ஆடுகளம் முருக தாஸ், பேபி பிரதிக்ஷா, வெலினா, பக்ஸ் நடிப்பில் ஹென்றி எழுதி இயக்கி இருக்கும் படம்.
செல்போன் சர்வீஸ் கடை வைத்து பிழைக்கிற , மகள் ( பிரதிக்ஷா) அதிகப் பாசம் கொண்ட தகப்பனுக்கு (முருகதாஸ்) மகள் என்ன கேட்டாலும் மறுக்க மனம் வராது.. குழந்தைக்கு யதார்த்தம் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று மனைவி (வெலினா) சொல்லும் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை .
பள்ளியில் உடன் படிக்கும் பணக்கார சிறுவனுக்கும் , மகளுக்குமான ஏட்டிக்குப் போட்டி சண்டையில், அவனது பிறந்த நாள் விழாவுக்கு அவனது வீட்டுக்குப் போகும் மகள், திரும்பி வந்ததும் அவனுக்கு இருப்பதைப் போலவே பல கோடி மதிப்புள்ள வீடு வாங்க வேண்டும் என்கிறாள் .

அது முடியாது என்று மகளிடம் சொல்ல மனம் வராமல் , வாங்கித் தருகிறேன் என்று தகப்பன் அடுத்தடுத்து பொய்கள் சொல்ல, ஒரு நிலையில் தள்ளிப்போவது தாங்க முடியாமல் மகளுக்கு உடல் நிலை சரி இல்லாமல் போக , அதற்குப் பிறகு முடியாது என்ற வார்த்தையை மகளிடம் சொல்ல முடியாமல் தந்தை பொய்களையேதொடர, கடைசியில் என்ன ஆனது என்பதே படம்.
ஒரு எளிய குடும்பத்தையும் , அந்தச் சூழலையும் அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் ஹென்றி. . முருகதாஸ், வெலினா,, பக்ஸ் ஆகியோர் மிக இயல்பாக அருமையாக நடித்துள்ளனர் . சிறுமி பிரதிக்ஷா பிரம்மிப்பூட்டும்படி அற்புதமாக நடித்துள்ளார் .
சில பேர் கேட்டால் அவர்கள் என்ன கேட்டாலும் இல்லை என்றே சொல்ல முடியாது என்ற சூழலை மனிதர்கள் பலரும் சந்தித்து இருப்போம் . அப்படி ஒரு சூழலை , வசனம், தொனி, நடிப்பு, இயக்கம் இவற்றின் மூலம் அற்புதமாக உருவாக்குகிறது முருக தாஸ், பேபி பிரதிக்ஷா, ஹென்றி கூட்டணி .சபாஷ் .

அதுவும் பக்ஸ் கதாபாத்திரத்தை சிறுமி தன் பக்கம் இழுக்கும் காட்சி எல்லாம் அபாரம் .
ஆனால் ஒரு நிலைக்கு மேல் அதே நிலை தொடர்வது இதை யதார்த்தம் இல்லாத சினிமாவாக மாற்றி விட்டது . . மழைக் காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் ஜன்னி வந்து விடும் என்ற உடல் நிலையில் உள்ள குழந்தை ஐஸ்கிரீம் கேட்டால் வாங்கித் தருவது பாசமா ? மறுப்பது பாசமா என்ற கேள்வியில் இருக்கிறது இந்தப் படத்தில் வரும் அப்பா கேரக்டரின் யதார்த்தம் .
ஒரு நிலையில்,சொல்லக் கூடாத கதையைப் பார்த்துக் கொண்டு இருகிறோமோ என்ற என்ன கூட ஏற்படுகிறது . . ஆனால் கிளைமாக்சில் போராடி முயன்று படத்தைக் காப்பாற்றி விட்டார்கள் . ஒரு நெகிழ்வான படமாக முடிகிறது இந்தப் படம்.

வித்தியாச செல்பி எடுக்க வேண்டும் என்று வம்படியாக தேவை இன்றி மலை உச்சிக்குப் போய் அங்கிருந்து வழுக்கி விழுந்தவன் , தரையில் மோதிச் சிதறுவதற்கு சற்று முன்பு சரியாக ஒரு மரக் கிளையைப் பற்றி சிறு காயங்களோடு தப்பினான் என்றால்…. அவனைப் பாராட்டுவோமா? திட்டுவோமா?
அப்படிதான் இருக்கிறது ராஜா மகள்