ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவில் ,
அட்லியின் கதைக்கு , அட்லி , விஜயேந்திர பிரசாத் ரமண கிரி வாசன் திரைக்கதைக்கு, அட்லியும் ரமணகிரி வாசனும் வசனம் எழுத,
அட்லி இயக்கி இருக்கும் படம் மெர்சல் . ரசிகன் மெர்சல் ஆவானா ? பார்க்கலாம் .
அஞ்சு ரூபாயை மட்டும் பெற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்து ஏழை மக்களுக்கு சேவை செய்து அதனால் அஞ்சு ரூபாய் டாக்டர் என்றே, 
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அழைக்கப் படும் மாறன் ( விஜய் – 1) , ஒரு விருது பெறுவதற்காக பாரிஸ் போகிறார் .
அங்கே வரும் பணக்கார சென்னை டாக்டர் ஒருவர் மாறனிடம் ”சேவையை எல்லாம் விட்டு விட்டு ஒழுங்கா என் மருத்துவமனையில் வேலைக்கு சேர் .
இல்லன்னா அழிச்சுடுவேன் ” என்று மிரட்டுகிறார் .
அந்த பணக்கார டாக்டரின் உதவியாளரான ஒரு பெண் டாக்டருக்கு (காஜல் அகர்வால் ) மாறனுடன் நட்பு ஏற்படுகிறது .
இந்த நிலையில் மேஜிக் நிபுணர் தோற்றத்தில் வரும் ‘மாறன்’ பணக்கார டாக்டரை மேஜிக் மேடையில் கொல்கிறார்.
தப்பி சென்னை வந்த நிலையில் மாறனை போலீஸ் கைது செய்கிறது . ஐந்து ரூபாய்க்கு உயிர் காக்கும் மருத்துவன் கொலை செய்வானா என்றால் ..
கொன்றது மருத்துவன் அல்ல. அவன் போலவே தோற்றம் கொண்ட வெற்றி (விஜய் 2 ) என்பது தெரிகிறது .
ஏன் கொல்ல வேண்டும் என்று கேட்டால் , தளபதி என்ற வெற்றி மாறனின் ( விஜய் 3) பிள்ளைகள் இருவரும் என்பது புரிகிறது .
மதுரைப் பக்க கிராமத்தில் பிறந்து பஞ்சாப் பெண்ணை மணந்து (நித்யா மேனன்) ஊர் மக்களின் நன்மைக்காக,
சொந்த நிலத்தில் இலவச மருத்துவ மனை கட்டும் தளபதி அதற்கென மருத்துவர்களை கொண்டு வர, அவர்கள் ( எஸ் ஜே சூர்யா ) தளபதியை …… 
என்று ஒரு கதை விரிகிறது . அப்புறம் நடந்தது என்ன என்பதே மெர்சல் .
வேட்டி கட்டிய தமிழனாக பாரிஸ் செல்லும் டாக்டர் மாறனை ஏர்போர்ட்டில் உடை பார்த்து கேவலப்படுத்தி கைது செய்து வைக்க ,
மருத்துவ உதவி தேவைப்படும் ஒரு பெண்ணைக் காக்க சண்டை போட்டு போராடி போய் உயிர்காத்து எல்லோரின் மரியாதைக்கும் ஆளாகும் காட்சியிலேயே ,
மெர்சல் ஆக்குகிறார் விஜய் . சூப்பர் .
மாறன் வெற்றி என்று இரண்டு கேரக்டர்களில் சின்ன சின்ன மேனரிசங்களில் அழகாக அசத்துகிறார் என்றால் மதுரைக்கார தளபதியாக பிரம்மாதப் படுத்துகிறார்
அசத்தல் அட்லி ! படம் பேசும் மொழி , இன , நிற , வர்க்க அரசியல் அபாரமானது .
தமிழ் தமிழனின் பெருமை சொல்லும் பாடல்கள் , டீமானிடைசேஷனை மூக்கறுக்கும் நையாண்டி என்று படத்தில்,பல விஷயங்கள் அபாரம் .
