
முத்தாரம்மன் பிலிம்ஸ் சார்பில் டாக்டர் பி ஜி எம் சிவகுமார் வழங்க பிந்து ஜான் வர்கீஸ் தயாரிக்க, கே.எஸ்.அதியமானிடம் உதவியாளராக இருந்த ஜான் ராபின்சன் இயக்க, அர்ஜுன் லால் இஷிதா இணையராக நடிக்க, மலையாளம் மற்றும் தமிழ் இரு மொழிப்படமாக உருவாகும் படத்தின் தமிழ் வடிவம் நீ நான் நிழல் .
படத்தின் முக்கிய நாயகனாக பதினேழு வயதுப் பெண்ணின் தந்தையாக ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் சரத் குமார் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார்.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் டீன் ஏஜ் பெண்களை எப்படியெல்லாம் தவறான பாதையில் கொண்டு சென்று அவர்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை சொல்லும் படமாம் இது .


மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது ஒரு பேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை விழும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களையும் சற்றே நீளமான ஒரு டிரைலரையும் போட்டுக் காட்டினார்கள். நன்றாக இருந்தன .
தனது சிஷ்யர் ஜான் ராபின்சனை வாழ்த்த வந்த கே எஸ் அதியமான் ” ஜான் நல்ல உழைப்பாளி . தொட்டால் சிணுங்கி படத்தை நான் இந்தியில் இயக்கியபோது மொழி தெரியாத எனக்கு பெரும் உதவியாக இருந்தார் ” என்றார்
இயக்குனர் , தயாரிப்பாளர் என்று பலர் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தப்பும் தவறுமாகவாவது அவர்கள் முயன்று தமிழ் பேசியது இங்குள்ள பல பீட்டர் மாஃபியாக்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விதார்த் சொன்ன ஒரு விஷயம் மிக அழகானது . “இந்தப் படம் சம்மந்தப்பட்ட யாரையும் எனக்கு தெரியாது. உங்களை எல்லாம் சந்திக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். நடிக்க வாய்ப்பு கேட்டு தெரியாதவங்கள எல்லாம் பாக்கறோம்ல? அப்போ தெரியாதவங்கள வாழ்த்தறதும் நம்ம கடமைதானே ?” என்றார் . கிரேட் விதார்த்!
பி ஜி எம் சிவகுமார் பேசும்போது ” பெண் குழந்தை வைத்துள்ள பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம் இது . கல்வி நிறுவனங்கள் அணுகினால் படத்தில் ரிலீஸ் தினத்தன்று பல ஊர்களிலும் ஒரு காட்சியை இலவசமாக போட்டுக் காட்ட தயாராக இருக்கிறேன் “என்றதும் அருமையானது

படத்தின் வசனகர்த்தாவும் இரண்டு பாடல்களை எழுதியிருப்பவருமான கண்மணி ராஜா ‘மனம் விட்டு’ப் பேசினார். “திடீர்னு பாட்டு எழுத சொல்லிட்டாங்க . கதாநாயகி இஷிதாவை பார்த்துட்டே இருந்தேன். அப்படியே கவிதை வந்துருச்சி . எழுதிட்டேன்” என்று சொல்லி விட்டு பாடல் வரிகளையும் சொன்னார் . ( ம்ஹும் .. பெருசா இம்ப்ரெஸ் பண்ணல பாஸு!)
இதோடு முடிஞ்சு இருந்தா பரவால்ல. அடுத்து பேசிய இசையமைப்பாளர் ஜார்ஜ் “அடுத்த படத்துக்கு நானும் கதாநாயகி முகத்தை பாத்துக்கிட்டே டியூன் போடறேன் ” என்றார் .
ஒரு விஷயம் கிளியர் பண்ணுங்கப்பா.. மேக்கப் போட்ட முகமா? மேக்கப் போடாத முகமா ?
Comments are closed.