ஓய் @ விமர்சனம்

 

oye-6மார்க்  ஸ்டுடியோ இந்தியா  பிரைவேட் லிமிடெட் தயாரிக்க, கீதன், ஈஷா, சங்கிலி முருகன், நாகி  நீடு  ஆகியோர் நடிக்க , கதை திரைக்கதை  எழுதி பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கி இருக்கும் படம் ஓய் .

இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றால் ஒய்? பேசுவோம் 

அறியாத பிழையாக ஒரு கொலை செய்து விட்டு ஜெயிலில் இருக்கும் இளம்பெண் ஸ்வேதா (ஈஷா) , தனது அக்காவின் (நீலிமா ராணி) திருமணத்துக்காக பரோலில் வெளியே வருகிறாள் .
அப்போதே அவளை கொலை செய்ய முயல்கிறது ஒரு கும்பல் . 
அந்த விசயமே தெரியாத அவள்,  தன் அக்காவுக்கு ஒரு புடவை வாங்கிக் கொண்டு , சென்னையில் உள்ள அக்காவைப் பார்ப்பதற்காக பேருந்து ஏறுகிறாள் .
பக்கத்து இருக்கையில் கிருஷ் என்ற இளைஞன் (கீதன் ) . அவன்  சின்னாளப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த  பண்ணையாரின் (நாகி நீடு)  மகன் என்பது தெரிய வருகிறது . 
oye-4
பிஸ்கட் வாங்குவதற்காக  கிருஷ் பேருந்தை விட்டு இறங்க, அவனின்  கழுத்து தங்க செயினை ஒருவன் பிக்பாக்கெட் அடிக்கிறான் . அதைப் பார்க்கும் ஸ்வேதா பேருந்தில் இருந்து இறங்கி அவனைப் பிடிக்க ஓட,
 செயின் திருடு போனது தெரியாமல் பேருந்துக்கு வந்து விடுகிறான் கிருஷ் . 
பிக்பாக்கெட்காரனிடம் செயினை வாங்கிக் கொண்டு ஸ்வேதா வர , அதற்குள் பேருந்து போய் விடுகிறது . கிருஷ்ஷும் ஸ்வேதா இறங்கிப் போய் விட்டதாக எண்ணி விடுகிறான். 
நகையோடு வரும் ஸ்வேதா பேருந்து போய் விட்டதை எண்ணி அதிர்ந்து போகிறாள் . தங்க செயினை கொடுக்க , கிருஷ்ஷின்  சொந்த  ஊரான சின்னாளபட்டிக்குப் போகிறாள் . 
பேருந்தில் ஸ்வேதாவின் பை இருப்பதைப் பார்க்கும்  கிருஷ் அதை எடுத்துக் கொண்டு போகிறான் .
சென்னையில் தன்  காதலி காயத்ரிக்கு( பாப்ரி கோஷ்)  , ஸ்வேதாவின் பையில் — அவள் அக்காவுக்காக அவள் வாங்கி வைத்து — இருந்த  புடவையை பரிசாகத்  தருகிறான் கிருஷ்  .
oye-888
கிருஷ்ஷை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்பது காதலி காயத்ரியின்  லட்சியம் 
சின்னாளப்பட்டிக்கு போகும் ஸ்வேதாவை  , தன்  அண்ணனின்  காதலி என்று நம்பும் கிருஷ்ஷின் தங்கை திவ்யா (வர்ஷா),, தனக்கு மட்டுமே தெரிந்த அண்ணனின் காதல் ரகசியத்தை,
  தனது அப்பா , அம்மா , மாமா , அத்தை , தாத்தா (சங்கிலி முருகன்) ஆகியோருக்கு சொல்வதோடு , அந்த காயத்ரி என்று ஸ்வேதாவை எண்ணிக் கொண்டு,
எல்லோரிடமும அண்ணனின் காதலி என்றே ஸ்வேதாவை சொல்லி அறிமுகப்படுத்தி விடுகிறாள் .  சந்தோஷத்தில் குதிக்கும் குடும்பம் , உண்மையை சொல்ல  ஸ்வேதாவுக்கு சந்தர்ப்பமே  தரவில்லை. .
தன் மகன் கிருஷ்  ஒன்றுக்கும் உதவாத ஒரு வெட்டிப் பயல் என்று  நம்பும் பண்ணையார்,  ”இதுல காதல் வேறயா? ‘ என்று கோபப்பட்டு, உடனே அவனை கிளம்பி ஊருக்கு வரச் சொல்கிறார் .
oye-8
‘கிருஷ் வந்த உடன் உண்மை  தானாக எல்லோருக்கும் தெரியும். நாம் கிளம்பி ஊருக்குப் போய் விடலாம் என்று ஸ்வேதா எண்ணுகிறாள் . 
அதே நேரம் ஸ்வேதாவின் அக்காவைப் மிரட்டும் ஒரு கும்பல்,  “ஸ்வேதா எப்போது வந்தாலும் அவளைக் கொல்வோம்” என்று மிரட்டுகிறது.
தவிர தன் தங்கை கொலைகாரி என்பது தெரிந்தால் தன்  திருமணம் தடைபடும் என்று அக்காவும் பயப்படுகிறாள் .
எனவே ஸ்வேதா போன் செய்யும்போது ” நீ இங்கே வராதே. நீ அங்கேயே  இருப்பதுதான் உனக்கும் எனக்கும் நல்லது  ” என்று கூறிவிடுகிறாள் .
எனவே ஸ்வேதா கிராமத்தில் பண்ணையார வீட்டிலேயே   தங்க வேண்டி இருக்கிறது . 
மறுநாள்  ஊருக்கு வரும் கிருஷ் , “இவள் என் காதலி இல்லை” என்று கூற ,சட்டென்று பிளேட்டைத் திருப்பிப் போடும் ஸ்வேதா “நான்தான் காதலி ” என்று கூற ,
oye-88
கிருஷ்  மீது நம்பிக்கை இல்லாத அவனது குடும்பம்,  ஸ்வேதா சொல்வதையே  நம்புகிறது .   
எல்லோரும்  ஸ்வேதாவை அந்த வீட்டு மருமகளாகவே முடிவு செய்து விட, கிருஷ்ஷோ தன் நிஜக் காதலி  காயத்ரியை எண்ணி  வருந்துகிறான் . 
கிருஷ்ஷின் தந்தையான பண்ணையார் சிலம்பச் சண்டையில் வல்லவர் .  அந்த ஏரியாவில் நடக்கும் சிலம்பச் சண்டையில் பல முறை வென்றவர் . ஒரு நிலையில் நெஞ்சு வலி காரணமாக சிலம்பம் ஆட முடியாது போனவர் .
அவரிடம் தோற்ற ஒருவனின் மகனான காளி (நந்தா சரவணன்) சிலம்பச் சண்டையில் தேறி போட்டியில் ஜெயிக்க ஆரம்பிப்பதோடு , பண்ணையார் குடும்பத்தை அடிக்கடி அவமானப்படுத்துகிறான் .
ஆனால் பண்ணையாரின் ஊரில் இருந்து யாருமே சிலம்பம் ஆடப் போகாததால் அந்த அவமானம் தொடர்கிறது . 
இந்த நிலையில் சிலம்பப் போட்டிக்கு கிருஷ்ஷின்  பெயர் கொடுக்கப்படுகிறது . ஊரே அவனைக் கொண்டாடுகிறது. குடும்பமே உற்சாகம் அடைகிறது .
oye-3
இதற்கிடையில் ஸ்வேதாவுக்கு கிருஷ்ஷின் மீது  காதல் வருகிறது .
தாத்தாவின் ஆலோசனைப்படி சிலம்ப வாத்தியாரிடம் சிலம்பம் பயில்கிறான் கிருஷ் 
அதே நேரம் கிருஷ் சிலம்பப் போட்டியின் வென்றால் ஸ்வேதா ஊரை விட்டுப் போய் விடவேண்டும் என்ற ஒப்பந்தம் இருவருக்கும் ஏற்படுகிறது . 
இந்த நேரம் பார்த்து காயத்ரி  ஊருக்கு வந்து இறங்க ,  என்ன நடந்தது? சிலம்பப் போட்டியில் கிருஷ் வேன்றனா? ஸ்வேதாவின் நிலை என்ன ? என்பதே  இந்த ஒய் . 
 
ஓய் என்று நாயகி  சொல்லும்போது ஆரம்பிக்கும் பிரச்னை  கடைசியில் ஓய் என்ற ஒரு வார்த்தையால் முடிகிறது . 
இளையராஜாவின்  இசை இந்தப் படத்தின் முக்கிய அடையாளமாக  இருக்கிறது .  
ஜெயிலில் இருந்து பரோலில் வெளிவரும் கதாநாயகி , அவளைக் கொலை  செய்ய முயற்சி என்று துவங்கும் படம் ,
oye-5
ஸ்வேதா சின்னாளபட்டிக்குப் போகும்போது  பரபரப்பாக சூடு பிடிக்கிறது . 