நார்மல் டெலிவரி வழக்கமான இருந்த நம் நாட்டில் சிசேரியன் வழக்கமாகப் போனதற்குப் பின்னால் உள்ள மருத்துவ உலகின் மனசாட்சி இல்லாத பண வெறி ,
விபத்துகளில் சிக்கி ஊசலாடும் உயிர்களை ஆம்புலன்ஸ் டிரைவர்களும் புரோக்கர்களும் சரியான மருத்துவ மனைக்கு கொண்டு போகாமல் ,
பணம் பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள் தரும் கமிஷனுக்காக பலரையும் சாலையில் கொல்லும் அவலம்……
ஆகியவற்றை படம் தோலுரிக்கும் விதம் அருமை . 
வெற்றியின் மேஜிக் திறமையை , காதல், சண்டை , , கொலை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்வதோடு,
கடைசியில் தனது டைட்டில் கார்டுக்கும் சமத்தாக பயன்படுத்திக் கொள்கிறார் அட்லி .
(அதற்காக கைது செய்யப்பட்ட விஜய் கையில் பூட்டப்பட்ட விலங்கை போலீஸ் அதிகாரி சத்யராஜ் கைக்கு மாற்றும் மேஜிக் எல்லாம் ஓவர் )
பஞ்சாப் பெண்ணை மணந்து மதுரைப் பக்க கிராமத்துக்கு கொண்டு வந்து கருத்தொருமித்து குடும்பம் நடத்தும் நாயகன் என்ற கருத்தியல் அருமை .
நடிப்பில் ஜொலிக்கிறார் நித்யா மேனன் . சூப்பர் . (சொந்தக் குரலில் பேச வைக்காமல் மண் மணத்தோடு ஒரு பின்னணிக் குரலை போட்டு இருக்கலாம்) 
விஜய் சமந்தா இடையிலான அந்த ”க்கா … டே தம்பி.. ” குறும்பு சுவாரஸ்யம் !
தளபதிக்கும் சிட்டுக் குருவி பாட்டிக்கும் இடையிலான உறவும் பாசமும் மேலோட்டமாகப் பார்த்தால் சுவாரஸ்யம் .
ஆழ்ந்து பார்த்தால் நெகிழ்வு . உறவு அல்லாத நபர்களுக்கும் உறவின் உரிமை தருவதுதானே மனித மாண்பு .
ஏ ஆர் ரஹ்மான இசையில் ‘ஆளப் போறான் தமிழன்..” சிலிர்க்க வைக்கிறது . பின்னணி இசை படத்துக்கு மதிப்புக் கூட்டல் செய்கிறது .
ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு அழகியல் காட்சிகளில் குழையவும் உணர்வுப் பூர்வமான காட்சிகளில் அழுத்தம் சேர்க்கவும் தவறவில்லை . 
இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் ஓடும் படத்தை பெரிதாக போரடிக்காமல் கொண்டு போவதில் ரூபனின் படத் தொகுப்புக்கும் நல்ல பங்கு இருக்கிறது .
எஸ் ஜே சூர்யா நடிப்பில் கவர்கிறார் . சத்யராஜ் தன் வழக்கமான இயல்பில் நடிக்கிறார் . ஒரு இடைவேளைக்குப் பிறகு சிரிப்பையும் வசனத்தையும் ‘குழப்பி’ அடிக்கிறார்
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் உருப்படியான கேரக்டரில் வடிவேலு . சற்று சிரிக்கவும் வைக்கிறார் . நெகிழவும் வைக்கிறார்
கிளைமாக்ஸ் சண்டையில் குடியிருந்த கோயிலை அப்படியே ஞாபகப்படுத்தும் காட்சி தேவையா ?
எங்கே விஜய்யும் அடேயப்பா .. என்னமா அடிக்கறாரு .. அண்ணன்னா அண்ணன்தான் ” என்ற எம் ஜி ஆரின் வசனத்தை,
அப்படியே பேசி விடுவாரோ என்று ஒரு சுவாரஸ்யமான பயமே வந்தது
மருத்துவக் கொள்ளைக்குப் பின்னால் உள்ள வியாபாரம், சுயநலம், மனசாட்சி இன்மை , உயிர்களை பலி வாங்கும் மிருக குணம் , பிணமானாலும் பணம் பிடுங்கும் அக்கிரமம் , 
இதன் பின்னால் உள்ள அரசியல் , அதற்கான தேர்வு இவற்றை தமிழின உணர்வோடு சொன்ன விதத்தில் கவர்கிறது படம் .
மெர்சல் … விளாசல் !
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————
அட்லி , விஜய், ஏ ஆர் ரகுமான், எஸ் ஜே சூர்யா , நித்யா மேனன்