‘ரெஃபெக்ஸ் குரூப்’, நிறுவனத்தின் ‘ரெஃபெக்ஸ் எண்டர்டெயின்மண்ட்’ நிறுவனம் மூலமாக அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் ஆகியோர் இணைந்து ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் மொழிகளில் தயாரிக்க,
மம்முட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மான் நடித்திருக்கிறார். மேலும் தீப்தி சதி, சாய் தன்ஷிகா, ஆர்த்தி வெங்கடேஷ், நேகா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், சாய் தம்கன்ஹர் ஆகியோர் நடிக்க,
பாலிவுட்டின் திரைக்கதை எழுத்தாளரும், தமிழில் வெளிவந்த ‘டேவிட்’ மற்றும் ஹிந்தியில் வெளிவந்த ‘ஷைத்தான்’,
அமிதாப்பச்சன் நடித்த ‘வாசிர்’ போன்ற படங்களை இயக்கிய பெஜோய் நம்பியார் இயக்கியுள்ள படம் சோலோ

இந்த படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் (அப்போ படத்துல யாருமே சோலோ இல்ல ) மற்றும் 15 பாடல்கள் உள்ளன
துல்கர் சல்மானின் பிறந்த நாளன்று நடந்த இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கலந்து கொண்டனர்.
படம் குறித்து பெஜாய் நம்பியார் பேசுகையில், “துல்கர் சல்மான் போன்ற அபரிமிதமான நடிப்பு திறன் கொண்ட ஒரு நடிகருடன் பணிபுரிய ஆவலோடு இருந்தேன்.
இக்கதையை அவருக்கு கூறியபொழுது, அவரை அது மிகவும் கவர்ந்தது. இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். இப்போது படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகளும் முடியும் தறுவாயில் உள்ளது.
இந்த ‘சோலோ’ திரைப்படம்தான் என் முதல் , உண்மையான தென்னிந்திய படம். நான் ஏற்கெனவே இயக்கிய ‘டேவிட்’ திரைப்படம் பாதி டப் செய்யப்பட்ட படம்.
‘சோலோ’வை தமிழ் மற்றும் மலையாளத்தில் தனித்தனியாக படம் பிடித்திருக்கிறோம். நிச்சயமாக இது டப்பிங் படம் கிடையாது..” என்றார்
அடுத்து பேசிய படத்தின் ஹீரோவான துல்கர் சல்மான், “தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் எப்போதும் எனக்கு ஊக்கம் அளிக்கிறார்கள்.
எனக்கு இதுவரை கிடைத்த படங்கள், இயக்குநர்கள் எல்லாமே நல்லதாகவே அமைந்திருக்கின்றன. நானும் நல்ல படங்களை மட்டுமே கொடுக்க முனைகிறேன்.
இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை எடுப்பது 8 படங்களில் நடிப்பதற்கு சமம். என் மூன்று தமிழ்ப் படங்களின் விழாக்களிலும் மணிரத்னம் சார் இருந்திருக்கிறார்.
அவருக்கு என் நன்றி. இதனை நான் மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன்…” என்றார்.
“இரண்டு மொழிகளிலும் சேர்த்து இந்த படத்தில் மொத்தம் 30 பாடல்கள். நாங்கள் 1 பாடல் எடுக்கவே ரொம்ப கஷ்டப்படுகிறோம்.
ஆனால் இவர்கள் இவ்வளவு தைரியமாக கடும் உழைப்பில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனன்.
“இப்போது இங்கே பிஜாய் நம்பியார் காட்டியதுதான் ஒரு சினிமாவின் உண்மையான முன்னோட்டம். இந்த முன்னோட்டம் அருமையாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கிறது…” என்றார் இயக்குநர் மணிரத்னம்.
”ஒரு தொழிலாக பார்க்கும் பொழுது சினிமா துறையின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது.சரியான செயல்முறையும் அதற்கான திறமைவாய்ந்த நபர்களும் ஒன்றுசேருவதால் இது லாபகரமான தொழிலாகிறது.
மிகப்பெரிய இயக்குனராக எல்லா தகுதிகளையும் கொண்ட பெஜாய் நம்பியாருடன் இணைவதில் எங்களுக்கு மற்றற்ற மகிழ்ச்சி.
எல்லை , மொழி வேறுபாடுகளை தாண்டி ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் துல்கர் சல்மானுடன் அவர் இணைவதால்,
‘சோலோ’ அனைவரையும் கவரும் படமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம்” என்கிறார் ‘The Refex entertainment” நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின்