இந்த மாசு , மருவா ? இல்லை திருவா? பார்க்கலாம் .
சின்னவயது முதல் அனாதையாக வளர்ந்து, திருடு மற்றும் ஏமாற்றுகள் மூலம் பணம் சம்பாதித்து வாழ்பவன் மாசிலாமணி (சூர்யா). சின்ன வயசு முதலே அவனோடு பழகிவரும் நண்பன் ஜெட்லி (பிரேம்ஜி அமரன்).
மாசுவுக்கு மானினி (நயன்தாரா) என்ற நர்ஸ் மீது கண்டதும் காதல் வருகிறது . காதலை அவளுக்கு உணர்த்தும் முயற்சியில் இருக்கும்போது அவளுக்கு மூன்றரை லட்ச ரூபாய் அவசரமாக தேவைப்படுவது தெரிகிறது. அதற்காக ஒரு ஏமாற்று வேலை செய்து பணத்தோடு வரும்போது ஒரு விபத்தில் சிக்கி , ஜெட்லி இறக்கிறான் . மாஸ் தப்பிக்கிறான்
அப்போதுதான் அவன் கண்ணுக்கு ஆவிகள் தெரிகிறது என்பது புரிய வருகிறது . அவனுக்கு ஜெட்லி ஆவி மட்டும் அல்லாமல் மற்ற பல ஆவிகளும் கண்ணுக்கு தெரிகின்றன. தங்களது நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த ஆவிகள் மாசுவிடம் கெஞ்சுகின்றன. பதிலுக்கு அந்த ஆவிகளை பல வீடுகளுக்கு அனுப்பி கலாட்டா செய்ய வைத்து அந்த வீடுகளுக்கு போய் பேய் ஓட்டி அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறான் மாஸ் . இவன் ஒரு சீட்டிங் பேர்வழி என்ற அளவில் உணர்ந்து மானினி இவனை விட்டு விலகுகிறாள் .
சக்தி மீது மாஸ் கோபப்படுகிறான். எனினும் இன்னொரு சூழ் நிலையில் இன்னொரு மனிதனை மாஸ் மூலம் எரித்துக் கொள்கிறான் சக்தி . ”இனி என் முகத்திலேயே விழிக்காதே” என்று சக்தியை மாஸ் விரட்டுகிறான் . சக்தி போய் விட , அதன் பின்னர் சக்தி யாரென்று மாசுக்கு தெரிய வரும்போது நெகிழ்வான செண்டிமெண்ட் அதிர்ச்சி !
நாடிழந்து வீடிழந்து கனடா சென்று உழைத்து முன்னேறும் ஈழத் தமிழன் சக்தி , தமிழ் நாட்டில் ஒரு அநாதை இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டு வேலைகளை செய்ய, அந்த இடத்துக்கும் ஆசைப் படும்ஒரு ஹவாலா நபர் , அடுத்து ஒரு அடியாள், ஒரு பிரபல அரசியல்வாதி(சமுத்திரகனி) , ஆகியோர் சக்தியின் குடும்பத்தையே அழித்த கதையும் , அதில் ஒரு கைகுழந்தை மட்டுமே உயிர் பிழைத்த விசயமும் மாசுக்கு தெரிய வர , அப்புறம் என்ன என்பதே மாஸ் .
பேயிடம் அடி வாங்கும் மனிதர்கள் சம்மந்தப்பட்ட படங்களே வந்து கொண்டிருக்க , ஆவிகளை நல்லவர்கள் என்றும் அவர்களை விட மனிதர்களே மோசமானவர்கள் என்றும் வித்தியாசமாக கதை சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு . இந்த இடத்தில் ஆனந்த புறத்து வீடு படம் ஞாபகம் வருகிறது.
வழக்கமான ஆவிகளுக்கு இடையே ஓர் ஈழத் தமிழர் ஆவி என்பது சுவாரஸ்யமான விஷயம்..
நிறைவேறாத ஆசைகளுடன் அலையும் ஆவிகளின் கோரிக்கையும் அதை மாஸ் நிறைவேற்றும் ஏரியாவும் குட்டிக் குட்டிக் கவிதைகள் போல உணரவைக்கின்றன . அருமை.
உண்மை தெரிந்த பின்னர் சக்தியும் மாசும் சந்திக்க, சக்தியின் கையில் ஒரு குழந்தை அழுவதும் அது தொடர்பாக அடுத்து வரும் ஷாட்களும் கண் கலங்க வைக்கிறது . பழசுதான் என்றாலும் சக்தியின் குடும்பம் அழிக்கப்படும் விதத்தை பதைபதைக்கும்படி எடுத்து இருக்கிறார் வெங்கட் பிரபு . சபாஷ் பிரபு .
போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் சில பல காட்சிகளில் மென் சிரிக்கவும் புன்சிரிக்கவும் வைக்கிறார் . ஓரிரு காட்சிகளில் வந்தாலும் பெண் போலீஸ் ரம்யாவை பார்த்துப் புல்லரித்து ஜொள்ளு விடும் ஆவி கேரக்டரில், தியேட்டரையே குலுக்குகிறார் நான் கடவுள் ராஜேந்திரன்.
மாஸ் சூர்யா கேசுவல் என்றால் இலங்கைத் தமிழன் சக்தி கேரக்டரில் சூர்யாவின் உடல் மொழிகள் மற்றும் அம்பு போன்ற அசைவுகள் அசத்தல்.
‘ கதையில் என் இந்தக் கேரக்டருக்கு அவ்வப்போது பூரித்துப் பொங்கி சிரிப்பதே போதும்’ என்று முடிவு கட்டி விட்டார் நயன்தாரா .
யுவனின் பாடல் இசையை விட பின்னணி இசை சிறப்பாக உள்ளது
ராஜீவனின் கலை இயக்கமும் ராஜசேகரின் ஒளிப்பதிவும் சேர்ந்து கண்களுக்கு கலர் விருந்து கொடுக்கின்றன. கே எல் பிரவீனின் படத்தொகுப்பு படத்துக்கு கியர் ஏற்றிப் போடுகிறது .
இலங்கைத் தமிழன் என்ற கேரக்டரை வைத்து பெரிதாக பேசினால் சென்சார் போர்டு சோக்கு சுந்தரிகள், போடப்படும் கால்சியம் துண்டுகளுக்கு ஏற்ப உடல் அதிரக் குரல் ஒலிப்பார்கள் என்பது உண்மைதான் . அதுக்காக அவ்வப்போது சற்றே தொட்டுக் காட்டும்படியாவது விஷயங்கள் இருக்க வேண்டாமா ? சிலோன் காரனா என்ற கேள்விக்கு தமிழன் என்று ஒற்றை இடத்தில் சக்தி அழுத்தி சொல்வதை தவிர , ஓர் ஆணி கூட … ம்ஹும் ! குண்டூசி கூட புடுங்கலையே .. ஏன் வெங்கட் பிரபு ?
பிள்ளையை தவிக்க விட்டு விட்டு செத்துப் போன அம்மா ஆவி , தன் மகனின் இன்றைய நிலை பார்த்து வருந்த , “எதுக்கு இப்படி பிள்ளையை விட்டுட்டு சாகனும் ?'” என்று மாஸ் கண்டிக்கும் காட்சியை , கஷ்டங்கள் காரணமாக பிள்ளைகளை விட்டு விட்டு தற்கொலை செய்து கொள்ள முயலும் பெற்றோருக்கான விழிப்புணர்வுக் காட்சியாகவே அமைத்து இருக்கலாம் .மாறாக , அந்தப் பெண்ணையும் மாஸ்தான் கார் ஏற்றிக் கொன்றான் என்று காட்சியை முடிப்பது எதற்கு ? அதனால் இந்தத் திரைக்கதை என்ன பலன் பெற்றது ? என்ன சாதித்தது ? ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி டிஸ்கஷன்னு ஒண்ணு வைக்கவே மாட்டீங்களா?
எனினும் படம் முழுக்க அசத்தி இருக்கிறார் சூர்யா .
மொத்தத்தில்
சூர்யா மாஸ் (m) …. கதை திரைக்கதை இயக்கம் என்பது வெலாசிட்டி (c)….. ரிசல்ட் என்பது எனர்ஜி (E)
மாஸ் வெயிட்டாக இருந்தாலும் வெலாசிட்டி கம்மியாக இருப்பதால் என்பதால் எனர்ஜி குறைவுதான்
2
Refer ( E=mc )