இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட – மற்றும் அகதிகளாகி பல நாடுகளில் துன்புறும் ஈழத் தமிழர்களின் துயரங்களை சொல்லும் வகையில்,
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஈழன் இளங்கோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சாட்சிகள் சொர்க்கத்தில் !
குறும்படங்களாக வந்து பல்வேறு விருதுகளை உலக அளவில் வென்ற- ஈழத்து உண்மை சம்பவங்கள் பல இந்தப் படத்தில் நிறைந்து கிடக்கின்றன .
பாதிப்படம் தமிழிலும் மீதிப்படம் ஆங்கிலத்திலும் வசன மொழிபெயர்ப்பு துணை உரைகளுடன் இந்தப் படம், அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் உருவாகிறது .
2009ல் இலங்கை ராணுவத்தால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தலைவர் பிரபாகரனின் புதல்வன் பாலச்சந்திரனுக்கும், பாடகியும் ஊடகவியளாளரும்,
நடிகையுமான சகோதரி இசைப்ரியாவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தப் படம்
அவர்களின் இழப்பை முக்கியக் கதைக் கருவாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது ,
பாலச்சந்திரனின் வேடத்தில் இயக்குநர் ஈழன் இளங்கோவின் மகன் சத்யா இளங்கோ நடித்துள்ளார். ஈழத்தில் நடந்த கற்பழிப்பு காட்சிகளோ, கொலை காட்சிகளோ,
துன்புறுத்தல் காட்சிகளோ இத்திரைப்படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
இருப்பினும், அதைவிட ஆழமான உணர்வுகளையும் வலியையும் அடக்கியுள்ளது இத்திரைப்படம்.
ஆஸ்திரேலியாவிலும் , பிரான்ஸ் நாட்டிலும் படமாக்கப்பட்ட இப்படத்தின் தொழில்நுட்ப வேலைப்பாடுகள் தமிழ் நாட்டு திரைக்கலைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்திற்கு சென்னையில் சதிஷ் வர்ஷன் இசையமைத்துள்ளார்.
சதீஷ்வர்ஷனின் குரலில் இரு பாடல்களும், தேசிய விருது பெற்ற பிரபல பாடகி சுர்முகியின் குரலின் ஒரு பாடலும் அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தில், ஆஸ்திரேலிய தமிழ், ஆங்கில நடிகர்களுடன் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழ் நடிகர்களும்,
அவர்களோடு ஐம்பது வருட திரையுலக அனுபவமுள்ள ஈழத்து பிரபல நடிகர் ஏ ரகுநாதன் அவர்களும் நடித்துள்ளார்.
‘சாட்சிகள் சொர்கத்தில்’ ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய திரைப்படம். பார்ப்பது மட்டும் அல்ல,
இத்திரைப்படத்தை வேற்றுமொழி இனத்தவருக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். மொழி, உரையாடல், கதை அனைத்தும் அதற்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளது.
திரையுலக வரலாற்றில், முக்கியமாக, ஈழத்தமிழரின் திரையுலக வரலாற்றில், இப்படம் வேறு ஒரு பரிமாணம் எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஈழத் தமிழர்களின் வலிகள் இதுவரை கூறப்படாத வேறொரு வடிவில், வேறொரு
அணுகுமுறையில், வேறொரு பரிமாணத்தில் கூறப்பட்டிருக்கிறது.
வேற்றுமொழி பேசுபவர்களுக்குக்கூட ஈழத் தமிழரின் வலிகள் இலகுவாய் புரியும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 25 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை
ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.