இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தின் நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் விக்ராந்த்
படம் பற்றி உற்சாகமாகப் பேசும் விக்ராந்த் ” சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு,
எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்புதான் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ .
இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம்.
‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் இந்த படத்திலும்,
அழுத்தமான உணர்சிப்பூர்வமான கதாபாத்திரம் அமைந்துள்ளது. அவரவருக்கு ஏற்ற அழுத்தமான கதாபாத்திரத்தை அமைத்து உள்ளார் இயக்குநர்.
சுசீந்திரன் சார் என்னை மிகப்பெரிய இடத்தில் அமர வைக்க வேண்டும் என நினைக்கிறார். அவர் என் சகோதரர் . அவருக்கு நான் மிக கடமைபட்டுள்ளேன். 
சொல்லப்போனால் அவர்தான் எனக்கு குரு. அவர் என்னை கௌரவ வேடத்தில் நடிக்கச் சொன்னாலும் நான் நடிக்கத் தயார்.
சுசீந்திரன் சார் என்னிடம் ‘எல்லா படத்திலும் ஒரே மாதிரி இருக்க இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமா பண்ணலாம்.
முதலில் சாதுவா காட்டலாம் அதிகமா சிரிச்ச மாதிரி இருக்கணும்’ என்றார்.
இந்தப்படம் அடுத்து வரும் வெண்ணிலா கபடி குழு பாகம் 2 ஆகிய இரண்டு படங்களிலும் நகைச்சுவையா இருக்கணும்னு முயற்சி செய்து உள்ளோம்.
பாண்டிய நாடு படத்தில் சூரி அண்ணாவுடன் நான் ஏற்கனவே பணியாற்றி உள்ளேன். இந்த படத்திற்காக இருபத்தி ஐந்து நாட்கள் விசாகப்பட்டினத்தில்,
ஒன்றாக மிகுந்த சந்தோசமாக இருந்தோம். சூரி அண்ணா எனக்கு நீண்ட நாள் பழக்கம். அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே உள்ளார்.
சந்தீப் இந்த படத்தில் இருந்துதான் பழக்கம் . நட்பு ரீதியாகப் பழகினார். பாடல் காட்சிகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புக் கொடுத்துக் கொள்வோம்.
நாயகி மெஹரினுக்கு தெலுங்கில் மூன்று படங்கள் இந்த ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்துள்ளது.
அது போல் இந்த படமும் ஹிட் ஆக அமைந்து அவர்கள் தமிழிலும் மிகப் பெரிய கதாநாயகியாக வர கடவுளை வேண்டிக்கொள்கின்றேன்.
ஹரிஷ் உத்தமன் அண்ணன் பாண்டிய நாடு படத்தில் என்னுடன் முதல் முறையாக நடித்தார். எங்கள் எல்லாருக்கும் அந்தப் படம் திருப்பு முனையாக இருந்தது .
அவருடன் மீண்டும் பணியாற்றியதில் மிகுந்த சந்தோஷம். இது ஒரு குழு என்று இல்லாமல் நெருங்கிய நண்பர்களாக சேர்ந்து பணியாற்றிய படம்.
அதன் வெளிப்பாடு திரையில் தெரியும். நடுவில் படம் அமையவில்லை என்ற விரக்தியில் அதிக எடை கூடி விட்டேன்.
இப்பொழுது அதனைக் குறைக்க ஓட ஆரம்பித்தேன். இப்பொழுதும் காலை எழுந்தவுடன் அது தொடர்கிறது.
வெண்ணிலா கபடி குழு 2-காக கபடி முறையாகக் கற்று வருகிறேன். வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம்,
முதலாம் பாகத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு அதிகமாக இருக்கிறது.
கவண், தொண்டன், கெத்து, நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற மல்டி-ஹீரோ சப்ஜெட் படங்களில் நடித்து,
கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க எதிர் பார்த்து இருந்த நேரத்தில் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.
பாண்டிய நாடு படம் பார்த்துவிட்டு என்னை பாலா சார் தொலைபேசியில் தொடர்புகொண்டு,
இதே போன்று நடிப்புத் திறமையை தொடர வேண்டும் என்று ஊக்குவித்தார். மேலும் இன்னும் சில இயக்குனர்கள் பாராட்டினார்கள்.
அது எனக்கு ஊக்குவிப்பாக இருந்தது. அனைவரும் என்னை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமே என்னை மேலும் ஊக்குவிக்கிறது.
இனி கதாநாயகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிப்பேன்.” என்று விக்ராந்த் கூறினார்.