ஓஹோ எந்தன் பேபி @ விமர்சனம்

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் விஷ்ணு விஷால் மற்றும் ராகுல் தயாரிக்க, விஷ்ணு விஷாலின் பெரியப்பா மகனும் ஆனால் தம்பியுமான (ஆமா .. அப்படித்தான்) ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாக , இந்தி மலையாளப் படங்களில் நடித்து வரும் மிதிலா பால்கர் தமிழில் அறிமுகமாக , 

விஷ்ணு விஷால் நடிகர் விஷ்ணு விஷாலாகவும் மிஸ்கின் இயக்குனர் மிஸ்கினாகவுமே நடிக்க , கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, கஸ்தூரி, விஜய் சாரதி நடிப்பில் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும்  நிறைய விளம்பரப்படங்களின் இயக்குனருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்கும் படம். 

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்ல அவரது மேனேஜர் (ரெடின் கிங்ஸ்லி)  மூலம் வந்து சந்திக்கிறான்  மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருக்கும் ஓர் இளைஞன் (ருத்ரா) 

அவன் சொல்லும் இரண்டு கதைகளும் விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போன நிலையில் ஏதாவது காதல் கதை ஒன்று சொல் என்கிறார் விஷ்ணு விஷால். தனது காதலையே கதையாக சொல்கிறான் . 

தனது சிறு வயது முதலே எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அப்பா அம்மாவைப் ( விஜய சாரதி – கஸ்தூரி) பார்த்து வீட்டில் இருக்கவே பிடிக்காமல் சித்தப்பா மூலம் (கருணாகரன்) அடிக்கடி சினிமா பார்க்க ஆரம்பித்து,  சினிமா ஆர்வம் அதிகமாக சூழலில் பள்ளி சீனியர் , கல்லூரிப் பெண் என்று இரண்டு காதல் வந்து இரண்டிலும் தோற்ற நிலையில்,  சரியான பெண்ணை கல்லூரித் தோழியின் உறவினராக (மிதிலா பார்க்கர்) சந்திக்கிறான் . 

அவளோடு பழகும்போது இவனை நன்கு உணர்ந்து சினிமா இயக்குனராக முயற்சி செய் என்று அவனை திருப்புகிறாள்  அந்த தேவதை. அப்பா இறந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மாவின் சகோதரன் மூலம் பல கொடுமைகளை அனுபவிப்பவள் அவள். 

சினிமாவில் சேர்ந்து சின்சியராக உழைப்பது ஒரு பக்கம் இருக்க , காதலியின் உணர்வுகள் பிரச்னை இவற்றை காது கொடுத்துக் கேட்கவும் மறுப்பதோடு அதைக் கேலி செய்யவும் செய்கிறான் இந்தப் பயல்.. அவள் அதற்காக வருந்த அவள் மேல் கோபப்படுகிறான் . தன்னையும் தன் அம்மாவையும் கொடுமைப்படுத்தும்  தாய்மாமனின் குணம் அவனிடம் அப்படியே இருப்பது தெரிந்து அவனை விட்டு விலகுகிறாள் அவள். 

இதுவரை விஷ்ணு விஷாலிடம் அவன் கதை சொல்ல , இந்தக் கதை பிடித்திருப்பதாக அவர் கூற, இதுவரை சொன்னது என் வாழ்க்கை ; இதற்கு மேல் எழுத வேண்டும் என்கிறான் . 

அதற்கு விஷ்ணு விஷால் “செயற்கையாக எழுதினால் சரி வராது . நீ அவளை மறுபடியும் போய் சந்திக்க வேண்டும் . நடப்பதுதான் மீதிக் கதை”என்று சொல்ல ”அவளை சந்திக்க நான் ஒன்றும் சுயமரியாதை இல்லாதவன் இல்லை” என்ற ரீதியில்அவன்  மறுக்க, மறுக்க,  ”சந்தித்து நிஜமாக நடப்பதை சொன்னால்தான் உனக்கு படம் பண்ணுவேன்” என்று விஷ்ணு விஷால் கூற,  நடந்தது என்ன என்பதே படம். 

தனது தம்பிக்காக விஷ்ணு விஷால் தயாரித்து இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், தம்பி துருவா உற்சாகமாக-  உணர்ந்து நடித்திருக்கிறார். சின்னச் சின்ன மாற்றங்களோடு பள்ளிப் பையன், கல்லூரி மாணவன் , உதவி இயக்குனர் என்று எல்லாவற்றுக்கும் பொருந்துகிறார். 

