இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷான் , ஷியாஸ்ஹாசன் தயாரிக்க, டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு , சேரன், ப்ரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், மற்றும் பலர் நடிப்பில் அபின் ஜோசப் எழுத்தில் அனுராஜ் மனோகர் இயக்கி இருக்கும் மலையாளப் படத்தின் தமிழ் வடிவம் நரிவேட்டை. நரித் தந்திரம் மிக்க மனிதர்களை , திருந்திய ஒரு நரி ஆடும் வேட்டையே நரி வேட்டை.
படிப்புக்கு ஏற்ற வேலைக்குதான் போவேன் என்று சுற்றிக் கொண்டு , வங்கியில் வேலை செய்யும் பால்ய காலம் தொட்ட காதலியிடம் (ப்ரியம்வதா கிருஷ்ணன்) பாக்கெட் மணி வாங்கிக் கொண்டு இருக்கும் நபரை ( டோவினோ தோமஸ் ), காதலியின் அப்பா, சித்தப்பா இருவரும் சேர்ந்து அவமானப்படுத்த, அம்மாவும் மனம் வருந்த, கிடைக்கும் காவலர் வேலையில் சேர்கிறான் .
அங்கே சீனியர்கள் செய்யும் அடாவடிகளில் இருந்து காக்கிறார் சீனியர் போலீஸ்காரர் ஒருவர் ( சுராஜ் வெஞ்சரமூடு)
பழங்குடி மக்களின் நிலத்தில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த விரும்பும் கேரள வல்லிய அரசு, போலீஸ் அதிகாரிகள் மூலம் பல வித தந்திரங்கள் செய்து, அந்த மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் உதவுவதாக பொய் சொல்லி, எப்படியேனும் அவர்களை தவறாக சித்தரிக்க முயல்கிறது .
ஆரம்பத்தில் அவனுக்கும் ஆதிவாசிகளை பிடிக்கவில்லை.ஆனால் தலைமை போலீஸ் அதிகாரியாக வருபவர் (சேரன்) மக்கள் மீது கரிசனமாக இருப்பதாக அவன் உணர்கிறான் .
ஒரு நிலையில் எல்லாம் மாறுகிறது. பாசமுடன் பழகிய சீனியர் போலீஸ் நண்பர் காட்டுக்குள் கொடூரமாக கொல்லப்படுகிறார். ஆதிவாசிகள் மேல் கோபப்படும் அரசும் காவல் துறையும் அவர்களது குடிசைகளை கொளுத்தி ஆட்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பேயாட்டம் ஆடுகிறது .
இன்னொரு பக்கம் அவனுக்குத் தெரிய வரும் உண்மைகள் வேறாக இருக்க , நடந்தது என்ன என்பதே படம்.
ஆதுவாசிகள், அரசு இவர்களுக்கு இடையேயான கார்ப்பரேட் ஆதரவு – மண்ணின் மைந்தர்கள் போராட்டத்தை நிகழ்வுகளை உண்மைக்கு நெருக்கமாக யதார்த்தமாக சொல்கிறது படம்.
நாயகனின் ஆரம்பகால விட்டேத்தியான வாழ்வும் அதன் நிகழ்வுகளும் கேரள மண் மணத்தோடு சொல்லப்படுகிறது .
ஆதிவாசிகளை ஒழிக்க அரசும் காவல்துறையும் என்ன எல்லாம் செய்ய முடியும் என்பதில் அதிக அனுபவம் கேரள அரசுகளுக்கே உண்டு என்பதாலேயோ என்னவோ காட்சிகள் அவ்வளவு இயல்பு .
ஆதிவாசிகளின் தரப்பிலும் படித்தவர்கள் இருப்பதை அழகாக காட்டுகிறார்கள் .
டோவினோ தாமஸ் . ப்ரியம்வதா கிருஷ்ணன், ஆதிவாசிகளின் போராட்டக் குழு தலைவியாக வரும் ஆர்யா சலீம், ஆதிவாசி இளைஞன், அந்த சிறுமி ஆகியோரின் நடிப்பு இயல்பு . ஒன்றிரண்டு காட்சிகளில் வரும் அந்த தாய்மாமன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் கூட கச்சிதம்
நல்லவர் போல் துவங்கி அயோக்கியத்தனம் வஞ்சகம் இவற்றின் மொத்த உருவகமாக மாறும் கேரக்டரில் இயக்குனர் சேரன் .
இந்த கேரக்டரை சேரனை விட சிறப்பாக பொருத்தமாக நடிக்க, மலையாளத்திலேயே நடிகர்கள் உண்டு .
ஆனால் சேரனை ஏன் கூப்பிடணும்?
‘ இருவது வருஷம் முன்னாடி கேரளாவுக்கே வந்து மலையாளப் பெண்ணுக்கு தமிழ் எழுத்துக்கள் சேலை கட்டிப் படம் எடுத்தவன்தானே நீயி? வாடி வா,, உனக்குத்தான் காத்திருந்தோம். மலையாள ஆதிவாசிகளை ஒழிக்க கேரளா அரசுக்கு உதவும் போலீஸ் யாரும் நம்முடே சேட்டன் மார் அல்லா. நோக்கனும் அயாட்கள் எல்லாம் பாண்டிப் பட்டிகள் தன்னே .. ‘ என்று கேரள மக்களுக்கு சொல்லாமல் சொல்ல வசதியாக- இந்தக் கேரக்டருக்கு பொருத்தமே இல்லாமல் சேரனை கூப்பிட்டு நடிக்கச சொல்லி இருக்கிறார்கள் .
இவரும் போய் நடித்து விட்டு வந்திருக்கிறார் .
பொருத்தமான உயரம் இன்மை , லூசான யூனிபார்ம் , ஆடி ஆடி நடக்கும் நடை என்று ஆரம்பக் காட்சிகளில் சிரிப்பு போலீஸ் போலவே இருக்கிறார் சேரன் .
பின்னால் வரும் காட்சிகளும் டோவினோ தோமஸ் போன்றவர்களின் ரியாக்ஷன்களும் சேரனைக் கொஞ்சம் காப்பாற்றுகின்றன .
நல்லதோ கெட்டதோ ஒரு படத்தில் ஒரு சூழலை தொடர்ந்து இரண்டு மணி நேரம் ரசிகனை உணரச் செய்யும் போது, அது சுமாராக இருந்தாலும் அதற்குள் ரசிகன் ஆழ்ந்து போய் விடுவான். அப்புறம் ஜஸ்ட் லைக் தட் என்ன ஒரு முடிவு சொன்னாலும் அந்தப் படம் நன்றாக இருக்கிற மாதிரியே தெரியும் .
பல மலையாளப் படங்களின் ஒகே லெவல் வெற்றிக்குக் காரணம் இதுதான் . (ஆனால் தமிழில் இது எல்லா நேரமும் பலன் தராது .
ஏனெனில் திரைக்கதையில் மலை உச்சி , அதல பாதாளம் இரண்டையும் நாம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டி விட்டோம்; காட்டிக் கொண்டு இருக்கிறோம் )
ஆனால் அந்த உத்தி மட்டுமின்றி இந்தப் படத்தின் அடிப்படைக் கதையும் நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதால், பரி ஏறிப் போகிறது நரி வேட்டை