ZEE ஸ்டுடியோஸ், BAY VIEW புராஜக்ட்ஸ் , ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யராஜ், ஊர்வசி, ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பால முரளி , கே பி ஏ சி லலிதா ஆகியோர் நடிப்பில் ஆர் ஜே பாலாஜி -என் ஜே சரவணன் இணைந்து இயக்கி இருக்கும் படம் .
மலையாள அம்மாவுக்கும் (லலிதா) தமிழ் அப்பாவுக்கும் (ஒரு விரல் கிருஷ்ணா ராவ் – போட்டோ மட்டும்) பிறந்த ரயில்வே டி டி ஆர் உன்னி (சத்யராஜ்), கிருஷ்ணவேணி (ஊர்வசி) என்ற தமிழ்ப் பெண்ணை மணந்திருக்க அவர்களுக்குக் கல்யாண வயதில் ஒரு மகன் (ஆர் ஜே பாலாஜி) , மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் இன்னொரு மகன் .
இந்த நிலையில் கிருஷ்ணவேணி கர்ப்பமாகிறார் . குழந்தையை பெற்றுக் கொள்ள வேணி முடிவு செய்ய , இந்த விஷயம் , மகன்கள், கோபக்கார மாமியார் , அக்கம் பக்கத்து வீட்டார், உறவுகள், மூத்த மகனின் காதலி , அவளது பணக்கார பந்தா அம்மா , இளைய மகனின் நண்பர்கள் ஆகியிருக்குத் தெரிய வரும்போது, நடக்கும் காமெடி , செண்டிமெண்ட் நிகழ்வுகளும் அதன் விளைவுகளுமே வீட்ல விசேஷம்.
2018 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா , நீனா குப்தா நடிப்பில்அமீத் ரவீந்திர நாத் ஷர்மா இயக்கத்தில் வெளிவந்த பதாய் ஹோ படத்தின் ரீமேக்கை , பாக்யராஜின் படத்தலைப்பை வைத்துக் கொடுத்து இருக்கிறார்கள்
வீட்டில் சீட்டு பிடிக்கும் காட்சியில் ஆரம்பித்து பாலாஜியின் நகைச்சுவை ஆங்காங்கே ஒர்க் அவுட் ஆகிறது . பல இடங்களில் சிச்சுவேஷன் காமெடியும் ஒர்க் அவுட் ஆகிறது . உதரணமாக எல் கே ஜி சீட் ஃபீஸ் .
சத்யராஜும் ஊர்வசியும் தங்கள் கதாபாத்திரங்களில் அசத்தி இருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் ஏரியாவில் ஊர்வசி நீக்கமற நிறைகிறார் .
தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாகப் பயன்படுத்தாமல் விடப்பட்டிருக்கிற விசயங்களையும் (மாமியார் மருமகள் கோபம் கம் பாசம் ) கம்மியாகப் பயன்படுத்தப்பட்ட விசயங்களையும் ( பிரசவ வலியில் புருஷனைத் திட்டும் மனைவி) கலந்து கட்டி அடிக்கிறது படம் .

சில காட்சிகளில் ஒரிஜினலில் உள்ள சிறப்புகள் இல்லை . சில காட்சிகள் ஒரிஜினலை விட சிறப்பாக இருக்கின்றன . இந்தியை விட தமிழில் ஆறு நிமிடம் நீளம் அதிகம் .
கார்த்திக் முத்துக்குமரனின் ஒளிப்பதிவு சிறப்பு. கிரிஷ் கோபால கிருஷ்ணனின் இசை ஒகே ராகம் (எழுத்துப் பிழை அல்ல)
”பொம்பள 25 வயசுல கர்ப்பம் ஆகலைன்னா திட்டுவீங்க. 50 வயசுல கர்ப்பம் ஆனாலும் திட்டுவீங்க. ஆனா ஆம்பளை மட்டும் எப்போ கர்ப்பம் ஆக்கினாலும் அவன் ஆம்பள சிங்கம் ” என்பது உட்பட ஊர்வசி பேசும் பல காட்சிகள் , மாமியார் லலிதா பேசும் காட்சிகள் , பாலாஜியும் அவரது தம்பியும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் வசனம் ரகளை .
ஆனால் இந்தக் கதையில் கட்டாயம் அவசியம் சொல்ல வேண்டிய ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டார்கள்.

”எலெக்ட்ரானிக் பொருட்களை கட்டி அழும் வேலைகள், சிறு வயதிலேயே மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் கொடுமை, இயல்பாகவே டென்ஷனான வாழ்க்கை முறை இவற்றால் விந்தணுக்கள் குறைபாடு ஏற்பட்டு இளம் வயது மனைவிகளே கர்ப்பம் ஆக முடியாமல் தவிக்கும் , ஐம்பதுகளில் இருக்கும் ஒரு தம்பதி மேலும் ஒரு முறை அம்மா அப்பா ஆவது கொண்டாடப்பட வேண்டிய விஷயம். அது அவமானம் இல்லடா முட்டாப் பசங்களா ” என்று பொட்டில் அடித்தபடி சொல்லி இருக்க வேண்டாமா?
எனினும் வித்தியாசமான கதை, நகைச்சுவை, செண்டிமெண்ட், உறவுகளின் பெருமை , பெரியோரை மூத்தோரை மதித்தல் போன்ற விசயங்களை அழுத்தமாகச் சொல்லும் வகையில் தியேட்டரில் விசேஷமான படம் இது.