
நடிகர் தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க , விஜய் சேதுபதி, நயன்தாரா, மன்சூர் அலிகான் , பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் — போடா போடி படத்தை இயக்கிய — விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் நானும் ரௌடிதான் . இவரு நிஜ ரவுடியா ? அல்லது ஜெயிலுக்குப் போன வடிவேல் மாதிரி ரௌடியா ? பார்க்கலாம்.
பிரபல ரவுடி கிள்ளிவளவனை (பார்த்திபன்) ஒரு நேர்மையான சாதாரண போலீஸ் அதிகாரி (அழகம் பெருமாள்) எதிர்க்கிறார் . அவர் அவனை அடிக்க, அவன் திருப்பி அடிக்க, கொந்தளித்த போலீஸ் அதிகாரி கிள்ளிவளவனை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முயல்கிறார் .
தப்பும் கிள்ளிவளவன், போலீஸ் அதிகாரி வீட்டுக்கு வெடிகுண்டு அனுப்புகிறான் . வெடிப்பில் போலீஸ் அதிகாரியின் மனைவி இறக்க, அவரும் அவரது மகளும் தப்பிக்கின்றனர் . ஆனால் மகள் காது செவிடாகிறது .
வேறு ஊருக்கு மாற்றல் ஆகிப் போகும் அதிகாரி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த ஊருக்கு தன் மகள்– காத்து கேளாத – காதம்பரியோடு (நயன்தாரா) வருகிறார் . வந்த இடத்தில் மீண்டும் கிள்ளிவளவனைக் கொலை செய்யப் போகிறார் அதிகாரி .
தனிமையில் நிற்கிறார் காதம்பரி .
ஒரு மக்கட்டை பெண் போலீஸ் அதிகாரியின் (ராதிகா ) மகனாகப் பிறந்து , சின்ன வயசு முதலே ஸ்டேஷனில் உட்கார்ந்தே ஸ்கூல் ஹோம் வொர்க் செய்வதால் , ரவுடிகளோடு பேசிப் பேசி , ‘போலீசை விட ரவுடிதான் பெரிய ஆள்’ என்று நம்பும் இளைஞனின் (விஜய் சேதுபதி ) அறிமுகம் காதம்பரிக்குக் கிடைக்கிறது . எந்த ரவுடித்தனமும் செய்யாமல் ரவுடி போல சீன் போடுபவன் அவன் .
காதம்பரிக்கு உதவும் அவனுக்கு , கிள்ளி வளவனால் அவளது தந்தை கொல்லப்பட்ட விஷயம் தெரிய வருகிறது . உண்மை தெரிந்தால் காதம்பரியால் தாங்கிக் கொள்ள முடியாது என்று, அந்த மரணத்தை மறைக்கிறான் அவன் . ஒரு நிலையில் உண்மை தெரிய வரும்போது காதம்பரி ரொம்பவும் உடைந்து போகிறாள் .
அவனின் சமாதானத்தை அவள் ஏற்றுக் கொண்டாலும் , ‘கிள்ளிவளவனை தன் கையால் குத்திக் கொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால்தான் காதலுக்கு சம்மதம் சொல்ல முடியும்’ என்கிறாள் .
அரசியல் பலம் , அடியாள் பலம் , பண பலம் , உடல் பலம் , அறிவு பலம் எல்லாம் கொண்ட கிள்ளி வளவனை, காது கேளாத ஓர் அப்பாவி இளம்பெண்ணான காதம்பரி குத்திக் கொள்வதற்கான வாய்ப்பை, மொக்கை பெண் போலீஸ் அதிகாரியின் மகனான டுபாக்கூர் ரவுடியால், ஏற்படுத்தித் தர முடியுமா? முடிந்ததா என்பதே இந்தப் படம் .
விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் புதிய கெட்டப், ஒரு காட்சியில் இறுக்கமான உடை அணிந்து அனாடமி காட்டி அசரவைக்கும் நயன்தாரா, மன்சூர் அலிகான, பார்த்திபன் சம்மந்தப்பட்ட ஒரு சில நகைச்சுவைக் காட்சிகள் , ஜார்ஜ் வில்லியம்சின் ஒளிப்பதிவு ….
இவற்றைத் தவிர பாராட்டுவதற்கு என்று படத்தில் ஒன்றும் இல்லை என்பதுதான் வருத்தம்.
படத்தில் வரும் ராதிகா கேரக்டர் கதையில் என்ன செய்கிறது என்பது ஒரு பக்கம் இருக்க , ராதிகா ஏன் இப்படி கிழக்கே போகும் ரயில் மற்றும் மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் பேசியது போல கொணட்டிக் கோணட்டிப் பேசுகிறார் என்பது புரியவே இல்லை .
யதார்த்தமும் லாஜிக்கும் இல்லாத எல்லா விசயமும் காமெடி என்று இந்தப் படம் சம்மந்தப்பட்டவர்களுக்கு யாரோ தப்பாக சொல்லி இருக்கிறர்கள் போல .
ஓர் அயோக்கியனால் தன் தாய் தந்தையை இழந்த காது கேளாத பெண் ஒருத்தி, அந்த அயோக்கியனை பழிவாங்க விரும்புகிறாள் என்பது ஒன்றும் ஏற்றுக் கொள்ள முடியாத ஓன் லைன் இல்லைதான் . ஆனால் என்னதான் காமெடி காட்சிகள் அமைத்தாலும் அதை சொல்லும் விசயத்தில் ஒரு ஷார்ப்னஸ் வேணாமா ?
