இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் உதவியாளர் மோகன் நடத்திய கே பி 90 நிகழ்ச்சியில் பல திரைப்ப்பிரபலங்கள் !
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, ” ஆன்மீக ஆத்திக வைதீக பிராமண குடும்பத்தில் பிறந்த பாலச்சந்தர் தான் இயக்கிய முதல் படத்துக்கு செண்டிமெண்டை உடைத்து நீர்க்குமிழி என்று பெயர் வைத்தார் . அன்று அதற்கு பெரிய தைரியம் வேண்டும். மங்களகரமான பெயர்கள் வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் யாரும் நூறு படங்களை இயக்கவில்லை . நீர்க் குமிழி என்று பெயர் வைத்துப் படம் எடுத்த பாலச்சந்தர்தான் நூறு படங்களை இயக்கினார்
ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றினேன். ஒரு நிலையில் அந்த இசையமைப்பாளருடன் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
என்ன செய்வது என்று அறியாமல் ஏழு ஆண்டுகள் இருந்தேன் . காரணம் நான் பிரிந்த அந்த இசை அமைப்பாளரின் திறமையும் ஆளுமையும் பெரியது .
அந்த ஏழு ஆண்டுகளில் ஒரு நல்ல இசை அமைப்பாளரை உருவாக்குவோம் என்று எண்ணி முப்பத்தி ஏழு இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றினேன். யாரும் சோபிக்கவில்லை .
அந்த நிலையில் ஒரு நாள் பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்தது . போனால் திலீப் என்ற புது இசை அமைப்பளார் . பாலச்சந்தரிந மூன்று படங்களுக்கு என் பாடல். திலீப்பின் இசை . மூன்று படத்திலும் பாடல்கள் ஹிட் . திலீப்தான் ஏ ஆர் ரகுமான் . மீண்டும் களம் எனக்கு வந்தது .
திரையுலகில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா . மீட்டெடுத்தவர் பாலச்சந்தர் .
புன்னகை மன்னன் படத்தில் என்ன சத்தம் இந்த நேரம் பாடலில் ஆதரவாய் சாய்ந்து விட்டாள் ஆரிரரோ பாடு என்ற வரிகளின் கேமராவை தாலாட்டிய தொழில் நுட்ப மேதை அவர் .
பாலச்சந்தரின் சாதனைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அதை அரசே செய்ய வேண்டும் . பாலச்சந்தர் மட்டுமல்ல பல சாதனையாளர்களின் சாதனைகளும் ஆவணப்படுத்தப்பட வேண்டும் . அது பாலச்சந்தரில் இருந்து துவங்க வேண்டும் ” என்றார்.

முன்னதாகப் பேசிய சிவகுமார் ” பாலச்சந்தர் இயக்கிய படங்களில் அவருக்கு பிடித்த ஐந்து படங்களில், மூன்று படங்களில் நான்தான் ஹீரோ. இதை விட ஒரு பெருமை வேண்டுமா.? என் வாழ்வில் நான் ரசித்த, நான் நெகிழ்ந்த, நான் மகிழ்ந்த இயக்குனர் பாலசந்தர்..
வளரும் இயக்குனர்கள் பலர், இவரது வாழ்க்கை வரலாறை எடுத்து பார்த்தாலே போதும், ஒரு நல்ல இயக்குனருக்கான அங்கீகாரத்தை நீங்கள் பெறுவீர்கள்.
காதல் கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக அவர் உருவாக்கிய படம் தன் ‘அக்னி சாட்சி’. அதை விட தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தை வேறு எந்த இயக்குனரும் இயக்கிவிட முடியுமா.? .
அவரது இடத்தை வேறு யாரும் பூர்த்தி செய்ய முடியாது.” என்றார்
அதே நாளில் பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனம் சார்பில் நடத்திய இன்னொரு விழாவில் ஆர் பார்த்திபன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா , இயக்குனர் சரண், சுகாசினி , இயக்குனர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்