பொதுவாக குறும்படங்கள் என்பவை தனி . முழு நீள திரைப்படங்கள் என்பவை தனி.
இரண்டுக்குமான நோக்கம் குணாதிசயம் , தொழில் நுட்ப வெளிப்பாடு , பயன்பாடு ஆகியவையும் தனியானவையே .
ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை குறும்படங்கள் என்பவை திரைப்படங்களை இயக்க வாய்ப்பு பெறுவதற்காக தகுதி காட்டல்
– என்ற அளவிலேயே அதிகம் பயன்பட்டன . (இதற்கு அப்பாற்பட்ட முயற்சிகள் மிக சிலவே )
அந்த வகையில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு குறும்பட இயக்குனர்கள் பலர் திரைப்பட இயக்குனர்களாக வென்றனர் .
குறும்பட இயக்குனர்களாக ஜொலித்த சிலர் , இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணராமல் குறும்படம் போலவே திரைப்படம் எடுத்து பலர் தோல்வியும் அடைந்தனர் .
பாலச்சந்தரும் பாரதிராஜாவும் சேர்ந்து வியந்த சிலரும் கூட இப்படி தோற்றனர் என்பதுதான் அதிசயம்.
எனினும் குறும்படம் மூலம் திரைப்படம் எடுக்க வரும் முயற்சிகள் இன்னும் நடக்கின்றன . அதில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகின்றன.
மிக முக்கியமாக டைரக்ஷனுக்கு அப்பாற்பட்டு ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, இசை அமைப்பு போன்ற தொழில் நுட்பங்கள்,
மற்றும் நடிக நடிகையருக்கு குறும்படங்கள் இப்போதும் திரைப்பட வாய்ப்பு பெறுவதற்கான சிறந்த வழியாகவே உள்ளன .
இப்படி எடுக்கப்பட்ட குறும்படங்கள் மக்களுக்கு காட்டப்படும் முன்பு , திரைப்படங்களைப் போலவே ,
பத்திரிகையாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் திரையிடப்பட்டு அவர்கள் தரும் விமர்சனத்தின் மூலம் விளம்பரம் பெற்று மக்களை அடைவதும் உண்டு .
அந்த விமர்சனங்களை பொறுத்து சம்மந்தப்பட்ட கலைஞர்களுக்கு தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் , முதலீட்டாளர்கள் கிடைப்பதும் உண்டு .
இதுதான் கள நிலவரம் .
குறும்படத்துக்கு அப்பாற்பட்டு முன்பகுதிப் படம் என்ற ஒன்றும் (PILOT FILM) என்ற ஒரு வடிவமும் புழக்கத்தில் உள்ளது .
ஒரு அறிமுக இயக்குனரின் கதை பிடித்துப் போன நிலையில் அவர் அதை சரியாக படமாக எடுப்பாரா என்பதை கண்டு பிடிக்க ,
சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் ஆரம்பத்தில் சில காட்சிகளை அந்த இயக்குனரை படமாக எடுக்கச் சொல்லி பார்ப்பார் . அதைப் பொறுத்து படம் வளரும் .
(ஏனெனில் இங்கே நன்றாக கதை சொல்ல , ஏன் எழுதக் கூட தெரிந்த பலருக்கு நன்றாக எடுக்க வராது .
நன்றாக எடுப்பவர்களுக்கு சொல்ல வராது . எழுதவும் வராது . மூன்றும் அமையப் பெற்றவர்கள் குறைவு )
ஒரு நிலையில் சம்மந்தப்பட்ட இயக்குனர் மற்றும் படைப்பாளிகளே தங்கள் சொந்த செலவில் கதையின் ஒரு பகுதியை தற்காலிகமாக
சில நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்தோ .. அல்லது படமாகும்போதும்
நடிக்க போகிற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்தோ படமாக எடுத்து …
அதை தயாரிப்பாளர்களிடம் அல்லது முதலீட்டாளர்களிடம் காட்டி அதை வைத்து படத்தை தொடர்வார்கள் .
ஆனால் இது போன்ற முன்பகுதிப் படம் (PILOT FILM) எதுவும் பத்திரிகையாளர்களுக்கு திரையடப்பட்டது இல்லை .
ஆனால் முதன் முதலாக மறைபொருள் என்ற முன்பகுதிப் படம் (PILOT FILM) பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது .
B2.0 புரடக்ஷன் மற்றும் வானர சேனா ஸ்டுடியோஸ் சார்பில் ஹட்சன் என்பவர் தயாரிக்க, சந்தோஷ் பிரதாப், ஹரிஷ் ஆகியோர் நடிப்பில்
வீரமணி என்பவரின் ஒளிப்பதிவில் பார்த்திபன் என்பவரின் படத் தொகுப்பில் அபிஷேக் லெஸ்லீ என்பவர் ,
எழுதி இயக்கி(க் கொண்டு) இருக்கும் படம் இந்த மறை பொருள் . படப் பொருள் எப்படி இருந்தது ? பேசலாம் .
கோவை – கேரள எல்லையில் காரில் கடத்தப்படும் ஒருவனை ஆனைகட்டி என்ற ஊரில் வைத்து,
பேனா முனை மூலம் குத்திக் கொன்று கண்களை தோண்டி எடுத்து குழியில் தள்ளி விட்டுப் போகிறான் கொலையாளி .
போலீஸ் அதிகாரிக்கு ( ஹரிஷ்?) தகவல் வருகிறது .
கொலை கேஸ்களில் தனக்கு உதவும் நபரும் , கோவையில் இருந்து வெளிவரும் நவ இந்தியா என்ற பத்திரிக்கையின் பணியாற்றும்
முக்கிய பத்திரிகையாளனும் அதீத அறிவும் சில இயல்புக்கு அப்பாற்பட்ட குணாம்சங்களும் கொண்ட
ஒருவனின் ( சந்தோஷ் பிரதாப் ) உதவியை வழக்கம் போல நாடுகிறார் , அந்த போலீஸ் அதிகாரி
கிளம்பி வரும் அவன் தடயங்களை வைத்தே கொலை எப்படி எப்போது எவ்விதம் நடந்திருக்கும் என்பதை சரியாக யூகிக்கிறான் .
கொலை தகவல் சென்சேஷனல் ஆகிறது .
போலீஸ் அதிகாரியை மேலதிகாரிகள் அழைத்து கொலை பற்றியும் பத்திரிக்கையாளன்
அதை யூகித்த விதம் மற்றும் அவனைப் பற்றிய சில தகவல்களையும் கேட்கின்றனர் .
ஒரு நிலையில் அவன் யூகித்த விஷயங்கள் சரியாக அமைகின்றன என்பது மேலதிகாரிகளுக்கும் தெரிய வருகிறது .
பத்திரிக்கையாளன் யூகித்த இன்னொரு முக்கிய விஷயம் , இதே பாணியில் இன்னொரு கொலை நிகழும் என்பது !
அதுவும் அப்படியே நடக்க, எல்லோரும் அதிர , அந்த கொலை நடந்த இடத்துக்கு பத்திரிகையாளன் கிளம்ப….
இதோடு முடிகிறது மறைபொருள் என்ற முன்பகுதிப் படம் (PILOT FILM).
படத்தில் முதலில் ஈர்த்த விஷயம்…. வசனங்கள் .
அப்படி ஒரு சிறப்பான வசனம் அமைந்த காட்சியுடன் துவங்கும் படம், நிகழ் காலத்துக்கு வந்து
ஒரு நிலையில் மீண்டும் அந்த முதல் காட்சிக்குள் நுழையும் உத்தியிலான திரைக்கதையும் அருமை .
நல்ல வசனங்கள் தொடர்கின்றன.
மிக சிறப்பான படமாக்கலும் செய்கிறார் இயக்குனர் அபிஷேக் லெஸ்லீ . இயக்கமும் சிறப்பாக கை வருகிறது .
சாதாரண காட்சிகளை கூட பரபரப்பாக்குகிறது பின்னணி இசை . இசை அமைப்பாளருக்கு வாழ்த்துகள் .
ஒளிப்பதிவும் சிறப்பு . லைட்டிங் சிறப்பு . D I செய்யப்படவில்லை (அல்லது சரியாக செய்யப்படவில்லை )
– என்று தோன்றுகிறது . (ஏனென்றால் பொதுவில் அப்படி செய்யப்படாமல் வெளியே காட்ட மாட்டார்கள்)
படத் தொகுப்பும் அப்படியே . ஆனால் ஒவ்வொரு ஷாட்டிலும் குறும்படத்துக்கான நீளம் படத்தில் இருக்கிறது .
திரைப்படத்துக்கு இன்னும் கொஞ்சம் நேரக் குறைவோடு ஒட்ட நறுக்க வேண்டும் . நடிகர்கள் ஒகே . அவர்களை நிரூபிக்கும் காட்சிகள் வரவில்லை .
தனக்கு பிடித்த அத்தனை தொழில் நுட்பங்களையும் இந்த முன்பகுதிப் படத்திலேயே (PILOT FILM)காட்ட வேண்டும் என்று இயக்குனருக்கு ஆசை போலும்.
ஃபோகஸ் ஷிஃப்டிங், ஏரியல் ஷாட், கருப்பு வெள்ளை காட்சிகள், கேமராவை சுழற்றுதல் உட்பட அனைத்தும் அதற்குள் வருகிறது .
உண்மையில் அப்படி தேவை இல்லை . கதைக்கும் உணர்வுக்கும் பொருத்தமான தொழில் நுட்பங்களை மட்டும் பயன்படுத்துவதே அழகு .
முன்னோட்டத்தில் (டிரைலர்) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தரிது” என்ற திருக் குறளின் ஆங்கில விளக்கத்தை மட்டும் போட்டுள்ளனர் .
கம்பீரமாக குறளையும் போட்டு தமிழ் விளக்கத்தையும் போட்டா என்னவாம் ?
மிக சிறப்பான, மக்களை ஈர்க்கிற , பயனுள்ள திரைக்கதையோடு , தேவைப்படுகிற சிறப்பான தொழில் நுட்பங்களோடு படமாக வளர்த்தால் இது வெற்றி பெறும் .