வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்க, ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் லென்ஸ் .
ஃபோகஸ் எப்படி? பார்க்கலாம்
கட்டிய மனைவியைக் கூட(மிஷா கோஷல்) கண்டு கொள்ளாமல் , அறைக்குள் அடைந்து கொண்டு கம்ப்யூட்டர் முன்பு பழி கிடந்து ,
வெப் கேம், ஸ்கைப் மூலமாக பல பெண்களோடு ஆடை களைந்து ஆபாசமாகப் பேசி , இணைய வழி காமத்தில் ஈடுபடும் மலையாள இளைஞன் ஒருவன் ( ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன் )
அப்படி ஒரு பெண்ணோடு காமம் அனுபவித்ததைத் தொடர்ந்து மறுநாள் அதே போல வேறொரு நபரிடம் இருந்து இன்னொரு அழைப்பு .
பெண் என் நினைத்து லேப் டாப் முன் அமர்ந்தால்… குண்டு கண்களும் மொட்டை தலையும் ஊழிக் கோபமுமாக ஓர் ஆண் ( ஆனந்த் சுவாமி )
தான் இப்போது தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் லைவ் ஆக அதைப் பார்க்க வேண்டும் என்றும் அந்த லேப் டாப் வழி நபர் சொல்கிறான் .
பயந்து போன ஆன் லைன் பார்ட்டி மறுக்க , அடுத்து அவன் காட்டும் விஷயம் அதிர்ச்சி . முதல் நாள் தன்னோடு முக மூடி அணிந்து ஆன்லைன் காமம் செய்த பெண்ணின் முகமூடியும் உடைகளும் அவனிடம் .!
அப்போதும் இவன் மறுக்க, அடுத்த அதிர்ச்சி அவனது வீட்டுப் படுக்கை அறையில் இந்த ஆன்லைன் காமுகனின் மனைவி ( மிசா கோஷல்)
‘நான் இப்போது தற்கொலை செய்து கொள்வதை நீ கண்ணை எடுக்காமல் பார்க்க வேண்டும் . இல்லாவிட்டால் உன் மனைவியைக் கொன்று விடுவேன்’ என்று கூறும் அவன் அடுத்து சொல்லும் விஷயம் ..
“நான் இப்போது தற்கொலை செய்து கொள்ளக் காரணமே நீதான் ”
ஃப்ளாஷ் பேக் விரிய ,
தற்கொலை செய்து கொள்வதாக சொல்பவன் அப்போது அழகிய இளைஞனாக!
கேரள மாநிலம் மூணாறு சர்ச்சில் அவனுக்கும் வாய் பேச முடியாத ஆனால் கேட்கும் திறன் உள்ள ஓர் அழகிய இளம்பெண்ணுக்கும் (அஸ்வதி லால் ) திருமணம் .
அவர்கள் வீட்டில் நடக்கும் முதல் இரவில், வெளிச்சத்தில் உறவு கொள்ள அவள் விரும்ப, அப்படியே நடக்க , அது யூ டியூபில் லைவ் வீடியோவாக வருகிறது .
கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவளது மன அழுத்தம் காரணமாக கர்ப்பம் கலைகிறது . அவளுக்கு வெளிச்சமே பிடிக்காமல் போகிறது .
‘இணையத்தில் போட்ட வீடியோவை எடுக்க முடியாது . எனவே எங்களுக்கு பிள்ளைகள் பிறந்தால் வரும் காலத்தில் இதை வரும் காலத்தில அவர்கள் கூட பார்க்கலாம் .
வெளியே தலை காட்ட முடியவில்லை ‘என்று எழுதி வைத்து விட்டு அவள் தற்கொலை செய்து கொள்கிறாள் .
வீட்டில் அறையில் மற்றும் குளியல் அறையில் நடந்த உறவு எப்படி யூ டியூப் வரை போனது என்றால் .. வீட்டுக்கு மராமத்து பணிகள் செய்ய வரும் பிளம்பர்கள் எலெக்ட்ரீசியன்கள் வேலை செய்வது போல ,
அப்படியே சிறு கேமராவை பொருத்தி விட்டுப் போவதன் மூலமும் மறுமுறை வேலைக்கு வரும்போது அதை எடுத்துக் கொண்டு போவதன் மூலமும் நடக்கிறது .
சரி… இந்த அக்கிரமத்துக்கும் அதனால் ஓர் பெண் இறந்து போனதற்கும் , ஆன் லைன் சாட்டிங் காமம் செய்யும் நபருக்கும் என்ன சம்மந்தம்?
அவனுக்கு என்ன தண்டனை ? அவன் மனைவிக்கு என்ன ஆச்சு ?
எதிர்முனையின் இருக்கும் பாதிக்கப்பட்டவன் தற்கொலை செய்து கொண்டானா என்பதே இந்தப் படம் .
சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்பார்கள் . குறிப்பிட்ட வயசில் அதற்கான அடிப்படை விஷயங்கள் தெரிந்தாலே போதும் . மற்றபடி ஆபாசப் படம் பார்த்துதான் காமம் கற்க வேண்டும் என்பது அவசியம் இல்லை .
இன்னொன்று அதிகமாக ஆபாசப் படம் பார்ப்பவர்கள் நிஜ தாம்பத்யத்தை முழு திருப்தியாக அனுபவிப்பதில் சோடை போய் விடுகின்றனர் என்று மருத்துவமும் சொல்கிறது
இதை எல்லாம் மீறி பார்க்க வேண்டும் என்றாலும் அதை ஒரு தொழிலாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களை பார்த்துத் தொலைக்கலாம் .
தவிர காமம் என்பது கண்காட்சி அல்ல . வெளிச்சத்தில் நிகழ்த்த! இருட்டில் நடக்கும் உறவிலேயே புலன்கள் அதிகம் சுகிக்கும் . வெளிச்சத்தில் காமம் என்பதே ஒரு வகையில் வக்கிரமே !
பாதிப்பு ஏற்படாத வரையில் அது பிரச்னை இல்லாத வக்கிரம் . சிலருக்கும் சுவையான வக்கிரம் . அவ்வளவுதான்
ஆனால் ஒரு ஜோடியின் அந்தரங்கத்தை அவர் அறியாமல் படம் பிடிப்பது எப்படிப்பட்ட கேவல குணம் ?
பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களுக்காக கேமரா பொருத்தப்படும்போது கூட இங்கே கேமரா இருக்கிறது என்று அறிவிப்பு வைக்க வேண்டும் என்பது சட்டம்
காரணம் ? யாரும் இல்லாத இடத்தில் நான் ஏதோ ஒரு வகையில் எனக்கு வசதியான வகையில் நான் என் மூக்கைச் சொறியலாம் . அது பார்ப்பவருக்கு கோமாளிக் கூத்தாகத் தெரியலாம் .
அப்படி இருக்க அதை எனக்குத் தெரியாமல் படம் பிடித்து யாராவது பார்ப்பதே எனது சுந்தந்திரத்தில் தலையிடும் செயல் என்பதால்தான் அந்த அறிவிப்புகள் .
அப்படி இருக்க ஓர் ஆண் பெண்ணின் அந்தரங்க உறவை அவர்கள் அறியாமல் படம் பிடிப்பதோடு அதை உலகமே பார்க்கும் படி இணைய வெளியில் பதிவேற்றுவது எப்பேர்ப்பட்ட பஞ்சமா பாதகம் ?
அதுவும் ஒரு முறை பதிவேற்றியதை பின்னர் எடுக்கவே முடியாது என்று தெரிந்தும் அப்படி ஏற்றுவனுக்கு மன்னிப்பு உண்டா ?
இந்த விசயத்தைதான் சொல்கிறது படம்.
சபாஷ் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன் , இன்றைய நிலையில் பலரின் மனசாட்சியின் இரும்புக் கதவை உடைக்கும் ஒரு நல்ல படததை எடுத்ததற்கு !
அதுவும் அந்த பிளாஷ் பேக் …!
தனது முதலிரவு இணையத்தில் உலகம் முழுக்க பார்க்கப்படுகிறது என்பதை அறிந்த பின் அந்த வாயில்லாத அப்பாவிப் பெண் வீட்டையே இருட்டாக்கி உட்கார்ந்து கொள்வதும் ,
கால் விரல் நுனி கூட வெளியே தெரியாமல் மூடிக் கொள்ள உடம்பு முழுதும் போர்வை போர்த்திக் கொள்வதும்,
படுக்கையறைக் கட்டிலில் மல்லாந்து படுத்து மேலே பார்க்க மேலே இருந்து ஆயிரம் கண்கள் பார்ப்பது போல உணர்ந்து அலறுவதும் அற்புதமான டைரக்ஷன் . கிளாஸ் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷணன்
ஜெயப்பிரகாஷ் , ஆனந்த் சுவாமி , அஸ்வதி லால் அனைவரின் நடிப்பும் சிறப்பு . எனினும் அஸ்வதி லால் டாப் .
பேச்சு வராத காரணத்தால் வெளிச்சத்தில் உறவு கொள்ள வேண்டும் ‘ என்பதைக் கூட எழுதியே காட்டிய நிலையில் ,
கடைசியில் தான் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தையும் பேப்பரில் ஒவ்வொரு வாக்கியமாக எழுதி , அதை கேமரா முன்பு காட்டி அழும் காட்சி …
அதில்
இப்படி பல பேரின் வாழ்க்கையை அழித்த வீடியோக்களைதான் நீங்கள் கொஞ்சமும் வெட்கமின்றி தினமும் பார்க்கிறீர்கள் என்று எழுதிக் காட்டும் இடத்தில் ஆடியன்சை நோக்கி அஸ்வதி பார்க்கும் பார்வை ,
‘என் வீடியோவை நாளைக்கு என் பிள்ளைகளும் கூட பார்க்கலாம்’ என்பதை சொல்லும் இடத்தில் கூனிக் குறுகுவது ..
‘எனவே தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் . இதையும் ஆபாசப் படம் போலவே ரசித்துப் பாருங்கள்’ என்று சொல்லும் இடத்தில் உடைந்து அழுவது ….
நெக்குருகிப் போகிறது .
“இந்த மாதிரிப் படங்களை பார்ப்பதன் மூலம் செத்துப் போன எத்தனை பெண்களின் அழுகிய பிணங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் கற்பழிக்கறீங்க தெரியுமா?” என்ற வசனமும்
இன்னொருத்தரோட அந்தரங்க ஆபாசப் படம் கிடைச்சா உடனே நீ அதை இணையத்தில் ஏத்துவியா ? அப்போ எடுத்தவனை விட பெரிய குற்றவாளி நீதான் ” என்று சொல்லும் விதமும் சாட்டையடி ! அருமை .
இந்தப் படம் உணர்த்தும் விஷயங்கள் மிக முக்கியமானவை
1) வீட்டில் பிளம்பர்கள் எலெக்ட்ரீசியன்கள் வேலை செய்யும்போது அவர்களை தனியாக விடாதீர்கள் . பெரியவர்கள் , விவரம் தெரிந்தவர்கள் கூட இருங்கள் .
இல்லாவிட்டால் உங்கள் வீடே யாரோ பலருக்கு ஆபாசப் படம் எடுக்கும் படப்பிடிப்புத் தளம் ஆகலாம் .
2)ஆபாசப் படம் பார்த்துதான் ஆக வேண்டுமானால் சன்னி லியோன் பாருங்கள் . சங்கீதாக்களின் குடும்பப் புனிதத்தை கூறு போடாதீர்கள் .
3) அடுத்தவரின் அந்தரங்கத்தை அவர் அனுமதி இன்று பார்ப்பது குற்றம் . சம்பந்தப்பட்டவர்களே அனுமதித்தாலும் பாலியல்ரீதியான அந்தரங்கத்தை படமாக்குவது பெருங்குற்றம் .
அதை இணைய வெளியில் உலகறிய பதிவேற்றுவது மன்னிப்பே இல்லாத ஊழிக் குற்றம் என்பதை எல்லாம் படம் சொல்கிறது
இப்படியெல்லாம் பாராட்ட பல விஷயங்கள் இருந்தாலும் முக்கியமான விசயங்களில் கோட்டை விடுகிறார் இயக்குனர் .
படத்தின் அடிப்படைக் கதை மிக ஆபாசமானது . அதே நேரம் ஆபாசப் படத்தை பதிவேற்றும் ஆண்களை விட, தனிமை மற்றும் உடல் உறவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டிய பெண்கள்,
அனைவரும் வந்து பார்க்க வேண்டிய படம் ஆனால் படத்தை அப்படியா எடுத்து இருக்கிறீர்கள் டைரக்டர் ?
இணைய வழி காமம் எப்படி நடக்கிறது என்பதையும் , வெளிச்சத்தில் நடக்கும் முதலிரவுக் காட்சி,மற்றும் குளியல் அறைக் காட்சியையும் இப்படியா நீலப் படம் போல எடுப்பது ?
அப்புறம் எப்படி உங்கள் டார்கெட் ஆடியன்ஸ் படம் பார்க்க வருவார்கள்? நோ சான்ஸ் !
அடுத்தவரின் அந்தரங்கத்தை ஆபாசமாக படம் எடுப்பதும் இணைய வெளியில் பதிவேற்றுவதும் வக்கிரம், கேவலம், குற்றம் என்று கதை சொல்ல வந்துவிட்டு ,
கதை அனுமதிக்கிறது என்பதற்காக அந்தக் காட்சிகளை இவ்வளவு ஆபாசமாக எடுப்பதும் அதை திரையரங்கில் போட்டு ஊர் ஊராகக் காட்ட முயல்வதும் எவ்வளவு வக்கிரம் , கேவலம், குற்றம்?
அதே போல கைக்குக் கிடைத்த தனது மனைவியின் ஆபாசப் படத்தை ஒருவன் இணைய தளத்தில் பதிவேற்றியதற்காக அவனை குற்றம் சொல்பவன்,
பதிலுக்கு பதிவேற்றியவனின் மனைவியை கடத்திக் கொண்டு போய் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணமாக்கிப் பார்ப்பது என்ன நியாயம் ?
போர்வையில் மறைத்துக் கொண்டுதான் அப்படி செய்கிறானாம் . கேமராவில் படம் எடுக்கவில்லையாம் . கேமராவில் படம் எடுக்கவில்லை என்றால் ?
நிர்வாணமாக்கிப் பார்ப்பது நியாயமாகி விடுமா ? நீங்கள்லாம் எந்த ஊருப்பா ?
இப்படி எல்லாம் செய்து விட்டு பக்கம் பக்கமாக நியாய வசனம் பேச , அந்தப் பரதேசிக்கு என்ன யோக்கியதை இருக்கு?
படிக்கிறது ராமாயணம் .. இடிக்கிறது பெருமாள் கோவில் என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம் இந்த லென்ஸ் படம்
மொத்தத்தில் லென்ஸ்….. கைப்பிடி அழகு , கண்ணாடியில் கீறல்