வி கே புரொடக்ஷன்ஸ சார்பில் நிர்மல் சரவணா ராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வ. கௌதமன, குறளமுதன், உமாதேவன், பாஸ்கர், பரமேஸ்வரி ஆகியோரின் இணை தயாரிப்பில் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாராக,
வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு , பாகுபலி பிரபாகர்,சரண்யா, ஆடுகளம் நரேன், தமிழ் கௌதமன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி , நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கௌதமன் மகன் தமிழ் கௌதமன் நடிப்பில் பால முரளி வர்மன் உரையாடலில் வ.கௌதமன் எழுதி இயக்கி நாயகனாக நடித்து இருக்கும் படம் .
படையாண்ட மாவீரா என்பது காடுவெட்டி குருவுக்கு டாக்டர் ராமதாஸ் கொடுத்த பட்டம் .
பிம்பத்தில் / சித்தரிப்பில் சாதி வெறியன் என்று உணர வைக்கப்பட்ட – ஆனால் மாவீரன் என்று வன்னிய இன மக்களால் கொண்டாடப்படும்- காடுவெட்டி குருவின் இன்னொரு வரலாற்றுப் பக்கத்தை திரையில் ஆவணப் படுத்தி இருக்கிறார் வ.கௌதமன் குரு பற்றிய விமர்சனங்களுக்கு வன்னிய – தமிழ் தரப்பின் அழுத்தமான பதிலாக இந்தப் படம் இருக்கிறது. அந்த வகையில் பல உண்மை சம்பவங்களோடு அழுத்தமாக இருக்கிறது படையாண்ட மாவீரா .
குருவின் வாழ்வை சம்பவங்களை எடுத்துக் கொண்டு அதில் சில கற்பனைகளும் கலந்து இந்தப் படத்தை எடுத்திருப்பதாக சொல்லும் நேர்மை கொண்ட கௌதமனின்இந்தப் படத்தில், குரு வந்த கதை வாழ்ந்த கதை, போராடிய கதை , போன கதை இவற்றில் இப்போது கட்டாயம் சொல்ல வேண்டியதை சொல்லி , குருவாக நடித்து இருக்கிறார் கவுதமன்.
வன்னிய இனத்தில் பிறந்தாலும் அங்கிருந்த குளத்தைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி தரவேண்டும் என்று வேல் கம்போடு போராடி , அதனால் தன் இனப்பகையை சம்பாதித்து செத்துப் போன குருவின் தாத்தா படையாட்சி பற்றிய கதையை அனிமேஷனில் சொல்லும் கவுதமன்,
தந்தையின் ஆசைப்படி மிலிட்டரியில் சேர்ந்த படையாட்சியின் மகன் ஜெயராமன் (சமுத்திரக்கனி) , ஒரு நிலையில் ராணுவத்தில் இருந்து வந்து, ஊருக்கு நல்லது செய்து, தாழ்த்தப்பட்ட மக்களை ( மன்சூர் அலிகான் மற்றும் குழு) அருகில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு சமமான இடம் தந்து, அவர்களை கொடுமை செய்யும் சுய சாதிக்காரனின் (ஆடுகளம் நரேன்) சாதி வெறியை எதிர்த்து அந்த சாதி வெறியனால் வெட்டிக் கொல்லப்படும் கொடுமைக்கு ஆளாக,
அப்பாவின் இழப்பில் நொறுங்கி – ”என் புருஷனைக் கொன்னவனக் கேள்வி கேட்க நான் என்ன கைக்கொசந்த ஆம்பளைப்பில்ளையா வச்சிருக்கேன்? ‘ என்ற அம்மாவின் (சரண்யா பொன்வண்ணன்) கூக்குரலில் , தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட சிறு வயது குருவாக தமிழ் கௌதமன் சிறப்பாக நடித்து இருக்கிறார் .
