விஜய சிவன் என்பவர் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, உடன் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்ரவர்த்தி, நமோ நாராயணன் நடிப்பில் ஸ்ரீகுமாரின் எழுத்தில் என் பிரகாஷ் என்பவர் இயக்கி இருக்கும் படம் . நன்றாகப் பெயரைப் படிக்கவும் . குடிமகன் அல்ல குடிம’கா’ன்.
எப்போதும் போதையில் இருக்கும் அப்பாவின் (சுரேஷ் சக்ரவர்த்தி) தொந்தரவுகளை சகித்துக் கொண்டு ஏ டி எம் மெஷின்களில் பணம் நிரப்பும் வேலை செய்து கொண்டு மனைவி ( சாந்தினி) மற்றும் குழந்தைகளோடு , நல்ல பெயரோடு கைக்கும் வாய்க்கும் போதாத வாழ்க்கை வாழ்ந்து வரும் மதி என்ற நபருக்கு ( விஜய சிவன்) Auto-brewery syndrome or gut fermentation syndrome என்ற, ஓர் அரியவகை நோய் நோய் வருகிறது .
அதன் படி டீ, கூல் டிரிங்ஸ் என்று எது குடித்தாலும குடலுக்குள் நொதித்தலில் சிக்கல் ஏற்பட்டு எத்தனால் உற்பத்தி ஆகும் . பீர் , பிராந்தியில் இருக்கிற- சர்க்கரை கழிவுப் பாகில் இருக்கிற அதே எத்தனால் !
விளைவு அவனும் குடிகாரனைப் போல நடந்து கொள்வான் . கலாட்டா செய்வான் . (சினிமாவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தல்)
ஒருமுறை ஏ டி எம்மில் பணம் நிரப்பிக் கொண்டு இருக்கும் போது Auto-brewery syndrome வந்து நூறு ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய தட்டில் ஐநூறு ரூபாய் நோட்டை வைத்து நிரப்பி விடுகிறான் .
ஏ டி எம்முக்கு வந்து ஐநூறு ரூபாய் பணம் எடுக்க பட்டன்களை அழுத்துபவருக்கு எல்லாம் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளுக்குப் பதில் ஐந்து ஐநூறு ரூபாய் நோட்டுகள் போக, ஆனால் பணம் எடுப்பவர்களின் வங்கிக் கணக்கில் அவர்கள் பட்டன் அனுப்பிய தொகை மட்டும் போக, மின்சாரம் போனதால் யார் யார் பணம் எடுத்தார்கள் என்ற தகவலைப் பெறுவதில் சிரமம் ஏற்பட , அதனால் அவருக்கு வேலை போக,
அப்பாவும் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு வர ,
நாயகனுக்கு உதவ ஒரு குடிமகன்கள் சங்கம் உதவ, என்ன நடந்தது என்பதே குடிமகான்.
வித்தியாசமான கதை பிடித்து இருக்கிறார்கள் . பாராட்டலாம் . ஸ்ரீகுமாரின் வசனங்களும் பல இடத்தில் பலே .
நடிப்பில் எல்லோரும் ஒகே . தலையில் முடி இல்லாத நடுத்தர வயது குடும்ப நண்பராக லவ்லி ஆனந்த் அசத்துகிறார்
இரண்டாவது பகுதியை நகைச்சுவையாகக் கொண்டு போக முயன்று இருக்கிறார்கள் . சில இடங்களில் வெற்றியும் கிடைத்து உள்ளது . அதே நேரம் இன்னொரு பக்கம காமெடி என்ற பெயரில் எதாவது பேசுவது அதிகரித்து விட்டது.
தவிர இன்னும் வயிறு கடமுடா, மலம் கழிப்பதை எல்லாம் வைத்து காமெடி செய்வது மல நாற்றத்தை விட கெட்ட நாற்றமகி விட்டது .
திரையில் சொல்லப்படாத நோயைப் பிடிக்கத் தெரிந்தவர்களுக்கு அதற்கேற்ற திரைக்கதை மற்றும் படமாக்கலை கொடுக்கத் தெரியவில்லை.