“மாவீரன் காடுவெட்டி குருவின் வரலாறுதான் ‘படையாண்ட மாவீரா “- வ . கௌதமன்

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும்  பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள  சிறப்பாக நடைபெற்றது. 
 
வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன்,  மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர்.
 
‘படையாண்ட மாவீரா’ இசை வெளியீட்டு விழாவுக்கு  வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். ‘பிக் பாஸ்’  முத்துக்குமரன் நிகழ்வைத்  தொகுத்து வழங்கினார்.  தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர். 
 
நடிகர் இளவரசு பேசுகையில், “தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்,” என்றார். 
 
இயக்குநர் வி.சேகர் பேசுகையில், “இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பலம். வன்னியர்கள் தங்களை வன்னியர்கள் என்று இன அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் . வன்னிய குல சத்திரியன் என்பது ஆரியத்துக்கு அடிமை என்பதன் அடையாளம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார். 
 
வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், “கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது ‘சந்தனக்காடு’ தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார். 
 
கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப் பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது ‘படையாண்ட மாவீரா’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார். 
 
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். ‘படையாண்ட மாவீரா’ படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்,” என்றார். 
 
சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப் படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்,” என்றார். 
 
தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், “படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்,” என்றார். 
 
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், “தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், ‘படையாண்ட மாவீரா’ பிரம்மாண்டத்தின் உச்சம், ‘புஷ்பா’ படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்,” என்றார். 
 
இயக்குநர் பேரரசு பேசுகையில், “நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கி விடக்கூடாது, மனதில் ஏற்றிக் கொள்ள வேண்டும். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்கிறோம் . நாம் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்றால் மற்றவன் நம்மை விட உயரத்தில் நிற்கிறான் என்று அர்த்தம் . இது மாற வேண்டும் . தமிழன் மற்றவர்களை விட உயரத்தில் இருக்க வேண்டும் . மற்றவர்களை தலை குனிந்து பார்த்தபடி நிற்க வேண்டும்  தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது ‘படையாண்ட மாவீரா’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார். 
 
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், “அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார். 
 
நீதிபதி கலையரசன் பேசுகையில், “அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ‘படையாண்ட மாவீரா’ படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக் கொண்டு வாழ்த்துகிறேன்,” என்றார். 
 
‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத் துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.
 
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’. 
 
இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார். 
 
இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி. 
 
எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது. 
 
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள். 
 
பெண்கள் மீது தப்பான எண்ணத்தோடு கை வைத்தால் அவன்  தலையை வெட்ட  வேண்டும் என்று குரு சட்டமன்றத்தில் பேசிய போது, மிருகத்தனமான பேச்சு என்றார்கள் . அதுவே பாகுபலி படத்தில் காட்சியாக வைத்த போது கைதட்டினார்கள் . காரணம் குரு தமிழன் . 
 
ராஜேந்திர சோழனின் பெருமை சொல்லும் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எங்கள் பக்கம் நில்லுங்கள். உங்களுக்கு ஆயிரம் கோடி தருகிறோம் என்று ஒரு பேரம் வந்த போது, என் வரலாற்று அடையாளத்துக்கும் இப்போது வாழும் என் மக்களையும் அழித்து வரும் ஆயிரம் கோடி எனக்கு வேண்டாம் என்று எட்டித் தள்ளியவர் குரு. அவரைத்தான் இங்கே சாதி வெறியர் என்றார்கள்  
 
என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன்.  இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். அதுதான் காடு வெட்டி  குரு. 
 
தமிழரசன் பற்றி படம் வரும். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார். 
 
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். 
 
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார். 
 
கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *