மதிவாணன் தயாரிப்பில் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக அறிமுகமாக, ஜோடியாக அம்ரித்தா நடிக்க,
மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனா இயக்கியிருக்கும் முதல் திரைப்படம் ‘படைவீரன்’.
படத்தில் பாரதிராஜா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். மற்றும் ‘கல்லூரி’ அகில், இயக்குநர் மனோஜ் குமார், இயக்குநர் கவிதாபாரதி, இயக்குநர் விஜய் பாலாஜி,
நித்திஷ் வீரா, கன்யா பாரதி, திண்டுக்கல் அலெக்ஸ், கலையரசன், சாரா ஜோஸப்,. ஸ்ரீஜெயன், நிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இசை கார்த்திக் ராஜா
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் . இயக்குநர் மணிரத்னம் இசையை வெளியிட இயக்குநர் மிஷ்கின் அதைப் பெற்றுக் கொண்டார்.
மிஷ்கின் வாழ்த்திப் பேசியபோது, “இந்தப் படத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இயக்குநர் தனா என் படங்களை பார்த்துவிட்டு என்னுடைய ரசிகனாக மாறியிருக்கிறார்.
‘இந்த விழாவுக்கு நீங்கள் அவசியம் வர வேண்டும்’ என்று கடந்த மூன்று மாதங்களாக என்னைவிடாமல் துரத்தி வந்தார். அந்த அன்புக்காகவே நான் இங்கே ஓடோடி வந்தேன்.
இங்கே டிரெயிலரையும், பாடல்களையும் பார்த்த பின்பு, படத்தின் நேர்த்தியை பார்த்து தனாவின் திறமையை உணர்ந்து கொண்டேன்.
படத்திற்கு இசையமைத்திருக்கும் கார்த்திக் ராஜா மிகவும் திறமைசாலியான இசையமைப்பாளர். அவருடைய பாடல்களில் இருக்கும் லைவ் சவுண்ட் பிரமாதமாக இருக்கும்.
அவருடைய இசையை என்னுடைய படங்களில் பயன்படுத்த முடியாமல் போனதற்காக நான் உண்மையிலேயே வெட்கப்படுகிறேன். எனது அடுத்த படத்தில் கண்டிப்பாக கார்த்திக் ராஜா இருப்பார்..” என்றார்.
இயக்குநர் மணிரத்னம்,
“இயக்குநர் தனா என்னிடம் வந்து சேர்ந்த பின்பு ஒரு உதவி இயக்குநராக இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாமுமாக இருப்பார்.
பிரச்சினை, பஞ்சாயத்து, அடிதடி எல்லாவற்றையும் அவர் ஒருவரே சமாளிப்பார். இதனால் இந்தப் படத்துக்கு படை வீரன்னு பெயர் வைத்ததில் எனக்கு ஆச்சரியமில்லை.
தவிர எழுத்தாளர் ஜெயமோகனின் நட்பில் இலக்கியமும், எழுத்துமாக இருப்பவர் தனா. இலக்கியம் சம்பந்தமான எல்லா இடங்களிலும் அவரை நீங்கள் பார்க்கலாம். கதை விவாதத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொள்வார்.
இந்த விழாவிற்கு பாரதிராஜா வரவில்லை. பாரதிராஜா தமிழ்ச் சினிமாவிற்குள் நுழைந்த பின்பு அவருடைய பாதிப்பு இல்லாமல் அவருக்கு பின் வந்த எந்த இயக்குநரும் இல்லை.
அனைவரின் படங்களிலும் பாரதிராஜாவின் இயக்க ஸ்டைல் இருக்கிறது. அவர் இங்கு வந்திருந்தால் அவரிடம் நிறைய மனம்விட்டுப் பேசியிருப்பேன்.
அவர் வராவிட்டாலும் அவர் நடித்த இந்தப் படத்தை பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்…” என்றார்.