புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தை சாடிய சூர்யாவுக்கு எழுந்த எதிர்வினைகளை ரஜினி கூல் செய்த நிகழ்வாக காப்பான் ஆடியோ லாஞ்ச் அமைந்தது .
அடுத்து, படத்தின் டீசரில் இடம் பெற்ற காவிரி , தமிழ்நாடு சம்மந்தப்பட்ட வசனங்களையும் கலப்பையையும் காரணம் காட்டி ஒரு குழு தன் கதை என்று சொல்லி வழக்குப் போட,
சற்றும் முகாந்திரம் இல்லாத அந்த வழக்கை எதிர்கொண்டு வென்ற கே வி ஆனந்த் உள்ளிட்ட படக் குழு , வரும் 20 ஆம் தேதி படம் வெளியாவதை ஒட்டி பத்திரிக்கையாளர்களை சந்தித்தது .
சூர்யா , நாயகி சாயீஷா , அவரது கணவரும் படத்தில் நடித்து இருப்பவருமான ஆர்யா , இவர்களுடன் சமுத்திரக் கனி மற்றும் பலர் .
நிகழ்ச்சிகாகவே உருவாக்கப்பட்ட துணை முன்னோட்டம் , பழைய முன்னோட்டம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டன .
பிரபல தலைவர்களின் பாதுக்காப்புக்காக இயங்கும் எஸ் பி ஜி பாதுகாப்புப் படையின் சிறப்புகளை கூறிய இயக்குனர் ஆனந்த் ( சாகறதுக்கே சம்பளம் வாங்குறாங்களோ என்று நினைக்கும் அளவுக்கு மிக ஆபத்தான பணி அது ) அந்த கதாபாத்திரத்துக்கு சூர்யா பொருந்திய விதத்தை பாராட்டினார் .
சாயிஷாவின் திறமையை புகழ்ந்தார் . மோகன் லாலை வியந்தார் .
கணவர் ஆர்யாவோடு நடித்தது சந்தோசம் என்று சொன்ன சாயீஷா , சூர்யாவின் உழைப்பை பாராட்டினார் .
சமுத்திரக் கனி , தான் இந்தப் படத்தில் நடித்ததற்கு சந்தோஷப் பட்டார் .
கே வி ஆனந்த் படத்தில் நடித்தது மிக்க சந்தோசம் என்றார் ஆர்யா .
சூர்யா பேசும்போது , ” இந்தப் படத்தில் ஆர்யா நடித்த கேரக்டருக்கு வேறொரு நடிகரை புக் செய்து இருந்தோம். அவரால் கடைசி நேரத்தில் வர முடியவில்லை . உடனே ஆர்யாவை தொடர்பு கொண்டோம் . ஐந்து மணி நேரத்தில் தயார் ஆகி லண்டனுக்கு விமானம் ஏறினார் . மிக்க நன்றி அவருக்கு .
இன்னொரு முக்கியமான விஷயம் .. கட் அவுட் விழுந்து மரணம் அடைந்த சுபஸ்ரீயின் நினைவுகள் மனதை அழுத்துகின்றன . மிகக் கொடிய மரணம் அது . இனி என் படங்களுக்கு கட் அவுட்டுகள் வேண்டாம் . காப்பான் படத்தில் இருந்தே அதை ஆரம்பிக்கிறேன் . அதற்கு பதிலாக ரசிகர்கள் மக்களுக்கு உதவும் வகையில் செயல் பட வேண்டும் ” என்றார் .
உண்மை . ஊடக வளர்ச்சி பெரிதாக இல்லாத காலத்தில் கட் அவுட் என்பது விளம்பரத்துக்கு தவிர்க்க முடியாத விசயமாக இருக்கலாம் . ஆனால் மொபைல் பொன் மூலம் ஒவ்வொரு மனிதனுமே ஒரு மீடியாகவாக ஆகி விட்ட நிலையில் இனி கட் அவுட் என்பது காட்டுமிராண்டித்தனமே!