காதலை காமெடியாக சொல்கிறேன் என்ற பெயரில் கிளாமர்  கலந்து செயற்கையாக சொல்லப்படும் முதல் காதல் , ஜஸ்ட் லைக் தட்  முடியும் இரண்டாவது காதல் என்று போய் மூன்றாவது காதல் இயல்பாக சொல்லப்படுகிறது . மூன்றாவது காதல் ரசிக்கப்படக் காரணம் மிதிலா பால்கர். 

அழகு, நல்ல நடிப்பு, சரியான டைமிங்கோடு கூடிய முகபாவனை மாற்றங்கள் , வசனங்களை வெளிப்படுத்தும் விதம், உடல் மொழிகள், நவ நாகரீகம், காஸ்மாபாலிட்டன் தன்மை , என்று எல்லா வகையிலும் அசத்துகிறார் இந்த செல்லக் குட்டி . (சரி .. அதுக்காக அவர் எக்கிக் கட்டிப் பிடிக்கும்போது அவரது கமுக்கட்டியில் உள்ள குட்டி முடிகள் எல்லாம்  ஸ்பஷ்டமாக தெரியும் அளவுக்காக ஷாட் வைப்பது இயக்குனரே,  ஒளிப்பதிவாளரே?)

ஒளிப்பதிவு, வண்ணம்,  கலை இயக்கம் , உடைகள் என்று படம் நன்றாக இருக்க, டெக்னிக்கலாக கவனிக்க வைக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார். 

தன்னை சினிமாவை நோக்கி சரியாக அனுப்பிய காதலியின் பிரச்னைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் உதவாமல் குறைந்த பட்சம் அவள் பேசும்போது காது கொடுக்காமல் அதற்கும் மேலே போய் அதை கேலி செய்யும் ஒரு நபர் , நாளைக்கு டைரக்டராகி என்ன புல் பிடுங்கப் போறான் என்று கேட்கும் அளவுக்கு நாயகனின் கேரக்டர் அரைவேக்காட்டுத்தனமாக அசமஞ்சத்தனமாக அபிஷ்டுத்தனமாக எழுதப்பட்டு இருப்பதுதான் படத்தின் பெரிய பிரச்னை .
 

அவர்களுக்குள் பிரச்னை வர வேண்டும் என்று நினைத்த படக்குழுவுக்கு அதை எப்படி மெச்சூரிட்டியாக சரியாக பிட்ச் பண்ண வேண்டும் என்று தெரியவில்லை. சரியாக சொன்னால் அது அவர்களுக்கு கை வரவில்லை. 
ஏ சி ரூமிலும் ஊஞ்சலிலும் ஈசி சேரிலும் பொழுதை அழிக்கும் ஒருவன்  உழைப்பின் பெருமையை பேசினால் எப்படி இருக்கும்?

விவசாயத்தைப் பற்றிப் படம் இயக்கப் போன சுகாசினி இந்திரா படத்தில் நஞ்சை வயலில் நெல்லை தூவினால் நெற்பயிர் வளர்ந்து விடும் என்று எடுத்தபோது எப்படி இருந்தது?

அப்படி இருக்கிறது படத்தின்  இந்த முக்கியமான ஏரியா . அதன் பின்னர் அதை திரைக்கதையில்  சரி செய்ய முடியவில்லை அவர்களால் . 

அதுவும் விஷ்ணு விஷாலுக்கு கதை சொல்ல வரும்வரை அவன் அதை உணரவில்லை என்ற போதே படம் படுத்தே விட்டது. 

கடைசிவரை அந்தப் பெண் மீது ஏதோ தப்பு இருக்கு  என்ற ரீதியில் அந்த உதவி இயக்குனர் மட்டுமல்ல .. படத்தின் இயக்குனரும் நம்புவது போல காட்சிகள் போவதும் அந்தப் பெண் கதாபாத்திரத்தை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவதும் அதற்காக அவளது சைடை அடித்து மண்டையை உடைத்து வீக் ஆக்கும்படி காட்சிகள் வைப்பதும் அந்தக் கால தூர்தர்ஷன் டிராமாவை தூக்கி சாப்பிடுகிறது . (இப்போ தூர்தர்ஷன் டிராமாவே நல்லா இருக்கு) .

திரைகதையில் அந்த அளவுக்கு நோகாமல் நோம்பு கும்பிட்டு இருக்கிறார்கள். 

சரி விஷ்ணு விஷால் கேரக்டர் மூலம் எதாவது திருப்பம் வரும் என்றால் அதுவும் லேது. 

விஷ்ணு விஷாலை வைத்து மிஸ்கின் ஏன் அப்படி ஒரு மலிவுப் பதிப்பு மலையூர் மம்பட்டியானை இயக்க வேண்டும் ; அது எந்த வகையில் இந்த படத்துக்குப் பலம் ? காரணம் தேடினாலும் கிடைக்காது . 

மிஸ்கினின் கோபம் , பேச்சு முறை , பார்வை அதன் பின்னால் வரும் காமெடி எல்லாம் சினிமாக்காரர்களுக்கு மட்டுமே புரியும் . பொது மக்களிடம் எப்படி ஒர்க் அவுட் ஆகும் ? மக்களுக்கு சினிமா எடுப்பதா? சில லட்சம் சினிமாக்காரர்களுக்காக ஒரு கேரக்டர் எழுதுவதா? அதுவும் சினிமாக்காரர்கள் பிரிவியூ ஷோ பிரஸ் ஷோ என்று ஒசியில்தான் படம் பார்க்கப் போகிறார்கள்  . அதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பத்து பைசா பிரயோஜனம் உண்டா? 

முதல் காதலி என்று ஒரு பெண் வருகிறாரே அவர் என்ன உயிருள்ள ஆளா இல்லை ஏ ஐ யில்  படைத்த உருவமா என்று குழம்பும் அளவுக்கு அப்படி ஒரு நdddddddடிப்பு. 

மிதிலா பால்கருக்கு அப்புறம் படத்தில் சிறப்பான விஷயம் விஷ்ணு விஷாலுக்கும் அவரது மேனேஜர் கம் நண்பனுக்கும் (ரெடின்)  இடையே நடக்கும் பாசாங்கில்லாத நட்பும் உரையாடலும் . so sweet . அதுமாதிரி இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கக் கூடாதா கண்ணுகளா ? 

தன் தவறை தானாக உணராத நாயகன் மிஸ்கின் சொன்ன உடன் சடாரென்று உணர்ந்து படாரென்று புரிந்து திடீரென்று கிளம்புவது எல்லாம் அபத்தம் (அதுவும் மிஸ்கின் சொல்லி .. ) 

கடைசியில் கிளைமாக்ஸ் என்று ஒன்று வைத்துள்ளார்கள் .அதை காமெடியில் சேர்ப்பதா சீரியஸில் சேர்ப்பதா என்று சரியாகச் சொல்வோருக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கலாம். 

உண்மையில் ருத்ரா அறிமுகம் ஆகி இருக்கும படத்தின் கதையை விட…. 

ருத்ரா விஷ்ணு விஷாலுக்கு பெரியப்பா பையன் ஆனால் வயதில் இளையவர் , ருத்ராவின் அப்பா விஷ்ணு விஷாலை ஹீரோவாக்க பாசத்தோடு எடுத்த முயற்சிகள் , இப்போது பதிலுக்கு ருத்ராவை ஹீரோவாக்க விஷ்ணு விஷாலின் அப்பா காட்டிய அக்கறை என்று …

ருத்ராவின் சொந்தக் கதையே சூப்பரா இருக்கு .

உண்மையில் படத்தின் பெயர் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது  நான் விஷ்ணு விஷாலிடம் , ” எப்படி இந்தப் பெயரை இத்தன வருஷமா விட்டு வச்சிருந்தாங்க என்று யோசிக்கும் அளவுக்கு அட்டகாசமான டைட்டில் , வச்சது யாரு இயக்குனரா?’ என்றேன் . இல்லை நான்தான் என்று விஷ்ணு விஷால் சந்தோஷமாக சொன்னார் . நான் இந்தப் படத்துக்காக ரொம்ப ஆவலோடு காத்திருந்தேன் .

பேரு வச்சீங்க சரி, கொஞ்சம் சோறும் வச்சிருக்கலாமே விஷ்ணு விஷால் டியர்?

மொத்தத்தில் ஓஹோ எந்தன் பேபி ….. ஆவ்வ்வ்வ்வ்வ்  உந்தன் பேபி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *