விஜய் சமந்தா இணையராக நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா மற்றும் கருணாமூர்த்தி தயாரிப்பில் வந்திருக்கும் படம் கத்தி .
இந்த கத்தி ஷார்ப்பா? மொன்னையா? பார்க்கலாம் .
நெல்லை மாவட்டம் தன்னூத்து (தானாக வரும் ஊற்று என்று பொருள்) கிராமம் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு விவாசாயம் செழித்த நிலம் . இப்போது வானம் பூத்த பூமி . அந்த ஊரைச் சேர்ந்த முதுகலை நீரியல் அறிவியல் (- எம் எஸ் சி ஹைட்ராலாஜி) படித்த ஜீவா என்ற இளைஞன் (சைவ விஜய்) அந்த ஊருக்கு கீழே ஒரு வற்றாத நீரூற்று இருப்பதை செயற்கைக் கோள் படம் மூலம் அறிந்து கொள்கிறான். துளையிட்டு அந்த ஊற்றை கொண்டு வந்தால் மூன்று மாவட்டங்களை மீண்டும் செழிப்பான பூமி ஆக்கலாம் என்பது அவனது சமூக பார்வை .
இதை உணர்ந்து கொண்ட மல்டிநேஷனல் கார்ப்பரேட் கம்பெனி ஒன்று அந்த ஊரின் மொத்த நிலத்தையும் வாங்கி குளிர்பானக் கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க முயல்கிறது . ஜீவா தலைமையிலான ஊர் மக்கள் அதை தடுக்க முயல , அந்த ஊர் பெண்கள் வாழா வெட்டிகளாக திரும்பி வருவது வரை பல அராஜகங்கள் அரங்கேறுகின்றன . கம்பெனிக்கு எதிராக வழக்கு போட்டு நடத்த மக்களிடம் நடத்த பணம் இல்லை . எனவே கிராமத்து ஆண்கள் எல்லாம் உலகம் முழுக்க கூலிகளாக வேலைக்கு போய் சம்பாதித்து பணம் அனுப்புகிறார்கள் .
வழக்கை ஒருங்கிணைத்து நடத்தும் ஜீவாவை போலீஸ் கைது செய்து கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறது . பிரச்னையின் தீவிரத்தை மீடியா உணராத நிலையில், அந்த கிராமத்து முதியவர்கள் ஆறு பேர் லோக்கல் டி வி நிருபரின் கேமரா முன்பாக கூட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விளைவாக மக்களின் கவனத்துக்கு விஷயம் போய் அதனால் உயிர் தப்பிய ஜீவா, சென்னைக்கு வந்து முதியோர் இல்லம் நடத்தியபடி வெளிநாட்டில் இருந்து ஊர் மக்கள் அனுப்பும் பணத்தை வைத்து வழக்கை நடத்துகிறான்.
சம்மந்தப்பட்ட மல்டி நேஷனல் கம்பெனி முதலாளி (நீல் நிதின் முகேஷ்) ஜீவாவையும் விலைக்கு வாங்க முயன்றும் முடியாத நிலையில் அவனை கொலை செய்ய முயல்கிறான்.
அதே நேரம்……
கல்கத்தா சிறையில் இருந்து தப்பிக்கும் கதிரேசன் என்ற கத்தி (அசைவ விஜய் ) சென்னைக்கு வந்த நேரம், அவன் கண் முன்னாள் ஜீவா மீது துப்பாக்கி சூடு நடக்கிறது . அவன் இறந்து விட்டதாக எண்ணி சுட்டவர்கள் போய்விட , ஜீவாவை காப்பாற்றும் கதிரேசன் அவனை மருத்துவமனையில் சேர்க்க , பின்னாலேயே வரும் கல்கத்தா போலீஸ் ஜீவாவை தூக்கிக் கொண்டு கல்கத்தா போய் விடுகிறது .
ஜீவாவின் இடத்துக்கு வரும் கதிரேசன் அங்கே கலெக்டர் மூலம் வரும் 25 லட்ச ரூபாய் , வழக்கை வாபஸ் பெற மல்டி நேஷனல் கம்பெனி பேசும் பேரத் தொகையான 25 கோடி ரூபாய் பணம் இவைகளை சுருட்டிக் கொண்டு ஓட முயல , அடுத்து என்ன நடக்கிறது என்பதே கத்தி .
நம் நாட்டு அரசியல்வாதிகளின் பெரும்பணப் பேராசை காரணமாக அயல்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நமது மக்களை நமது அரசே அடிமையாக்கும் ஏற்பாடுகளில் ஒன்றான தண்ணீர் அரசியலை எடுத்துக் கொண்டு படம் எடுத்ததற்காக கதாசிரியர் முருகதாசுக்கு முதல் பாராட்டு .
”மொதலாளிங்க கேட்கற அந்த பெரிய விலைக்கு நிலத்தை வித்து பணத்தை தரலைன்னா, உங்க பொண்ணுகளை நீங்களே வச்சுக்குங்க” என்று இந்த ஊரில் இருந்து வாக்கப்பட்ட பெண்களை கொண்டு வந்து விட்டு விட்டுப் போகும் ஆண்கள் என்று… மேற்படி கதையை வைத்து வாழ்வியல் கலந்து திரைக்கதை அமைத்த திரைக்கதை ஆசிரியர் முருகதாசுக்கு இரண்டாவது பாராட்டு .
நாற்பது காட்சியில் ஹீரோயிசம் காட்டினாலும் இது போலவே ஒவ்வொரு படத்திலும் நாலு காட்சியிலாவது கேரக்டர் காட்டுங்கள் . அந்த நாற்பது ஹீரோயிச காட்சிகளுக்கும் தனி மரியாதை கிடைக்கும் .
அதே நேரம் கதிரேசன் கேரக்டரில் வழக்கம் போல காமெடி மற்றும் அதிரடி ! தண்ணீரின் சிறப்பு , நம் நாட்டில் மூடப்பட்ட ஏரி குளங்கள் நீர் நிலைகளை பற்றி பத்திரிக்கையளர்கள் முன்னாள் விஜய் கொந்தளித்துப் பேசும் காட்சி… படத்தில் உள்ள மற்ற ஆக்ஷன் காட்சிகளை விடவும் ஆக்டிவான காட்சி

ஒரு திரைப்படத்தின் நோக்கம் சும்மா வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் பார்க்காமல் வெகு ஜன மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர வேண்டிய ஒரு விசயத்தை முக்கிய கதையாக வைத்து படம் எடுத்த படக்குழுவுக்கு தரலாம் ஒரு ராயல் சல்யூட்
————————————————–