அங்கே ஸ்வேதா உண்மை  சொல்ல வருவதை யாருமே ஏற்கவில்லை என்பது கொஞ்சம் சினிமாத் தனமாக இருந்தாலும்,  
அடுத்த சில காட்சிகளில் திரைக்கதையில் ஏற்படும் சுவாரசியம் அந்த குறையை போராடி சரி செய்கிறது . 
ஸ்வேதாவை போலீஸ் கைது செய்யும் அந்த இடைவேளை பகுதி  பராபரப்பை ஏற்படுத்துகிறது . அடுத்த சில காட்சிகளில் வரும் டுவிஸ்ட் பலே பலே 
அதன் பின்னர்  சிலம்பச் சண்டை விவகாரம் நைசாக லேசாக திரைக்கதைக்கு உள்ளே இறங்கி ஒரு நிலையில் படத்தை சுவாரஸ்யமாக ஆக்கிரமிக்கிறது . 
கீதன் ஜெயிப்பானா இல்லையா என்பதில் ஆரம்பப் பரபரப்பு இல்லை என்றாலும் மெல்ல மெல்ல உருவேறி சிலம்பப் போட்டிக் காட்சி பதைபதைப்போடு கூறிய பரபரப்பை ஏற்றுகிறது . 
oye 111
இப்படியாக துளி துளியாக ஒன்று சேரும் உணர்வு ஒரு நிலையில் அருவியாக பெருகி பலம் பெற்று நெகிழ்வும் மகிழவுமான அட்டகாசமான கிளைமாக்ஸாக பூரணத்துவம் பெற்று  நம்பிப் பார்க்க முடிகிற,  
காமெடி பிளஸ் செண்டிமெண்ட் சேர்ந்த ரம்மியமான படமாக  நிறைகிறது. 
மாட்டுக்குப் புண்ணாக்கு கலக்கிக் கொண்டு இருக்கும் பெண்ணிடம் அர்ஜுன்  “ஊதா சேலையில சும்மா கலக்குற ” என்று கூற,  
அந்தப் பெண “எந்த சேலை கட்டினாலும்  நான் கலக்கிதான்யா ஆகணும்”‘  என்று கூறுவது போன்ற, பிளாக் பாஸ்டர் காமெடி வசனங்கள் ஆகட்டும் …
“நான் இந்த ஊருல இருக்கறதுக்கு ஒரு காரணம் இருக்கு . ஆனா  நீ சிலம்பச்  சண்டையில் ஜெயிச்சா காரணம் மட்டும் அப்படியே இருக்கும் . நான் இங்க இருக்க மாட்டேன்” என்பது போன்ற,
 அர்த்தமுள்ள வார்த்தை மேஜிக் ஆகட்டும் …
oye-9
“நான் பண்ண தப்பை எல்லாம் மன்னிச்…. ஓ!  நான் பண்ணினது எல்லாமே தப்புதானே ” என்பது போன்ற இதயம் கனக்க வைக்கும் நெகிழ்வான  வசனங்கள் ஆகட்டும் … 
பாஸ்கரனின் வசனம் படத்துக்குப் பெரிய பலம் .
இசைஞானி இளையராஜாவின் பொருள் பொதிந்த  பின்னணி இசையில்,  கிளைமாக்சில் ஒலிக்கும் வசனங்கள் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது . 
முதல் பாடலில் ராப் இசையையும் தனக்கே உரிய பாணியில் ஒரு ஒழுங்குக்கு உட்படடு பயன்படுத்தி அசத்துகிறார் இளையராஜா . முடிஞ்சா ஒரு கை பாட்டு அட்டகாசமான ராஜ விருந்து . 
ஆனால் மூன்றாவதாக வரும் அந்த கிராமியப்பாடலில் இன்னும் எதிர்பார்த்தோம் இளையராஜா !
oye-99
ராப் பாடல் மற்றும் முடிஞ்சா ஒரு கை பாரு பாடல்களை அட்டகாசமாக தொகுத்து இருப்பது மட்டுமின்றி , காட்சிகளின் உணர்வு கெடாமலும்,
 அதே நேரம் போரடிக்கமலும் மிக நேர்த்தியாக படத் தொகுப்பு செய்திருக்கிறார் எடிட்டர் மணி . மிக இலகுவான மென்மையான திரைக்கதை ஒரு படமாக சிறப்பாக வெளிப்பட்டு இருப்பதில் மணியின் பங்கு ‘மணி’யானது . 
கிருஷ் ஆக நடித்து இருக்கும் கீதன்  கேரக்டரை ஆர்வத்தோடு  தாங்கி நடித்து இருக்கிறார் . காயத்ரியாக வரும பாப்ரி கோஷ் ஒகே .
