
நன்கு அறியப்பட்ட நடிகையும் சொல்வதெல்லாம் உன்னை நிகழ்ச்சியில் அடிக்கடி உணர்ச்சியில் கொந்தளிப்பவரும், தான் முதன் முதலில் இயக்கிய ஆரோகணம் படத்தின் மூலம் பாராட்டுக்குரிய பெண் இயக்குநராகவும் உயர்ந்திருக்கும் லக்ஷ்மி ராம கிருஷ்ணன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்தின் பெயர் ‘நெருங்கி வா முத்தமிடாதே’


ஆரோகணம் படத்தை தயாரித்த அதே ஏ வி ஏ நிறுவனம் சார்பில் ஏ.வி. அனூப் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதை நாயகனாக யோகா மாஸ்டரான ஷபீர் என்பவரும்,
கதாநாயகிகளாக பியா பாஜ்பாய் மற்றும் புகழ்பெற்ற கன்னடப் படமான லூசியாவில் நடித்த சுருதி ஹரிஹரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் “உறவுகளும் வளங்களும் இருக்கும்போது நாம் அதை மதிப்பது இல்லை . அது இல்லாமல் போகும்போதுதான் அதன் அருமை தெரிகிறது.
(பெற்றோரையும் பெட்ரோலையும் சொல்றாரோ? எஸ் .. அதேதான் )
திடீரென்று ஒரு நாள் பெட்ரோலே இல்லாமலே போய் விட்டது என்று வைத்துக் கொள்வோம் . என்னென்ன பிரச்னைகள் வரும் என்று நமக்குள் ஒரு லிஸ்ட் இருக்கும் அல்லவா?
உண்மையில் அதையெல்லாம் மீறி என்னென்ன நடக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக்கரு ” என்று உற்சாகமாக ஆரம்பித்தவர்…

தொடர்ந்து ” ஒரு லாரி டிரைவர் , இரண்டு பெண்கள் , இன்னொரு மனிதர் ஆகிய நால்வரின் கதைகளை ஒரு மையக் கதையில்,இணைத்து சொல்லி இருக்கிறேன்.
திருச்சியில் இருந்து காரைக்கால் வரை நடக்கும் பயணமாக இந்தக் கதை நிகழ்கிறது.
ஏன் திருச்சி முதல் காரைக்கால் வரை என்பதற்கும் கதையில் காரணம் இருக்கிறது .
முழுக்க முழுக்க பயணத்தில் நடக்கும் கதையை படமாக்குவது சவாலாக இருந்தது . அதை சரியாக செய்து இருப்பதாக நம்புகிறேன் ” என்றார் .
நடிகரும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் கதையை பிட்டு பிட்டாக சொல்லப் போக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் டென்ஷனாகிவிட்டார்.
இடையிடையே “ஸார் ப்ளீஸ்.. கதையைச் சொல்லாதீங்க…” என்றுகூட லக்ஷ்மி சொல்லிப் பார்த்தார்.
ஆனாலும் லக்ஷ்மி கதறக் கதற … ஏ.எல்.அழகப்பன் விடாமல் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சையும், ஹீரோவின் பின்னணியையும் சொல்லிவிட்டுதான் விட்டார்.
ஆரோகணம் நாயகி விஜி சந்திரசேகரும் இந்தப் படத்தில் இருக்கிறார் . “அவர் என் கேரக்டரை சொன்னபோது ‘சூப்பரான கேரக்டரா இருக்கே. நீங்க இதிலே நடிக்கலாமே?’ன்னுதான் கேட்டேன் . ஆனான் அவங்க ‘ உங்கள மனசுல வச்சே உருவாக்கின கேரக்டர் இதுன்னு சொல்லி நடிக்க வச்சாங்க . சந்தோஷமா இருந்தது ” என்றார்

படத்தில் லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் அளவில் சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம். அது என்ன கேரக்டர் ? யாரையோ காலி பண்ணச் சொல்லி அவர் உறுமுவது டிரைலரில் ஒலிக்கிறது. படம் வரட்டும் பாத்துடுவோம்