2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணை தயாரிப்பில் அர்னவ் விஜய், அருண் விஜய் , விஜயகுமார் , மகிமா நம்பியார், வினய் ராய், வெங்கடேஷ் நடிப்பில் சரோவ் சண்முகம் இயக்கி இருக்கும் படம் .
நாய்களுக்கான தேசிய அளவிலான பல் திறன் போட்டிகளில் தொடர்ந்து வெல்பவரும், உயர் ரக நாய்கள் பிறப்பித்து வளர்த்து விற்பனை செய்பவரும் பண ஆணவம் கொண்டவருமான ஃபெர்னாண்டோ ( வினய் ராய்), தன்னிடத்தில் உருவான கண் பார்வை குறைபாடுள்ள குட்டி நாய் ஒன்றை கொன்று விடச் சொல்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் அந்தக் குட்டி நாய் ஊட்டியில் வாழ்கிற ஒரு பள்ளிச் சிறுவன் அர்ஜுன் (அர்னவ் விஜய்)பார்வையில் படுகிறது . அவன் அதை எடுத்து வளர்க்கிறான் .
அதற்குக் கண் பார்வை தெரியாது என்ற விஷயம் அறிந்து ஒரு நிலையில் அதிர்ச்சி ஆனாலும் , பெற்றோர் சங்கர் – திவ்யா ( அருண் விஜய்- மகிமா நம்பியார்) , தாத்தா சண்முகம் ( விஜயகுமார்) இவர்களின் எதிர்ப்பையும் சமாளித்து வென்று வளர்க்கிறான். பொருளாதாரச் சிக்கல், கடன் பிரச்னை இவற்றையும் மீறி அதை குடும்பமும் ஏற்கிறது.
தவிர அந்த நாய் வளர்ந்த நிலையில் அதற்கு பயிற்சிகளும் தரப்படுகிறது. தான் கொல்லச் சொன்ன நாய்தான் அது என்பது ஃபெர்னாண்டோவுக்குத் தெரிய வர, அந்த நாயை வாங்கவும் , குடும்பத்தின் கடனை வைத்து போட்டியில் இருந்து விலகவும் சிறுவனின் குடும்பத்தை மிரட்டுகிறார் ஃபெர்னாண்டோ . நடந்தது என்ன என்பதே இந்த ஓ மை டாக்.
முதல் பாராட்டு முத்தான பாராட்டு படத்தின் நாயகன் அர்னவ் விஜய்க்கு. அற்புதம் செய்திருக்கிறான் குழந்தை. தோற்றம் , நடிப்பு என்று அனைத்திலும் அசத்துகிறான் . முக்கியமாக அவன் குரலும் அதில் ததும்பித் தளும்பும் உணர்ச்சிகளும் அபாரம். வாழ்த்துப் பூங்கொத்து.
இயக்குனர் சரோவ் சண்முகத்தின் கதை, திரைக்கதை மிக அருமை . குட்டி நாய் தப்பித்து அர்ஜுனை அடையும் அந்தக் காட்சியிலேயே படம் நம் மனதுக்குள் இடம் பிடித்து விடுகிறது. (நறுமணம் கமழும் சி ஜி !) எனில் குழந்தைகளுக்கு எவ்வளவு பிடிக்கும்!
சிறப்பான திரைக்கதை மற்றும் இயக்கம். அதுவும் திருக்குறளில் இருந்து ஒரு விசயத்தை எடுத்து காட்சி அமைத்து அதை கடைசிவரை பொருத்திக் கொண்டு போன விதத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அற்புதம் .
வழக்கமான ஹீரோயிச சுழலுக்குள் சிக்காமல் நாயகச் சிறுவன் அர்ஜுனை விட புத்திசாலியாக ஒரு சக சிறுவன் கதாபாத்திரத்தை அமைத்து இருப்பது எல்லாம் அடடே போட வைக்கிறது.
அருண் விஜய் தன் மகனுக்காக ஒரு படி இறங்கி வந்து நடித்திருக்கிறார் . அவருக்கு இது ஒன்றும் கஷ்டமான கதாபாத்திரம் அல்ல . எனவே சிறப்பாக செய்திருக்கிறார் . விஜயகுமாரும் சிறப்பாக நடித்துள்ளார் .
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது (விஜயகுமார்- அருண் விஜய்- அர்னவ் விஜய்) இந்திய வரலாற்றிலேயே இது இரண்டாவது முறை என்கிறார்கள் ( முதல் நிகழ்வு நாகேஸ்வரராவ், நாகர்ஜுனா, நாக சைதன்யா நடித்த ஒரு தெலுங்குப் படம்). இப்படி ஒரு படத்தை இன்னொரு நடிகரின் குடும்பம் ( சிவகுமார்- சூர்யா, கார்த்திக் – 2D என்டர்டெயின்மென்ட் ) எடுத்திருப்பது மிக உயர்ந்த விஷயம்.
மகிமா நம்பியார், வினய் ராய் , இயக்குனர் வெங்கடேஷ், ஆகியோரும் பொருத்தம்.
முக்கியமாகக் குட்டீஸ் எல்லோரும் அசத்தி இருக்கிறார்கள். அழகுச் செல்லங்கள்.
கோபிநாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்குள்ளும் நிவாஸ் பிரசன்னாவின் இசை காதுகளுக்குள்ளும் கவிதை பாடுகிறது . மேகநாதனின் படத் தொகுப்பு படத்தின் பாய்வுக்கு உதவுகிறது.
கஷ்டமான குடும்பம் என்ற லாஜிக்கை மீறித் தெரிந்தாலும் மைக்கேலின் கலை இயக்கம் அழகு. வினோதினி பாண்டியனின் ஆடை வடிவமைப்பு பொருத்தம். ரம்மியமான சி ஜி .
ஒரு காட்சி, காரண காரியங்களோடு அதன் தொடர்ச்சி , அதில் இருந்து இறுதிக் காட்சி என்று சிறப்பான திரைக்கதையும் அற்புதமான படமாக்கலும் நல்ல நடிப்பும் அர்னவின் தோற்றப் பொலிவும் படத்தை ஆகா ஓகோ சொல்ல வைக்கிறது .
ஓ மை டாக் …..குழந்தைகளுக்கு சாக்லேட் . பெரியவர்களுக்கு வெல்லக்கட்டி .
மகுடம் சூடும் கலைஞர்கள்
———————————————
அர்னவ் விஜய், சரோவ் சண்முகம் , 2D என்டர்டெயின்மென்ட்
