கத்திக் கத்தி குத்துறாங்க ‘கத்தி’யை

Kathi-Movie-stills-1ஒரு படம் நன்றாக ஓடவில்லை என்றால் படத்தை உருவாக்கியவர்கள்  தயாரிப்பாளரிடமோ சில சமயம்  ரசிகர்களிடமோ கல்லடி படவேண்டி இருக்கலாம் . ஆனால்  ஓடினால் நிறைய சொல்லடி படவேண்டும் போல இருக்கிறது
உதாரணம் கத்தி …மீஞ்சூர் கோபி என்பவர் சொன்ன கதையைத்தான் முருகதாஸ் சுட்டு படம் எடுத்து விட்டார் என்பது ஒரு பக்கம் இருக்க , படததில் உள்ள விசயங்களை வைத்து வீறிட  வைத்து விட்டார்கள் சமூக வலைதள சாமுராய்கள் .
முக்கியமாக கோக் விளம்பரத்தில் நடித்த விஜய் கத்தி படத்தில் தாமிரபரணி நீரை உறிஞ்சும் கோக் கம்பெனியை எதிர்த்து வசனம் பேசியதை மன்னிப்பே இல்லாத துரோகமாக பார்த்தார்கள் பலர் . கிண்டல் கேலி கெட்ட  வார்த்தை பிரயோகங்களுக்கும் பஞ்சமில்லை .
விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கிய ஓர் அணி ஒரு படத்தில் எம் ஆர் ராதா பேசும் வசனத்தை வைத்து பதிலடி கொடுத்தார்கள் . அதில் சூதாட்டத்தின் தீமைகளை விளக்கும் புத்தகம் விற்கும் ஒருவன் அதில் வந்த காசில் சூதாடுவான் . அவனை எல்லோரும் பிடித்து  அடிக்கும்போது அவர்களை தடுத்து திட்டும் எம் ஆர் ராதா “ஒருத்தன் என்ன செஞ்சா என்ன? அவன் சொல்ற விஷயம் நல்ல விசயம்னா ஏத்துகிட்டு போங்கடா முட்டாப் பசங்களா ?” என்று பேசியிருக்கும் அந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு .”கத்தி படத்துல இப்போ அந்த குளிர்பானத்தைப்பத்தி பயங்கரமா பொங்குற இதே நடிகர்தான் அதே குளிர்பான விளம்பரத்துல பல வருஷத்துக்கு முன்னாடி நடிச்சிருக்காரு.. இவரு எப்படி இப்படி பேசலாம் இப்போ?ன்னு நியாயமா, அறிவாளித்தனமா கேக்கற பல பேர் இந்த உலகத்துல இருக்காங்கன்னு நினைக்கும்போது, அவங்க காலத்துல நாமளும் வாழறதை நினைக்கும்போது பெருமையா இருக்கு..இதே ஆளுங்கதான் “அந்நியன்” படத்துல அலட்சியத்தைப்பத்தி கதாநாயகர் சொன்னதுக்குப் பிறகு, சாலை விதிகளை சரியா கடைப்பிடிச்சி, ஒரு தடவை கூட சாலை விதிகளை மீறாம, பைக் ஓட்டும்போது ஹெல்மெட் போட்டுக்கிட்டு, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கிட்டு பொறுப்பா இருந்தாங்க, இன்னும் இருக்காங்க..

ஊருக்குள்ளயோ, தேசிய நெடுஞ்சாலையிலயோ போகும்போது குறிப்பிடப்பட்டிருக்கற வேகத்தை மீறி போகாம, 60 கிலோமீட்டர் வேகத்துலயே போனாங்க, போயிட்டு இருக்காங்க..பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் வாங்கினப்போ யாருக்கும் லஞ்சமோ, கைமாத்தோ கொடுக்காம “இந்தியன்” பட கதாநாயகர் சொன்னது மாதிரி நியாயமா இருந்தாங்க, இருக்காங்க..

