யு வி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் ப்ரமோத் தயாரிக்க, அனுஷ்கா ஷெட்டி, (பயப்பட வேணாம் .. நடிகை அனுஷ்காதான்.) நவீன் பொலிஷெட்டி நடிப்பில் பி மகேஷ் பாபு என்பவர் இயக்கி இருக்கும் படம் .
சிறு வயதில் அப்பா அம்மா சண்டை போட்டுக் கொள்வதையும் அப்பா போன நிலையில் அம்மா கஷ்டப்பட்டாலும் நிம்மதியாக இருப்பதையும் பார்த்து வளர்ந்து, லண்டனில் பிசியான சமையல் கலைஞராக இருக்கும் அன்விதா ராவளி ஷெட்டி என்ற இளம்பெண்ணுக்கு ( அதாங்க அனுஷ்கா ஷெட்டி) , காதல், கல்யாணம் இவற்றில் நம்பிக்கை இல்லாமல் போகிறது .
அம்மா இறந்த நிலையில் இந்தியா வரும் அவருக்கு எனினும் வாழ்க்கையில் பிடிப்பு வேண்டும் என்பதால் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார் . அதாவது தகுதியான ஓர் ஆணின் விந்தணுவை எடுத்து ஊசி மூலம் தன் உடலில் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார் , விந்தணு கொடுத்த பிறகு தன்னை தொடர்பு கொள்ள, குழந்தையைப் பார்க்க, பின்னாளில் குழந்தைக்கு உரிமை கொண்டாடக் கூடாது என்ற சட்ட ஒப்பந்தத்தோடு. !
அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் நபர் அப்பா தயவில் ஒரு வேலையில் இருந்தபடி ஸ்டேன்ட் அப் காமெடியன் ஆக ,போராடிக் கொண்டு இருக்கும் சித்து பொலிஷெட்டி ( நவீன் பொலிஷெட்டி)
அவனுடைய பழக்கவழக்கங்கள் , குடும்ப வரலாறு ஆகியவற்றை ஆராய்வதற்காக ( அப்போதுதான் அவன் விந்தணு மூலம் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்குமா என்று தெரிந்து கொள்ள முடியும் ) அவனோடு பழக , அவன் அதைக் காதல் என்று புரிந்து கொள்கிறான் .
உண்மை தெரிய வரும்போது பிரச்னை வர, அவள் வேறு ஆணைத் தேட , அதைத் தாங்க முடியாமல் அவனே எல்லா நிபந்தனைகளுக்கும் சம்மதிக்கிறான். . அவள் கர்ப்பம் ஆகிறாள் .
அதன் பின் அவள் மனதுக்குள் ஏற்படும் எண்ணங்கள் .. அவற்றின் விளைவே படம்.
விஜய் சிம்ரன் நடித்த ஒரு படத்தில் விஜய் கல்யாணம் இல்லாமல் வாழ சிம்ரனுடன் ஒப்பந்தம் போட்டு கடைசியில் கலாச்சாரம் அன்பு பாசம் என்று திரும்புவார்களே அந்த பாணி கதைதான் .அதில் கொஞ்சம் நவீனம்
![](https://nammatamilcinema.in/wp-content/uploads/2023/09/po-3.jpg)
ஆனால் அட்டகாசமான திரைக்கதை வசனம் அமைத்துள்ளனர் . ஸ்டேன்ட் அப் காமெடிக்கான வசனங்கள், கண்ணியமான இரட்டை அர்த்தக் காமெடி, அடல்ட் காமெடி , சென்டிமென்ட் , என்று எல்லா ஏரியாக்களிலும் கலக்கும் திரைக்கதை வசனம் மற்றும் இயக்கம் .
தெலுங்கில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது என்பது சற்றும் உறுத்தாத அளவுக்கு உள்ளூர் இடங்கள் உவமைகள் எல்லாம் போட்டு சிறப்பாக தமிழில் எழுதி உள்ளார் விஜயகுமார் வாழ்த்துகள்
அனுஷ்கா வழக்கம் போல அசத்தி இருக்கிறார் . நவீன் உற்சாகமாக சிறப்பாக , நல்ல உடல் மொழிகளோடு அருமையாக நடித்துள்ளார். படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் போரடிக்கவில்லை. வழக்கமான ஒரு பாத்திரத்தில் நாசர் .
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு மேட்டிமைத்தனத்தை தருகிறது.
நிஜமான நல்லுணர்வுப் படம், ஒரே விசயத்தைத் தவிர
படத்தின் பெயர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. நடித்தவர்களின் நிஜப் பெயர் அனுஷ்கா ஷெட்டி , நவீன் பொலிஷெட்டி. படத்தில் அவர்களின் பெயர் முறையே அன்விதா ராவளி ஷெட்டி , சித்து ஷெட்டி , படத்துக்குள் இன்னும் ஷெட்டிகள் இருக்கிறார்களோ தெரியவில்லை . நல்லவேளை கதை நடக்கும் இடம் ஷெட்டி குண்டா . ஷெட்டி ரெஸ்டாரன்ட் என்று எல்லாம் இல்லை .