காளிகாம்பாள் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.ஹரிஷ் குமார் தயாரிக்க, விஜயசங்கர் நாயகனாகவும், ஸ்வாதிஸ்தா நாயகியாகவும் நடிக்க ,
பீவி, ஜான் செல்வசிங், உதய்குமார், எல்சாடாய் கிரேஸ், கருப்பையா ராதாகிருஷ்ணன், செல்வி, தினகரன், ஜி.எம்.பாட்சா, ஜோதிகுமார், வித்யா, விபிதா, இசை செல்வி
மற்றும் பலர் நடிப்பில் கதை திரைக்கதை எழுதி ரஜினி என்ற புது இயக்குனர் இயக்கியுள்ள படம் மதம்
படத் தொகுப்பு – சி.சாந்தகுமார், இசை – நிரோ, ஒளிப்பதிவு – கே.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – நிகில், கலை இயக்கம் – பாலாஜி, தயாரிப்பு மேலாளர் – விஜயகுமார், ஸ்டில்ஸ் – ஜெகன், கிராபிக்ஸ் – சி.சேது, டிஸைனர் – சபீர், வி.எஃப்.எக்ஸ் – எஸ்.அருணாச்சலம், துணை இயக்குநர்கள் – ஆர்.விஷ்ணுகுமார், உதய்குமார், பி.கே. வெங்கடேஷ், இணை இயக்கம் – கருப்பையா ராதாகிருஷ்ணன்.
படம் குறித்துப் பேசும் இயக்குநர் ரஜினி “பணத்திற்காக எதையும் செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு குடும்பமும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகி உள்ளது.‘மதம்’ என்பது யானைக்கு பிடிக்கும் மதத்தைக் குறிக்கும். இந்தப் படத்தில் ஒரு குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளைத்தான் யானைக்குப் பிடித்த ‘மதம்’ போன்ற பயங்கரமானது என்கிற அர்த்தத்தில் ‘மதம்’ என்று பொருத்தமாக வைத்துள்ளேன்.
ஒரு கேங்ஸ்டர் கதையை குடும்ப பின்னணியில் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன், கதை தூத்துக்குடியில்தான் நடக்கிறது, ஆனால் தூத்துக்குடிக்கும் இந்த கதைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
தூத்துக்குடியில் இருக்கும் லொக்கேஷன்கள் கதைக்கு தேவைப்பட்டதால் அங்கே படப்பிடிப்பை நடத்தினோம். அதே சமயம், தூத்துக்குடியில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம்,
படத்தில் கிட்டத்தட்ட 100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதற்காக படத்தின் தயாரிப்பாளரான ஹரீஷ்குமார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களில் நடிக்க விருப்பமுள்ளவர்களில் சிலரை தேர்வு செய்து, அவர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து நடிக்க வைத்துள்ளோம்.நடிக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.. இந்தப் படத்தில் யதார்த்தமாக வசனம் பேசி, நடித்தாலே போதும் என்று நினைத்ததால்தான் 100 புதுமுகங்களை அறிமுகப்படுத்தினேன்.
தெரிந்த முகங்கள் என்றால் திரையில் பார்க்கும்போது அவர்களது கதாபாத்திரம் எந்த மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தும், அவர்களின் ரோல் என்ன என்பது தெரிந்துவிடும்.
புதுமுகங்கள் நடிப்பதால் அவர்களது கதாபாத்திரத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதால்தான் முற்றிலும் புதுமுகங்களை இந்தப் படத்தில் நடிக்க வைத்துள்ளேன்.இதில் 20 பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக 82 வயதுடைய பீவி என்ற மூதாட்டி படம் முழுக்க வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தில் காதலர்களாக விஜயசங்கர்-ஸ்வாஸ்திகா இருவரும் நடித்துள்ளனர். இதில் ஸ்வாஸ்திகா இப்போது திரைக்கு வந்துள்ள சவரக்கத்தி திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. படத்தில் பாடல்கள், சண்டை காட்சிகள் என்று எதுவும் இல்லை. மிக யதார்த்தமான படமாக இது உருவாக்கியிருக்கிறது.
நிச்சயமாக நமது தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்…” என்கிறார் .