சிகரெட் அட்டையில இருக்கற எச்சரிக்கையைப் பார்த்து சிகரெட் பிடிக்கறதையே நிறுத்திட்டாங்க..குடிப்பழக்கம் கெடுதல்னு தெரிஞ்சவுடனே குடியை நிறுத்திட்டாங்க..வருடாவருடம் சரியா வருமான வரி கட்டினாங்க, கட்டிக்கிட்டு இருக்காங்க..

ஆகவே நடிகர்கள் இந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது!இவங்களை நினைச்சா மெய்சிலிர்க்குது.. என்ன கொடுமை சார் இது.நடிகர்களை நடிகர்களா என்னிக்கு பார்க்க ஆரம்பிக்கிறோமோ அன்னிக்குத்தான் கொஞ்சமாவது உருப்படுவோம்.” என்று வேங்கட சுப்ரமணியம்  சுந்தரம் என்பவர் முக நூலில் பொங்கி இருந்தார் .

இது ஒரு பக்கம் இருக்க , படத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்பு விஜய் பேசுகிற — படத்தின் மிக சிறப்பான பகுதி என்று இயல்பானவர்கள் கொண்டாடுகிற –“ஆறு நதிகளை மூடிட்டாங்க, இத்தனை குளத்தை மூடிட்டாங்க, அத்தனை ஏரியை மூடிட்டாங்க… மீத்தேன் பிரச்னை….தொழிற்சாலையே வேண்டாம்னு சொல்லலை… கேரட்டிலிருந்து செய்யும் ஃபேர்னெஸ் கிரீம் வேண்டாம்னு சொல்றோம்,….5,000 கோடி கடன் வாங்கிய ஒரு தொழிலதிபர், இல்லைன்னு கைவிரிச்சான். தற்கொலை பண்ணிக்கலை. கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்துக்கலை. ஆனால் 5,000 வாங்கின விவசாயி, பூச்சி மருந்து குடிச்சுச் சாகறான்.’ உள்ளிட்ட எல்லா வசனங்களுமே தப்புமே என்று சிலர் மேதாவித்தனமாக பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார்கள் .

படத்தில், வந்த 2 ஜி ஊழல் பற்றிய வசனம் , ஆரம்பம் முதலே கத்தி படத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வந்த திமுக பிரமுகர் ஜே. அன்பழகனை  அதிர்ச்சியடைய வைக்க , பல திமுக புள்ளிகளை கோபத்துக்கு ஆளாக்கி கலைஞரின் மூக்கு வரை விஷயத்தை கொண்டு போனது .

அதே நேரம் தனக்கு மீடியா  மீது தனக்கு உள்ள மொத்தக் கோபத்தையும் ‘இன்டலக்சுவல் அரகன்ஸ்’ பாணியில் காட்டி இருந்தார் முருகதாஸ் . ‘எந்த மீடியாவுக்குமே அக்கறை இல்லை . பரபரப்பான செய்தி , குத்தாட்டம் , வெட்டிப் பேச்சு இவற்றில்தான் எல்லா மீடியாக்களும்  அக்கறை காட்டுகின்றன ‘ என்ற பொருளில் முருகதாஸ் பல காட்சிகள் வைத்து இருக்க “படத்தில் முருகதாஸ் சொல்லும் சமூக அக்கறை விசயங்கள் எல்லாம் மீடியா மூலம் வெளிவந்தவைதானே . மீடியா இல்லாமல் அவர் என்ன துப்பறிந்தா  கண்டு பிடித்தார் ?”” என்று மீடியா உலகம் பர்சனலாக சற்று முகம் சுளித்தாலும் படம் சொல்லும் நல்ல விசயங்களுக்காக பாரட்டான விமர்சனங்களையே தந்தன .

இதெல்லாம் கூட பரவாயில்லை . ஆனால் சில சினிமாக் காரர்களே கத்திக்கு எதிராக களத்தில் குதித்ததுதான் காமெடி . அடுத்த வாக்கியத்துக்கு நீங்கள் சிரிக்கக் கூடாது . அவர்களில் முக்கியமானவர் பிரேம்ஜி அமரன் !