அதன் பின் குரு வளர்ந்து ‘குரு’ ஆனது… ஜல்லிக்கட்டுக்கு மாடு பார்க்கப் போன இடத்தில் வருங்கால மனைவியைப் பார்ப்பது… அந்தப் பெண்ணுக்கும் (பூஜிதா பொண்ணாடா) குருவுக்கும் வரும் ஒரு சிக்கலை டாக்டர் ராமதாஸ் ( ஏ எல் அழகப்பன்) கல்யாணமாகத் தீர்ந்து வைப்பது …
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் குரு உதவியது , அவர்களையும் படிக்க வைத்தது , தன் வீட்டிலேயே தாழ்த்தட்ட்ப சமூக மக்கள் சிலரை உரிமையுள்ள- குடும்பத்தில் ஒருவராக வைத்திருப்பது , அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்காக சுய சாதி ஆட்களையும் அதன் வழியே போலீசையும் பகைத்துக் கொள்வது ,
குருவின் ஜல்லிக் கட்டு பாசம், அரியலூர் சிமென்ட் ஃபேக்டரிக்கும் நிலக்கரி சுரங்கத்திற்கும் நிலம் கையகப்படுத்த வேற்று மொழி தெலுங்கு இந்தி முதலாளிகள் ,கார்ப்பரேட் கம்பெனிகள், அரசியல்வாதிகள், அரசுகள் போலீஸ் எல்லோரும் எப்படி எல்லாம் கோர வன்முறை வெறியாட்டம் ஆடி , மக்களை அனாதைகளாக்கி , அந்த விவசாய நிலத்தை வாழத் தகுதியற்ற நிலமாக மாற்றினார்கள் என்பது…
ஓர் அரசியல்வாதி குருவுக்கு வெண் நிறைய பணமாக நூறு கோடி அனுப்பியது …மண்ணை மலடாக்கி விவசாயத்தையும் மக்களையும் அழிக்க ஒரு கம்பெனி ஆயிரம் கோடி ரூபாய் டீல் பேசியது .. மக்களுக்காகவும் சோழ அடையாளங்கள் அழியக் கூடாது என்பதற்காகவும் அவற்றை குரு மறுத்தது,… கடைசியில் சிகிச்சைக்குப் போதுமான காசு கூட இல்லாமல் – மக்கள்கொடுக்க தயாராக இருந்ததும் அவர்களை பணக் கஷ்டத்துக்கு ஆளாக்கக் கூடாது என்பதற்காக அவற்றை மறுத்தது ..மண்ணை மக்களை அடையாளத்தை அழிக்கும் வேலைகளை யார் செய்தாலும் அவர்களை கடைசிவரைஎதிரியாகப் பார்த்தது என்று
போராடிய குருவின் வாழ்க்கையை உள்ளும் புறமும் உரித்து வைக்கிறார் கவுதமன், குருவுக்கு செய்யயப்பட்ட அரசியல் துரோகத்தை மட்டும் சொல்லவில்லை .
தவிர படத்தில் நிறைய உண்மையும் கற்பனையும் இருக்கு என்று அவரே சொல்லிவிட்டதால் , எது உண்மை எது கற்பனை எது உண்மை கலந்த கற்பனை என்று எளிதாக எல்லோராலும் பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டும் பின்னிப் பிணைந்து கிடக்கும் அளவுக்கு எழுத்து இருப்பது கவுதமன், பாலமுரளி வர்மன் இருவரின் எழுத்துக்கு சான்று.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழம். பிரபாகரன் என்ற பெயர் , சந்தனக் காடு , வீரப்பன் கதாபாத்திரம் , அண்ணன் தமிழரசன், கரிகால் சோழன், ராஜராஜ சோழன் , ராஜேந்திர சோழன் என்று தமிழன் இன வரலாறு , இப்படி பொங்கி வழியும் இனப் பெருமிதம் இந்தப் படத்தை ஒரு சமூகப் படம் என்று இல்லாமல் மொழிப்படம், இனப் படம், நம் படம் என்ற உயர்ந்த தன்மைக்கு கொண்டு போகிறது. வாழ்த்துகள் பாராட்டுகள் சகோதரர் கவுதமன் .