கிள்ளி வளவன் , பதவிக்கு ஆசைப்படும் அவனது ஆசை நாயகி , ஓர் அரசியல் எதிரி , கிள்ளி வளவனின் ஆசை நாயகி கட்சித் தலைவரையே மயக்குவது…. என்று தலையைச் சுத்திய பிறகும் மூக்கைத் தொடாமல் , அதே மூக்கைத் தொட மீண்டும் மீண்டும் தலையைச் சுத்துறாங்க.
கிள்ளி வளவனை கொலை செய்ய முயற்சி என்று ஒரு காட்சி வைத்துள்ளார்கள் . படம் பார்க்க வரும் ரசிகனை கொலை செய்கிற காட்சி அது.
நகைச்சுவை என்ற பெயரில் மிகக் கேவலமான கெட்ட வார்த்தையை, நயன்தாராவுக்கு குளோசப் வைத்து, அவரது குவிந்த உதடுகளால் மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கிறார்கள். குடும்பத்தோடு படம் பார்க்கப் போகிறவர்கள் கூனிக்குறுகி குத்திக் கொண்டு சாக வேண்டியதுதான்.
அதே போல ஆரம்பக் காட்சியில் அதே உதட்டு குளோசப்பில் விஜய் சேதுபதி சொல்லும் இரண்டு கேவலமான கெட்ட வார்த்தைகளை , ”ரோஜா .. பூமால” என்று காது கேளாத காதம்பரி நல்லவிதமாக புரிந்து கொள்கிறார் (இந்தக் காட்சிக்காகத்தான் லைக்கா நிறுவனம் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டதோ என்னவோ ).
மொட்டை ராஜேந்திரனை வைத்து காமெடி என்று கழுத்தை அறுத்து தள்ளுகிறார்கள் .
எதை நகைச்சுவையாக சொல்வது? எதை சீரியசாக சொல்வது ? அதை எப்படி சொல்வது என்பதில் எந்த வித தெளிவும் இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன.
வெடிகுண்டு வெடிக்கும் காட்சியில் அம்மா சாவதையும் காதம்பரிக்கு காது செவிடாவதையும் அவ்வளவு அழுத்தமாக சொல்லிஇருக்கும்போது அதற்கான நியாயத்தை இரண்டாம் பகுதித் திரைக்கதையில் கொடுத்து பேலன்ஸ் செய்ய வேண்டாமா ?
தான் விதித்த நிபந்தனையால் நாயகன் மற்றும் நண்பர்களுக்கு இடையே சண்டை வருவதையும் அவர்களுக்கு ஆபத்து வருவதையும் பார்த்து காதம்பரி மனம் மாறுகிறாளாம். அட .. அட ! என்ன ஒரு சிந்தனை !
ரவுடியே அல்லாத ஃபிராடு என்று தனக்கே தெரிந்த ஒருவனைப் போய், கிள்ளிவளவனுக்கு எதிராக அனுப்பினால் என்ன நடக்கும் என்று காதம்பரிக்கு முன்பே தெரியாதா ? வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத கேரக்டரா அது ? காதுதான் கேக்காது . மூளையே இல்லாத கேரக்டர்னு கதையில் எங்கேயும் சொன்ன மாதிரி தெரியலையே
படத்தின் கிளைமாக்சை எல்லாம் எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை .
பார்த்திபன்…. இப்படியே நீங்கள்அகலவாக்கில் பெருத்துக் கொண்டு போனால், உங்களுக்கு லாங் ஷாட் வைக்கக் கூட 70 எம் எம் ஐ விட பெரிதாக லென்ஸ் , மற்றும் திரை எல்லாம் உருவாக்க வேண்டி இருக்கும் . இப்போதே தயாரிப்புக்கு ஆகும் செலவில் அதை எல்லாம் செய்ய முடியாது .
ஒரு சீரியசான சென்டிமென்டான பிரச்னையை எடுத்துக் கொண்டு, கலங்க வைக்கும் படி காட்சிகளை அமைத்து மனத்தைக் கவர்ந்து …. இனிமேல் வழக்கமான பழிவாங்கும் படமாகத்தான் கொண்டு செல்ல முடியும் என்ற நிலையில்,
மிக அட்டகாசமாக அதில் காமெடியைக் கலந்து…. எமொஷனும் கேட்டுப் போகாமல் போரடிக்கவும் செய்யாமல் , வழக்கமான பழிவாங்கும் கதையாகவும் இல்லாமல் சுவாரஸ்யமாகப் பயணித்து முடிந்த படம்…..
அட்டக் கத்தி தினேஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கிய திருடன் போலீஸ் .
அந்த பாதிப்பில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்து இருக்கிறார் விக்னேஷ் சிவன் .
ஆனால் திருடன் போலீஸ் படத்தில் இருந்த செய் நேர்த்தி, மெச்சூரிட்டி , கிரியேட்டிவிட்டி இல்லாமல், இந்தப் படத்தில் கன்னாபின்னாவென்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதால் , புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாக ஆகிவிட்டது இந்த நானும் ரௌடிதான் படம் .
மொத்தத்தில் நானும் ரௌடிதான் படம் …. (படத்தில் நயன்தாரா சொல்வது போல ) ”நீ ரௌடி இல்லை; ஃபிராடு ”
பின்குறிப்பு :
விஜய தசமி அன்று வெளியான மூன்று படங்களில் பத்து எண்றதுக்குள்ள மற்றும் நானும் ரௌடிதான் படங்களை ஒப்பிடும்போது அதிக பிரபலமில்லாத நடிக நடிகையரை வைத்து எளிமையாக எடுக்கப்பட்டிருக்கும் குபேர ராசி படம் எவ்வளவோ மேல் .