மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து எழுதி இயக்க, கார்த்தி , அதிதி ராவ் ஹைதரி, ருக்மினி விஜயகுமார்,
ஆர் ஜே பாலாஜி, டெல்லிகணேஷ் நடிப்பில் வந்திருக்கும் படம் காற்று வெளியிடை . படவெளி எப்படி இருக்கிறது . பார்க்கலாம் .
கார்கில் போரின்போது, இந்திய விமானப்படை போர் விமானி வி சி என்கிற வருண் சக்கரபாணி (கார்த்தி ) செலுத்தும் போர் விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுடப்பட்டு,
விமானியைக் காக்கும் தொழில்நுட்பப் படி , பாராசூட் விரிய , உயிர் பிழைக்கும் வருண் பாகிஸ்தான் எல்லைக்குள் தரை தொட்டு ராவல் பிண்டி சிறையில் அடைக்கப்படுகிறார்.
தப்பிக்க நினைக்கும் அவரது உணர்வுகளுக்கு இடையே , பிளாஷ் பேக்காக அவரது காதல் வாழ்க்கை விரிகிறது .
ஸ்ரீநகர் பொது மருத்துவமனையில் வேலைக்குச் சேரும் அந்த இளம் பெண் டாக்டர் (அதிதி ராவ் ஹைதரி ) , எதிர்கொண்ட முதல் நோயாளியே,
ஒரு விபத்து காரணமாக மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வருண்தான் .
சிகிச்சையில் குணம் ஆன நிலையில் வருணுக்கு அவள் மேல் காதல் வருகிறது . அவளுக்கும் ஒரு நிலையில் காதல் முகிழ்க்கிறது .
வருணிடம் இருக்கும் ஆணாதிக்க மனோபாவம், முரட்டுத் தனம் பொறுமை இன்மை, பெண்கள் மீதான அலட்சியம் போன்ற காரணங்களால் இருவருக்கும் விரிசல் துவங்குகிறது .
காதலும் விரிசலும் மாறி மாறி போராடும் வேளையில் இருவரின் உடல் கலப்பும் நிகழ்கிறது .
வயிற்றில் குழந்தை உருவான நிலையில் , ‘நான் உனக்கு தகுதியான கணவனாக மாறும் வரை குழந்தை வேண்டாம் ‘ என்று வருண் கூற, அவள் மனம் உடைகிறாள் .
ஒரு நிலையில் அவளது பெற்றோருக்கும் வருணைப் பிடிக்காமல் போக, வருணைப் பிரிந்து ஸ்ரீநகரை விட்டு வெளியேற முடிவு செய்து ,
அதை சொல்லி விட்டுப் போக வர, அதை மறுக்கும் வருண் போர் காரணமாக போர் விமானத்தில் ஏற,
அந்த நிகழ்வில்தான் பாகிஸ்தான் ராணுவத்தால் உயிர் தப்பி , பாகிஸ்தானில் சிறைபட்டு இருக்கிறான் வருண் . தன் காதலியை ஒரு முறையாவது சந்தித்து மன்னிப்புக் கேட்கவாவது துடிக்கிறான்
இந்த நிலையில் இந்தியாவுக்கு தப்ப முயன்ற வருணின் முயற்சி என்ன ஆனது . அவளை சந்திக்க முடிந்ததா என்பதே இந்த காற்று வெளியிடை
ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இளமை துள்ளும் படத்தோடு, மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார் மணிரத்னம் .
போர் விமானத்தில் பறக்கும் காதலன் , கீழே இருந்து பார்த்து சிலிர்க்கும் காதலி என்று ராஜ காதல் . இதெல்லாம் அவருக்கு மட்டுமே சாத்தியம்.
சின்னச் சின்ன உணர்வுகளோடு தனக்கே உரிய அட்டகாசமான மேக்கிங்கில் சின்னச் சின்ன காட்சிகளைக் கூட பிரம்மாதப் பிரம்மாண்டப்படுத்தி உள்ளம் கொள்ளை கொள்கிறார் .
ஸ்ரீநகர் பசுமை, லே பகுதியின் பனிப் புயல் பகுதி, , ஆப்கானிஸ்தான் பொட்டல் மலைகள் என்று விதம் விதமாய் திரவியமாய் தேடிய லொக்கேஷன்களில்,
அவர் பார்த்துப் பார்த்து வைத்திருக்கும் ஃபிரேம்களை பரவசமாய் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . சிலிர்ப்பு.
காதலியின் பெற்றோருடனான மோதல் காட்சியில் ஒரு சாப்பாட்டுத் தட்டு மட்டும் கவிழ்த்து வைக்கப்பட்டு இருக்கும் சிம்பாலிசம்,
காதலர் பிரிவுக் காட்சியில் விமானங்கள் மூலம் மன இரைச்சலை வெளிப்படுத்துவது.. இவை எல்லாம் உலகத் தரமான டைரக்ஷன் . சூப்பர் இயக்குனரே !
வசனமும் இயக்கமும் மணியும் ரத்னமுமாய் ஜொலிக்கின்றன . அதுவும் வசனத்திலும்(ஊழ்) பாடலிலும் (நல்லையல்லை ) பழந்தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பது சிறப்பு .
நவீன மேக்கிங்கில் காலத்தை வென்ற அந்த வார்த்தைகள் வரும்போது நவீனம் தன்னை கம்பீரப்படுத்திக் கொள்கிறது .
கார்த்தியை முற்றிலும் மாற்றிக் கொடுத்து இருக்கிறார் . ‘அதிதி’யை ‘தேவோ பவ’ என்பது போல ஜொலிக்க வைக்கிறார்
ஏ ஆர் ரகுமானின் இசையில் சாரட்டு வண்டியில பாடலை முணுமுணுக்காத வாயில்லை . பின்னணி இசையில் மொழி, கலாச்சாரம், இடம் தேசம்
இவற்றுக்கு ஏற்ற இசையை கொடுத்து படத்துக்கு ரத்த ஓட்டமாய்ப் பாய்கிறார் ரகுமான்
ரவி வர்மனின் ஒளிப்பதிவு இன்னும் காயாத ஈர வண்ணத்து அழகிய ஓவியம் போல மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது . ஒலி வடிவமைப்பு அருமை .
இயக்குனர் சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளையாக கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார் கார்த்தி . இது அவர்தானா என்று உற்றுப் பார்த்து உறுதி செய வேண்டிய அளவுக்கு வேறு விதமான உடல் மொழிகள் .
புதுசாப் போட்ட ஊறுகாயின் முழுசா ஊறாத எலுமிச்சம்பழத் துண்டு மாதிரி மின்னுகிறார் அதிதி ராவ் ஹைத்ரி . நடிப்பில் தெரிகிறது உற்சாகத் துடிப்பு .
ருக்மிணி விஜயகுமார் என்ரஜியாக நடிக்கிறார் . பஞ்ச டயலாக் இல்லாத ஆர் ஜே பாலாஜி . (பத்து ஜோக் அடிச்சா ஒன்னுதான் ஒர்க் அவுட் ஆகும் முடிலன்னா சிரிக்காதீங்க ” என்ற இடம் மட்டும் விதி விலக்கு. )
ஒரு பாட்டு ரெண்டு சீன் உடனே ஒரு பாட்டு என்று படம் போகிற இடங்களில் எல்லாம் திரைக்கதை நொண்டி அடிக்கத்தான் செய்யது .
திரைக்கதைப் போக்கில் அடுத்தடுத்து வரும் பகுதிகளை இணைக்க, கதையில் கால இடைவெளியும் படத்தின் நீளத்தில் நேர இடைவெளியும் தேவைப்படும் இடங்களில் கொஞ்சம் போராடித்தான் போகிறது படம்
போர் விமானிகளின் சகஜ கால மன நிலை என்பது கூட ஒரு வித்தியாசமான விசயம்தான் . ஆனால் வருண் அளவுக்கு பக்குவம் இல்லாத ஒருவன் எப்படி போர் விமானியாக முடியும் வாத்தியாரே ?
பெண்களை கேவலாமாக பேசுகிறான், காதலியை பொம்மையாகப் பார்க்கிறான் . உதவிக்கு வரும் நண்பனோடு அவளை சேர்த்து வைத்து அசிங்கமாகப் பேசுகிறான் .
ரிஜிஸ்தர் மேரேஜ் செய்து கொள்ளலாம் என்று தானே வற்புறுத்தி வரச் சொல்லி விட்டு , வராமல் தவிர்க்கிறான் . என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு,
சாரி என்ற வார்த்தையில் எல்லாவற்றையும் நியாயப்படுத்த முடியும் என்று நம்புகிறான் .காதலியை கர்ப்பமாக்கி விட்டு , தான் தகுதியில்லாதவன் என்று உளறுகிறான்
(இத்தனைக்கும் அவனது அண்ணன் தனது காதலியை கர்ப்பிணிக் கோலத்தில்தான் வீட்டின் சம்மதத்தோடு கல்யாணம் செய்து கொள்கிறான் ),
‘பயபுள்ள… இவன் பாகிஸ்தான்லையே சாவட்டும்’ என்று நமக்கே தோணுது .
எதுக்கு இப்படி ஒரு கேரக்டர் அசாசினேஷன் ?
வருணும் அவன் அப்பாவும் மருத்துவமனையில் ரொம்ப லோக்காலாக அடித்துக் கொள்கிறார்கள் . வருணை சைவப்பிள்ளை வகுப்பை செர்ந்தவர்வ் என்று அடையாள படுத்துகிறார் .
அதிதி மட்டும் கீர்த்தனை பாடும் கிறிஸ்தவப் பெண்ணாக இருக்கிறார் . என்னமோ சொல்ல வர்றிய . எங்க சிற்றறிவுக்கு புரியல வாத்தியாரே !
“தமிழ்ப் பொண்ணுன்னா போராட வேண்டாமா . நீ கம்முன்னு போற ” என்று கிண்டல் செய்கிறான் வருண் . எனில் அந்த நாதாரி யாரு ? நாதாரிப் பய .. நாதாரிப்பய …
டேக் டைவர்சனில் பாகிஸ்தான் கொடியை அடிச்சு ஏத்தும் வண்டி , மணிரத்னத்தின் ஊமைப் புன் முறுவல் .
பாலை வானத்துக் கிளைமாக்ஸ் ஒரு பாச நதிக் கவிதை .
குழந்தையைப் பார்த்த கொஞ்ச நேரம் விபரீதமாக யோசிக்க வைத்து அப்புறம் உணர வைப்பதில் மணிரத்னம் டைரக்ஷன் மகுடம் சூடுகிறது .
குழந்தையைப் பார்த்த முதல் நொடியிலேய விபரீதமாக யோசிக்காமல் சரியாக யோசித்தால் நீங்கள் உலகத்திலேயே நல்ல காதலர் அல்லது நல்ல காதலியாக இருக்கத் தகுதியானவர்
மொத்தத்தில் காற்று வெளியிடை … காதல் நிலம்