அதுவும் ராயல சீமா முதல் இலங்கை வரை வன்னி மரக் காடுகள் செழித்த, நீண்ட வரலாற்று நிலவியல் பெருமிதம் கொண்ட ஓர் பெரும் சமூகத்தை , ஜம்பு மகரிஷியின் யாகத்தில் அக்கினி சட்டியில் பிறந்த இனம் என்று ஆரியக்கட்டுக் கதைக்குள் புகுத்தும் மடமையை கண்டித்து , யார் அந்த இனத்தைக் கால காலமாக அழித்தார்களோ அவர்கள் சொல்லும் கதையையே அடையாளம் என்று நம்பும் வெள்ளந்திக் கூட்டத்துக்கு உண்மை சொல்லும்படியாக
“அது யாரோ சொன்ன கதை. இது நெருப்புல பிறந்த கூட்டம் இல்லை ; நெருபபாவே பிறந்த கூட்டம் என்று சொல்வதன் மூலம் உண்மையை சொல்ல எல்லோரையும் பகைத்துக் கொள்ளத் தயங்காத – அந்த காடு வெட்டி குரு போலவே இருக்கிறார் கவுதமன் .
குறிப்பாக எங்கோ நடந்த சம்பவத்தை உண்மைதானே என்ற பெயரில் சொல்வதாக கிணற்றுக்குள்ஒரு சமூகத்து சிறுவர்களைத் தள்ளி அவர்களை இன்னொரு சமூகம் கல்லால் அடிப்பதை நீண்ட நெடுநேரம் ஸ்லோ மோஷனில் காட்டி , படம் பார்ப்பவர்களை உணர்ச்சிக்கு அடிமையாக்கி இப்போதும் மேலும் வன்மம் பாராட்ட வைத்து அதில் பலன் காணும் குணம் கவுதமனிடம் இல்லை.
பாதிக்கப்பட்ட சமூகத்தை பாராட்டாவிட்டால் கூட பரவாயில்லை. அவர்களையே குற்றவாளி என்று சித்தரிக்கும் அயோக்கிய ஞானமும் கவுதமனிடம் இல்லை
அதாவது இது தாழ்த்தப்பட்ட மக்களை சிறுமைப் படுத்தும் படம் அல்ல . அவர்களையும் அனைத்துச் செல்லும் படம் . இந்தப் படம் பார்த்து விட்டு வெளிய வந்து அவனுங்களை வெட்டனும் என்ற வன்மத்தை இந்தப் படம் வளர்க்காது .
குருவின் எதிரிகள் எல்லாம் சாதி வெறி பிடித்த சுய சாதிக் கார்களும் கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசியல்வாதிகள் தானே தவிர , தாழ்த்தப்பட்ட மக்கள் இல்லை. அவர்கள் அவரோடு நின்றார்கள் , அவருக்கு தோள் கொடுத்தார்கள் ; உரிமை கொண்டார்கள், தியாகம் செய்தார்கள் என்று சொல்கிற படம் இது .
படைப்பு உரிமையைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கெட்டவர்களாக சித்தரிக்க ஆயிரம் வாய்ப்புகள் இருந்தும், அதை வைத்து மேலும் கல்லா கட்ட முடியும் என்றாலும் அதை கவுதமன் செய்யவில்லை.
அதாவது இது ; “நீ அப்படி சொன்னியா? நான் எப்படி சொல்றேன் பாரு ” என்று கலவரம் வளர்க்கும் படமில்லை.
ஒரு இடத்தில் மட்டும் திருமாவளவனைக் குறிப்பிடும் வசனம் ஒன்று பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் வருகிறது . அப்புறம் அது கவுதமனுகக்கே பிடிக்கவில்லை போல . வேறு படமாக மாற்றி விட்டார் .
அடுத்த தலைமுறையை சிறுவர் – குறிப்பாக சிறுமியரை முன்னிலைப்படுத்தி இருப்பது மேட்டிமையான விஷயம் .
படத்தில் பின்னணியில் காட்டப்படும் படைநிலை , பள்ளிப்படை, தன்னூத்து போன்ற கிராமப் பெயர்களின் வரலாற்றை வைத்தே தனித்தனி கம்பீரப் படங்கள் எடுக்கலாம். டைனோசார் படிமம், பல்லாயிரம் ஆண்டு கல் மரம் மட்டும் இல்லை , சோழ வரலாற்றின் கம்பீரங்கள் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அவ்வளவு இருக்கு
இது தமிழ்ப் படம். தமிழ் இன உணர்வு கொண்ட எல்லோரும் இது நம்ம படம் என்ற பெருமிதம் உருவாக்குகிற தமிழ் உணர்வுப் படம் .
” ஏங்க இது தமிழ்ப் படமாவே இருக்கட்டும் . ஆனால் காடு வெட்டி குரு இப்படி மட்டுமா இருந்தாரு ? நான் ஒரு விஷயம் சொல்லவா ? உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா? என்று எதிர்க் கருத்தும் சொல்லலாம். அதில் பொய்யோ உண்மையோ இருக்கலாம் ‘
”நாளைக்கு சாராயம் காய்ச்சினவனை எல்லாம் பெரிய ஆள் என்று சொல்வீர்களா/’ என்று கேள்வியும் கேட்கலாம் . அதை எல்லாம்… காய்ச்சினவன் , குடிக்கக் கொடுத்தவனை எல்லாம் கூட பெரிய ஆள் என்று எப்பவோ சொல்லியாச்சு.
ஆனால் இறந்து போன ஒருவர் தனது அம்மா பிணம் கிடந்த போது பொண்டாட்டியை படுக்கையறைக்கு கூப்பிட்டாரூ என்று சொல்கிறோமா ; இல்லை நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்றுதானே
கடவுளான ஒரு கதாபாத்திரத்தை அவதார புருஷன் என்று சொல்றோமா இல்லை பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு நெருப்பில் இறங்கச் சொன்னவன் என்று சொல்கிறோமா? அவன் ஏன் நெருப்பில் இறங்கச் சொன்னான் தெரியுமா என்று எத்தனை கம்பி கற்ற கதைகளை நம்பிக் கட்டுகிறார்கள். என்ரகச் சொன்னானா இல்லையா? அப்படித்தானே .
இது குருவைப் பற்றி சொல்லப் படவேண்டிய கதை . அவ்வளவுதான்.
தவிர படத்தில் கற்பனையும் இருப்பதாக கவுதமனே சொல்லி விட்டதால் அதற்கு மேல் இது பற்றிப் பேச ஒன்றும் இல்லை.
இது சாதிப்படம் (மட்டும்) அல்ல. ‘தமிழ்ப்’ படம் . அதுதான் இங்கே முக்கியம் .
குட்டி விஜயகாந்த் போன்ற தோற்றத்தில் மனதுக்குள் நுழையும் குரலோடு நன்கு வசனம் பேசி நடித்துள்ளார் கவுதமன், சிறப்பாக சண்டை, நெகிழ்வு , உத்வேகம் என்று காட்சிகளை வைத்து தன் மகன் கவுதமனுக்கு ஒரு நல்ல ஷோ ரீலும் தயாரித்துக் கொடுத்துள்ளார் .
காடு வெட்டி குருவின் மனைவி கதாபாத்திரம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அந்தக் கற்பனைக்கு குறை வைக்காமல் இருக்கிறார் பூஜிதா பொன்னாடா. சமுத்திரக்கனி பொருத்தமானசிறப்பு . சரண்யா , ரெடின் ஆகியோரும் அப்படியே . குருவின் அன்புக்கு பாத்திரமான தாழ்த்தப்பட்டவர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் மன்சூர் அலிகான் .
கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு பிரம்மாதம் . காடுகள் , மலைகள் , மக்கள் கூட்டம் , வியர்வை , கண்ணீர், ரத்தம் என்று எல்லாவற்றையும் உணர்வாகப் படம் பிடித்து இருக்கிறார் .
தன பங்குக்கு செண்டை அடித்து உருவேற்றுகிறார் ஜி வி பிரகாஷ்குமார் . பின்னணி இசை மட்டுமல்லாது கோயிலில் நிகழும் தமிழ் உணர்வுப் பாடல் , கடைசியில் வரும் டப்பாங்குத்துப் பாடல் இரண்டிலும் கமர்ஷியலாக கொலை குத்து குத்தி இருக்கிறார்கள் . நேர்ததியான பங்களிப்பு
ஓர் போலீஸ் கேரக்டரின் யதார்த்தமான இயல்புக்கு அப்பாற்பட்டு பாகுபலி பிரபாகர் கேரக்டர், நடிப்பாக நடிப்பது எரிச்சல் . அது கூர்மையாக இருந்து இருந்தால் கலவரக் காட்சிகள் இன்னும் வலு ஏறி இருக்கும் . எனினும் அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு .
ஒரு மனிதரின் வரலாறு என்று சொல்லப்படும் படத்தின் காட்சிகளில் சரித்திரம்தான் நிரம்பிக் கிடக்க வேண்டும் . சண்டைக் காட்சிகள் அல்ல,
படத்தின் ஆரம்ப சண்டைக் காட்சிகளில் காடு வெட்டி குரு தெரியாமல் குட்டி விஜயகாந்தே தெரிவது நடிகர் கவுதமனுக்கு நல்லதாக அமையலாம். ஆனால் படத்துக்கு அல்ல.
குறைந்த பட்சம் கிளைமாக்ஸ் பகுதியிலாவது நீளம் , நேரம், உணர்வுக் கூட்டல் கருதி சண்டைக் காட்சிகளை குறைத்து இருக்கலாம் . சட்டென்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு கமர்சியல் சினிமா என்ற உணர்வை ஏற்படுத்துவது இந்தப் படத்துக்கு பலம் அல்ல. இரண்டாம் பகுதியில் இருக்கும் கருத்தியல் நோக்கமும் நேர்த்தியில் முதல் பாதியில் டிஷ்யூம் டிஷ்யூம்களால் நீர்த்துப் போயிருக்கிறது. (இரண்டாவது பாதி சிறப்பு. )
இப்படி சில குறைகள் இருந்தாலும் காடு வெட்டி குருமற்றும் அவரது முன்னோர்கள் பற்றி சொல்லப் படாத பல விசயங்களை சொல்வதால் , சரியாக சொன்னால் புழைக்கப்பட்ட சில விசயங்களை தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்து இருப்பதால் — அவர் தரப்பை வலுவாக எடுத்து வைப்பதால் ,
முக்கியமாக தாழ்ததப்பட்டவர்களோடு பிறபடுத்தப்பட்ட மக்கள் ஒன்று பட்டால் தமிழ்க் குடிகளை அழிக்க முடியாது என்ற உண்மையை குன்றேறி நின்று முழங்குவது போல சொல்வதால் மாபெரும் தமிழ் உணர்வும் படமாக வந்திருக்கிறது .இது .
பிடித்து வைத்துக் களிமண்ணை பிள்ளையார் என்று முடிவு செய்வது போல , ‘காடு வெட்டி குரு பற்றிய என் கருத்தை – இவை உண்மையாக இருந்தாலும் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது .’ விட்ருவோம்.
ஆனால் திறந்த மனதோடு அணுகினால் இந்தப் படத்தை இன, மண், மொழி உணர்வு உள்ளவர்களால் புறக்கணிக்க முடியாது .
படையாண்ட மாவீரா .. ஆள்வார்.