ஸ்வேதாவாக வரும் நாயகி ஈஷா….  மிக சாதாரண தோற்றத்தில் அறிமுகம் ஆகி  மெல்ல மெல்ல மனத்தைக் கவர்ந்து ரசிகனுக்கு அன்னியோன்யமாகி,  கேரக்டரை உணர்ந்து நடித்து,
 ஒரு  நிலையில் படத்தின் நடிக நடிகையர் பட்டியலில் சிகரம் தொடுகிறார் ஈஷா . சபாஷ் .
தாத்தாவாக வரும் சங்கிலி முருகன் மண் வாசனைக்கு உதவுகிறார் . காமெடி மாமனாக வரும் அர்ஜுனும் ஒகே . 
oye 11
இவர்களை எல்லாம் மிக சிறப்பாக சரியாக பயன்படுத்திய வகையில் ஒரு நல்ல இயக்குனராக,  பிலிம் மேக்கராக ஜொலிக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் மார்கஸ் . 
இந்தக் கதை ரொம்ப நவீனமானதா  என்பது வேறு விஷயம் . ஆனால் இதுதான் கதை என்று முடிவான பிறகு அதற்கு தன் முழு மெனக்கெடலையும் போட்டு அற்புதமாக திரைக்கதை அமைத்து ,
மிகச் சிறப்பாக படமாக்கலையும் செய்து,  ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் ப்ளஸ் காமெடி பிளஸ் செண்டிமென்ட்  இயக்குனராக ஜெயிக்கிறார் பிரான்சிஸ் மார்கஸ் . 
முடிஞ்சா ஒரு கை பாடலையும் , ஸ்வேதா தன் காதலை சொல்லும் கண்மாய்க் கரை காட்சியையும் அவர் படமாக்கி இருக்கும் விதம் அவரது கலைநுட்ப நேர்த்திக்கும் தொழில் நுட்ப  நேர்த்திக்கும் உதாரணம் . 
ஒரு படத்தை மிக இலகுவாக வளர்த்து எடுத்துக் கொண்டு போய் கிளைமாக்ஸ் ஏரியாவில் மொத்த சுமையையும் குவித்து அதில் வெற்றி பெறுவது என்பது,  
oye-2
பல படங்களை இயக்கிய அனுபவம் மிக்க இயக்குனர்களுக்கு மட்டுமே சாத்தியம் முதல் படத்திலேயே அதை சாதித்து இருக்கும் பிரான்சிஸ் மார்கஸ்க்கு ஓர் அழுததமான கைகுலுக்கல் . 
இயல்பான காதல் நியாயங்களுக்கு எதிராக ஒரு கதையை சொல்லி அதை ரசிகர்களையும் ஏற்றுக் கொள்ள வைப்பது என்பது பகீரத தவம் .முதல் படத்திலேயே அதை சிறப்பாக செய்து,
 வெற்றி கங்கையை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் மார்கஸ் . கிரேட் ! 
நாகி  நீடுவுக்கு இருக்கும் வில்லன் இமேஜும் அவரது தெலுங்கு வாசனைப் பேச்சும் பண்ணையார் கேரக்டருக்கு போதவில்லை . அதற்கு வேறு நடிகரை போட்டு இருக்கலாம் .
தென்றல் பாடல் கிளாமராக இருந்தாலும் வேகத் தடை . 
படத்தின் கடைசிக் கட்சியை சின்னாள பட்டி பிரிவு ரோடில் முடித்ததற்குப்பதில் , பண்ணையாரின் வீட்டில் உறவுகளுக்கு மத்தியில் மங்களகரமாக முடித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் 
oye-999
இப்படி சிற்சில குறைகள்  இருந்தாலும் …..
கிராமம் ,கூட்டுக் குடும்பம் , மண் வாசனை , சிலம்பம் , கலாச்சாரம், காமெடி , செண்டிமெண்ட் , அழகிய காதல் , மனம் கவரும் வசனங்கள், அர்த்தமுள்ள மேக்கிங்  என்று,
 மனசுக்குத் திருப்தியாக ஒரு கண்ணியமான படம் பார்க்க வேண்டுமா? ஓய் படம் நல்ல சாய்ஸ் .
மொத்தத்தில் ஓய் .. ஓஹோய் !
மகுடம் சூடும் கலைஞர்கள் 
———————————————-
பிரான்சிஸ்  மார்க்கஸ் , பாஸ்கரன் , மணி,  ஈஷா 
.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →