டிப்ஸ் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ரமேஷ் தரானி, சஞ்சய் ராத்ராய், ஜெயா தாரணி, கேவல் கார்க் ஆகியோர் தயாரிக்க,
விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் , கவின் பாபு, ராதிகா, சண்முகராஜன், ராதிகா ஆப்தே, ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் ஸ்ரீராம் ராகவன் இயக்கி தமிழ், இந்தி இரண்டு மொழிகளிலும் வெளிவந்திருக்கும் படம். (கவின் பாபு, ராதிகா, சண்முகராஜன், ராஜேஷ் ஆகியோருக்கு பதிலாக இந்தியில் வேறு நடிகர்கள் )
மும்பைக்கு முந்தைய பம்பாயில் நடக்கும் கதை .
அம்மா இறந்து போன நிலையில் , பல வருடங்களுக்கு பிறகு அம்மாவுடன் வாழ்ந்த வீட்டுக்கு வருகிறான் ஆல்பர்ட் ( விஜய் சேதுபதி) . மாமா (ராஜேஷ்) ஆறுதல் தருகிறார்.
இரவில் காலாற நடக்கையில் அவன் சந்திக்கும் மரியா என்ற ஒரு பெண் ( கத்ரினா கைஃப் ) , அவளது- பேச முடியாத சிறுமியான மகள் ஆன்னி (பாரி மகேஸ்வரி ஷர்மா) ஆகியோருடன் பழக , அதன் விளைவாக அவளது வீட்டுக்கும் போகிறான் .
பேக்கரி நடத்தும் மரியா தனது கணவன் மோசமானவன் என்றும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளவன் என்றும் சொல்கிறாள் .
இருவரும் மது அருந்தி நடனம் ஆடுகின்றனர். முத்தத்தில் நெருங்குகின்றனர். மகளைத் தூங்க வைத்து விட்டு ஆல்பர்ட் வீடு வரை போய்விட்டு வந்தால், கணவன் துப்பாக்கியால் சுடப்பட்டு செத்துக் கிடக்கிறான் . கொலையா தற்கொலையா என்று தெரியாத நிலை.
இருவரும் சேர்ந்து பிரச்னையை சமாளிக்கலாம் என்று அவள் சொல்ல , அப்போதுதான் ஆல்பர்ட் தன்னோடு கள்ளக்காதலில் இருந்த ஒரு பெண்ணை (ராதிகா ஆப்தே) கொன்று விட்டு வந்ததாக சொல்ல, அவன் இருந்தால் அது தனக்கே பிரச்னை என்று எண்ணி அவனைப் போகச் சொல்கிறாள் .
கிறிஸ்துமஸ் தினமான அன்று அவள் சர்ச்சுக்கு மகளுடன் போக, அங்கே மயங்கி விழ, அப்போது அவளுக்கு உதவ ஒரு ஜொள்ளு பார்ட்டி (கவின் பாபு ) வர ,அங்கே ஆல்பர்ட்டும் இருக்க, புதிய நபர் , ஆல்பர்ட் இருவரும் மரியாவை அவள் வீட்டுக்கு கொண்டு வர, அங்கே ஆல்பர்ட்டை பற்றி கவலையே படாமல் மரியா அந்தப் புதிய நபருடன்- முன்பு ஆல்பர்ட்டுடன் பழகியது போலவே – நெருங்கி பழக ,
மகளைத் தூங்க வைத்து விட்டு மரியா அந்த புதிய நபருடன் வெளியே போய் வர , இருவரும் திரும்பி வரும்போது மீண்டும் கணவனின் செத்த பிணம் இருக்க, புதிய நபர் போலீசை சமாளிப்பதில் உதவ ,
அப்போதுதான் முன்பு நம்மிடம் பழகியது உட்பட நடப்பது எல்லாமே மரியாவின் பிளான் என்பது ஆல்பர்ட்டுக்கு புரிகிறது .
அதற்குள் மரியா மீது ஆல்பர்ட்டுக்கு ஓர் ஈர்ப்பு வந்திருக்க, நடந்தது என்ன என்பதே படம் .
ஒவ்வொரு காட்சியையும் நிறுத்தி நிதானமாக அழுத்தமாக நல்ல விவரணைகளுடன் மேட்டிமையான உரையாடல்களுடன் எழுதி சிறப்பான படமாக்கலுடன் இயக்கி இருக்கிறார் ஸ்ரீராம் ராகவன் . சபாஷ்
மெரி கிறிஸ்துமஸ் என்று பெயர் போடப்படும்போது சாலையோர தபால் பெட்டியின் மீது பூனை உட்கார்ந்திருக்கும் ஷாட் அசத்தல்.
தமிழ் , இந்தி மொழியில் எடுக்கப்பட்டு இருக்கும் படம் . விஜய் சேதுபதி, கத்ரினா கைப் என்று இரண்டு பிரபல நடிகர்கள் . பெரிய படம் . எனினும் படத்தில்,தேவை இல்லாமல் ஒரு கேரக்டர இல்லை. கும்பல் கும்பலாக ஆட்கள் நிற்கும் காட்சிகள் இல்லை. பல காட்சிகளில் இருவர் மட்டுமே . ஆனாலும் போரடிக்கவில்லை. இயக்குனரின் அந்த தெளிவு பாராட்டுக்குரியது
மிக அழகாக சிறப்பாக பேசும் கண்களுடன் தனக்கே உரிய பாணியில் நடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. அருமை .
புறங் கைகளின் குளோசப் ஷாட்டில் வயசும் வற்றி இருப்பதும் தெரிந்தாலும் அதே இடுங்கல் கண்கள், குழந்தை சிரிப்பு, என்று உள்ளம் கொள்ளை கொள்கிறார் கத்ரினா கைப் . அதுவும் அவரே முயன்று தமிழ் வசனங்களுக்கு உதடு அசைத்து இருப்பதும் இன்னும் ஈர்ப்பு.
தமிழ் வடிவத்தில் காக்கி உடையில் கெட்டித்துக் கிடக்கும் ஒரு ஹெட் கான்ஸ்டபில் கதாபாத்திரத்தில் ராதிகாவும், இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சண்முகராஜனும் படத்தை எளிமைப்படுத்தி நகைச்சுவை வெடிகள் வீடுவதில் அசத்தி இருக்கிறார்கள் .
நட்புக்காக .. இல்லை இல்லை அன்புக்காக காயத்ரி ஒரு காட்சியில் வந்து ஒரு பாடலைப் பாடும் விதமாக நடித்து விட்டுப் போகிறார்
படம் முழுக்கவே சிறப்பான எழுத்து…. இரண்டாம் பாதியில் நல்ல சிச்சுவேஷன் காமெடி .
பிரீத்தம் , டேனியல் ஜார்ஜ் ஆகியோரின் இசை , மது நீல கண்டனின் பூடகமும் மர்மமும் கசிய வைக்கும் ஒளிப்பதிவு யாவும் அருமை .
படத்தின் இரண்டாம் பாதியில் இரண்டாம் பாதியில் அடுத்து அடுத்து திருப்பங்கள் , சுவாரஸ்யம் , திரில் எல்லாம் கொடுத்து அசத்தி கடைசியில் அச்சச்சோ என்று உச்சுக் கொட்ட வைக்கும் முடிவைச் சொல்லி, ஒரு கவிதை போல் படத்தை முடிக்கிறார்கள்
மொத்தத்தில் மெரி கிறிஸ்துமஸ் … ஹேப்பி .!ஹேப்பி !!