந்த்நடனக் கலைஞர் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார். காமெடி சீரியஸ் என்று இரண்டு ஏரியாவிலும் கலக்குகிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.
கே. சங்கரின் படத்தொகுப்பில் fight sound மிக அருமையாக வந்திருக்கிறது . டான் அசோக்கின் சண்டைப் பயிற்சியும் நன்றாக இருக்கிறது .
உன்னால் மயிலே பாடல் மனதில் தங்குகிறது.
மீனவக் குப்பம் என்பது எவ்வளவு அருமையான லொக்கேஷன். ஆனால் ஏனோ தெரியவில்லை. ஒரு சரியான establishment shot கூட இல்லாமல் எல்லா ஃபிரேம்களையும் compact ஆகவே வைத்து இருக்கிறார்கள் . ஒரு சினிமா நடனக் கலைஞர் கதாபாத்திரம் சம்மந்தப்பட்ட படத்தில் பாடல்களில் நடனம் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் ? ம்ஹும் !
மேரியையும் சிவாவையும் ஊரு தப்பாகப் பேசுவது தாமசின் காதுக்கு போகவில்லை என்று கதை சொன்னால் கூடப் பரவாயில்லை . ஆனால் தாமசை இதைக் கூறி எல்லோரும் சீரியசாகவும் அக்கறையாகவும் கிண்டலாகவும் பேசுகிறார்கள். ஆனால் அந்த சந்தேகத்தை மேரியிடமும் சிவாவிடமும் யாருமே துளி கூட வெளிப்படுத்தவில்லை. அவர்களும் துக்குளி கூட உணரவே இல்லை என்பதெல்லாம் ….. பத்தல தல … பத்தல !
ஊருக்கு ஊரு பாலாக்கள் இருக்கத்தான் செய்வார்கள் . அனால் அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பது தாமசுக்கு முன்பே தெரிந்திருந்தும் அவன் காட்டிய ஒரு வீடியோவை நம்பி நண்பனையும் , அதை விட முக்கியமாக கட்டிய மனைவியையும் தாமஸ் சந்தேகப்பட்டதுதான், பாலா செய்ததை விட மிகப்பெரிய அயோக்கியத்தனம் .
உண்மை தெரியும்போது அதற்காக தாமஸ் ஒரு நொடி கூட வருந்தாமல், ரொம்ப யோக்கியன் போல பாலாவைப் பழிவாங்கக் கிளம்புவது அரைவேக்காட்டுத்தனம் ! ஆன்ட்டி கிளைமாக்சில் நடப்பதையே ஆளை மாற்றி கிளைமாக்சில் காட்டுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் ?
எனினும், மேரி –தாமஸ் குடும்பக் காட்சிகள் , தாமஸ் — சிவா நட்புக் காட்சிகள் மற்றும் பிரிவுக் காட்சிகளை யதார்த்தமாக சிறப்பாக இயக்கி அசத்தி இருக்கிறார் இயக்குனர் கே. பாஸ்கர்.
காலகட்டம்…. எளிய வட்டம் !