கத்தி  படம் வெளியாவதற்கு முதல் நாள்  சத்யம் திரையரங்கில் வெடிகுண்டு வீசி அதன் கண்ணாடிக் கதவுகள் உடைந்தது  இல்லையா? அந்த புகைப்படத்தை,  பிரேம்ஜி அமரன் அவருடைய டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதைக் கண்டித்தோ படத்துக்கு ஆதரவாகவோ ஒரு வாசகமும் இல்லாத நிலையில் அந்த சம்பவத்தை அவர் ரசிக்கிறார் என்று புரிந்து கொண்ட விஜய் ரசிகர்கள் டுவிட்டரிலேயே பிரேம்ஜி அமரனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு நிலையில் சூடு அதிகமாகவே , கடைசியாக “நானும் தளபதி படத்தை முதல் நாள் பார்க்க ஆவலாக இருக்கிறேன்”  என்று கூறி பின்வாங்கினார் . அப்படியே குண்டூசி,  ஆணி , கோணி ஊசி என்று வாங்கிக் கொண்டு போயிருந்தால் கூட தவறாகத் தெரிந்து இருக்காது.
ஆனால் , தீபாவளி தினத்தன்று அஜித்தின் பட்டப் பெயரான ‘தல’ என்பதையும் தீபாவளி என்பதையும் சேர்த்து வருடா வருடம் எங்களைப் போன்ற திருமணமாகாத இளைஞர்களையும்  ‘தல தீபாவளி’யைக் கொண்டாட வைக்கும் (உலகத்துக்கு என்னமோ சொல்ல வர்றாப்ல , பிரேம்ஜி !) தலைக்கு நன்றி. தல ரசிகர்களுக்கும், தீபாவளியைக் கொண்டாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கும் ‘தல’ தீபாவளி வாழ்த்துகள் என்று பதிவைப் போட்டிருந்தார்.
அடுத்த நாள் , ‘கத்தி’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையைப்  பற்றி டுவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருந்தார், படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ்,. அதைத் தொடர்ந்துசிலர் ‘கத்தி டீம் வடை’ என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’ ஒன்றை உருவாக்கி,  அதில் கத்தி வசூல் பற்றிய செய்தியை தாறுமாறாகக் கிண்டலடித்தனர்.

அதற்கு பொருத்தமாக பிரேம்ஜியும்   சில வடை புகைப்படங்களைப் போட்டு , “மழை நேரத்தில் வடை சாப்பிடுவது உடம்புக்கு நல்லது, உங்களுக்கு சாதாரண வடை பிடிக்கவில்லை என்றால் சாம்பார் வடையோ அல்லது தயிர் வடையையோ சாப்பிடுங்கள்” என்று கூறி இருந்தது விஜய் ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றியது அதைத் தொடர்ந்து மீண்டும் விஜய் ரசிகர்கள் பிரேம்ஜி அமரனை கடுமையாகத் திட்டி வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.

இப்படி பிரேம்ஜி செய்வது ஏன் என்று கேட்டால் அவர் அஜித் ரசிகர் அதுதான் என்று ஒரு மொக்கை பதிலை சொல்கிறது அவருக்கு வேண்டிய தரப்பு. கத்தி படத்தில் சதீஷ் நடித்து இருக்கும் கேரக்டரில் பிரேம்ஜி நடிப்பதாக இருந்து அதன் பின்னர் அது மாறியதால் பிரேம்ஜிக்கு வந்த கோபம் இது என்று செய்து புரள்கிறது .

இது மட்டுமா?

சூர்யா நடிக்க பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் ஒரு சின்ன ரோலில் விஜய் அல்லது அஜித்தை கேட்டுப் பாக்கலாம் என்று வெங்கட் பிரபு யோசிக்க , அஜித்தான பெஸ்ட் சாய்ஸ் என்று வெங்கட் பிரபு அழுத்தி சொன்னதாகவும் ஒரு கிச்சு கிச்சு (பின்னே இதெல்லாம் கிசு கிசுவா?) பரவுகிறது .

இதெல்லாம் உண்மையா இருந்தா… பிரேம்ஜி உங்க கோபம் கூட காமெடியா இருக்கு .
ஆனா  பொதுவாகப்  பார்த்தால் …

எம் ஆர் ராதா டயலாக்தான் நம்ம கருத்தும் மக்கா

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →