மாயோன் @ விமர்சனம்

டபுள் மீனிங் புரடக்ஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதித் தயாரிக்க, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன்,ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் , பக்ஸ் நடிப்பில் கிஷோர் இயக்கி இருக்கும் படம் மாயோன். 

புராதனக் கோவில்களில் உள்ள காலம் வென்ற சிற்பங்கள் மற்றும் நகை உள்ளிட்ட பொக்கிஷங்களைக் கொள்ளை அடிக்கும் கும்பல் ஒன்று புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு பழமையான பெருமாள் கோவிலுக்குக் குறிவைக்கிறது . 

அங்கு தொல்லியல் ஆராய்ச்சி செய்ய ஒரு குழு வருகிறது . கோவிலுக்குக் கொள்ளை வாய்ப்பு இருப்பதை அறிந்து காவல்துறையும் வருவாய்த் துறையும் களம் இறங்குகின்றன. 

கோவிலின் விசேஷம் என்ன என்றால் அந்தக் கோவிலுக்குள் இரவு நேரத்தில் யாராவது இருந்தால் அங்கே ஏற்படும் அதீத ஒலி உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் சித்தப் பிரம்மைக்கு ஆளாகி மரணம் அடைந்து விடுவார்கள் . 

இரவு நேரத்தில் கொள்ளைக் கும்பல் கோவிலுக்குள் இறங்க,  நடந்தது என்ன என்பதே இந்தப் படம் . முதலில் மாயோன் என்ற இந்த அற்புதமான  பெயருக்குப் பாராட்டுகள் .

செஸ் விளையாட்டின்  விதிகளும் முறைகளும் பல்வேறு வாழ்வியல் சூழ்நிலைகளுக்கு எப்படி பாடமாக இருக்கின்றன என்று சொல்லும் விதம் அருமை.அதை கிளைமாக்சோடு பொருத்துவது இன்னும் அருமை.

சிலை , பொக்கிஷம் கொள்ளை என்ற வழக்கமான கதைக்கு வித்தியாசமான திரைக்கதை எழுதி இருக்கிறார் அருண்மொழி மாணிக்கம் . 

பல்வேறு ஒளிரும் வண்ணங்களை குழைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் வண்ணமயமான அந்த கிராபிக்ஸ் காட்சிகள் அழகு . 

கோவிலுக்குள் இரவில் இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இயற்கை, அறிவியல, தெய்வீகம் கலந்து சொல்லி இருக்கும் காரணங்கள் அட போட வைக்கின்றன . இளையராஜாவின் இசை பொருத்தம் . எழுதி இருக்கும்  பாடல்கள் ஒகே . 

ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத்,  கலை இயக்குனர்  பாலசுப்ரமணியம் கூட்டணி ஏழைக்கேத்த ஒரு சுவையான எள்ளுருண்டையை உருட்டிக் கொடுத்திருக்கிறது . 

எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய கடத்தல் பேர்வழி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் சிபி .  கெட்டப்பில் கவர்கிறார் ராதாரவி . 

இடைக்காலச் சோழர்களில் ஒருவனான பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜேந்திர சோழன் என்று ஒரு வசனம் !

இதில் பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜேந்திர சோழன் என்பது  உண்மை . கரிகால் சோழன் உள்ளிட்ட முற்காலச் சோழர்கள் , பிறகு பல்லவர்கள் அப்புறம் பிற்காலச் சோழர்கள் என்பதுதான் உண்மை வரலாறு . பிற்காலச் சோழ வம்சம் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே துவங்கி விடுகிறது.

வித்தியாசமான திரைக்கதை என்றாலும் இன்னும் சிறப்பாகக் கொடுத்து இருக்கலாம் . படத் தொகுப்பு இன்னும் கொஞ்சம் நறுக் சுருக் என்று இருந்திருக்கலாம் . 

எனினும் வித்தியாசமான திரைக்கதை அது பேசும் சில பல அடடே விஷயங்கள் கலை இயக்கம் இவற்றால் கவர்கிறது மாயோன் 

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *