இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் படம் ‘குற்றம் 23’. துப்பறியும் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதிய ஒரு நாவலுக்கு திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அறிவழகன்.
படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பாடல்களை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட ஜெயம் ரவி பெற்றுக் கொண்டார்.
விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி , மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் – நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்,
நடிகர்கள் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குற்றம் 23′ படத்தின் கதாநாயகன் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன், நடிகர் விஜயகுமார், குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும், ரெதான் – தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் உரிமையாளருமான இந்தெர் குமார்,
கதாநாயகி மஹிமா நம்பியார், அபிநயா, வம்சி கிருஷ்ணா, அரவிந் ஆகாஷ், அமித் பார்கவ், சுஜா வருணி, மிஷா கோஷல், சஞ்சய் அர்சாணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்,
ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் ஆகியோரும் !
மரபணு வடிவமான டி என் ஏ ( டி ஆக்சி ரிபோ நியூட்ரிக் ஆசிட் ) வடிவத்தின் பின்னணியில் விரியும் முன்னோட்டம் அட்டகாசமாக இருக்கிறது .
“ஒயிட் காலர் கிரிமினல் மாதிரி நான் கிரீன் காலர் கிரிமினல் ” என்ற வசனம் . மருத்துவம் தொடர்பான குற்றங்கள் பற்றிய படம் இது என்பதை உயர் தரத்தில் விளக்குகிறது .
பால் வெள்ளைப் பின்னணியில் அடர் கறுப்பு எழுத்துக்களில் வரும் கிரடிட் லைன் அசத்தல் . மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் அறிவழகன் .
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். பேசும்போது “மனதில் வரைந்து வைத்திருக்கும் சித்திரத்தை அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குனர் அறிவழகன்.
அவருடைய காட்சிகளுக்கு நான் எப்போதுமே ரசிகன்..கலைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் அருண் விஜய் மற்றும் அறிவழகனின் கூட்டணியில் உருவாகி இருக்கும்,
இந்த குற்றம் 23 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன்.
இந்த இடத்தில் ஒரு முக்கிய விசயத்தை குறிப்பிட விரும்புகிறேன் சினிமாவுக்காக தனியே ஒரு பேங்க் ஆரம்பிக்க வேண்டும் . வெளிநாடுகளில் இது இருக்கிறது . இந்தி சினிமாவில் வரப் போகிறது .
500 கோடி ரூபாய் இருந்தால் ஒரு வங்கி ஆரம்பித்து விட முடியும். அதை படங்களுக்கு என்று நியாயமான வட்டியில் கடன் கொடுக்க முடியும்.
பெரும் வட்டி கட்டி தயாரிப்பாளர்கள் பலரும் அழிந்து கொண்டு இருக்கும் நிலையில் இது மிக அவசியம் ” என்றார்
இயக்குனர் சசி தனது பேச்சில்
“சினிமா எனபது இயக்குனருக்கான மீடியம் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட சில இயக்குனர்களில் அறிவழகனும் ஒருவர் .
தனது ஈரம் படம் முதல் அவர் அதை சரியாக செய்து வருகிறார் . இந்தப் படத்தின் முன்னோட்டமும் அப்படியே சிறப்பாக இருக்கிறது ” என்றார்
இயக்குனர் மகிழ் திருமேனி பேசும்போது ” தனது முதல் படமான ஈரத்தில் இருந்தே தனது முத்திரையை அழகாகப் பதித்து வருபவர் அறிவழகன் .
ஈரம் படத்தில் தண்ணீர் ஓடும் பரப்பின் மேலே காலடி மட்டும் பதிவதை காட்டி , அமானுஷ்யத்தை இப்படியும் காட்டலாம் என்று நிரூபித்தவர் அவர் .
இந்தப் படத்திலும் முத்திரை பதிப்பார் என்பது முன்னோட்டத்தில் தெரிகிறது ” என்றார்
“இந்த குற்றம் 23 படத்தின் இசை வெளியீட்டிற்கு வருவதற்காக நான் பல பொய்களை என்னுடைய இயக்குனரிடம் கூறலாம் என யோசித்து வைத்திருந்தேன்.
ஆனால் அந்த கடவுளே எனக்கு இந்த விழாவில் பங்கேற்க வழிவகுத்து தந்து விட்டார்…
ஒரு கதாநாயகனாக வெற்றி மகுடத்தை இந்த ‘குற்றம் 23’ படத்தின் மூலம் அருண் விஜய் சூடுவார் என்ற நம்பிக்கை எனக்கு பெருமளவில் இருக்கின்றது….” என்று கூறினார் நடிகர் ஜெயம் ரவி
“நான் பார்த்து வியப்படைந்த நடிகர்களில் என்னுடைய விக்டரும் (அருண் விஜய்) ஒருவர்… எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட தருணத்திலும் நடிக்க கூடிய ஒரு நடிகர் அருண் விஜய்…
ஓடும் ரயிலில் ஏற வேண்டும் சொன்னால் ஏறுவார், கடலுக்குள் குதிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட குதித்து விடுவார்.
இப்படி நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு கலைஞன் அருண் விஜய்.
அதே போல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் திறமை படைத்தவர் இயக்குனர் அறிவழகன்.
இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, எனக்கு பிடித்தமான போலீஸ் கதையை மையமாக கொண்டு ‘குற்றம் 23’ படத்தை உருவாக்கி இருக்கின்றனர்
குற்றம் 23 படம் உருவாக காரணமாக இருந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….”என்றார் கெளதம் வாசுதேவ் மேனன்.
அருண் விஜய் பேசும்போது ” இயக்குனர் அறிவழகன் தன முழு உழைப்பையும் கொட்டி இந்த படத்தை கொடுத்து இருக்கிறார் . அவருக்கு மனப்பூர்வமான நன்றி ” என்றார்
இயக்குனர் அறிவழகன் தனது பேச்சில் ” நான் சினிமாவில் சாதித்த முக்கியமான விஷயம் இத்தனை நல்ல உள்ளங்கள் இந்த மேடைக்கு வந்து இருப்பதுதான் .
நான் இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் நிறைய கற்றுக் கொண்டாலும் , நம்மை புரிந்து கொண்டு செயல்படுகிற டெக்னீஷியன்களை வைத்துக் கொள்வதன் அவசியத்தை
நான் மணிரத்னம் , கவுதம் மேனன் அகியோரிடம்தான் கற்றுக் கொண்டேன் . அந்த வகையில் கவுதம் மேனன் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது .
எங்க டைரக்டர் ஷங்கர் அடிக்கடி சொல்வார் ” ஒரு படம் எனபது ஒரு வீடு மாதிரின்னா , அதுக்கு நாம ஒரு செங்கலாவது வச்சோம் என்ற திருப்தி ஒவ்வொரு அசிஸ்டன்ட் டைரக்டருக்கும் வரணும் அப்படின்னு .
அந்த வகையில் எனக்கு அமைந்த அசோசியேட் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குனர்கள் உழைப்பு சிறப்பானது .
அருண் விஜய் நடிகராக மட்டுமல்லாது , பணம் போட்ட தயாரிப்பாளராக மட்டும் சும்மா இல்லாமல் ஒவ்வொரு விசயத்திலும் தன் முழு உழைப்பையும் கொடுத்தார் . இது போல நல்ல தயாரிப்பாளர் அமைவது அரிது ” என்றார் .
சிறப்பு .