பராரி @ விமர்சனம்

கலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஹரிசங்கர் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, சங்கீதா கல்யாண், ராஜேந்திரன், சாம்ராட் சுரேஷ், மகேந்திரன், பிரேம்நாத் நடிப்பில் எழில் பெரியவேடி என்பவர் இயக்கி இருக்கும் படம் . 
 
தமிழ் நாட்டுக் கிராமம் ஒன்றில் வன்னிய மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பகை . 
 
பலவித வேலைகளுக்கு உதவும் ஒரு பெரிய மலைப்பாறை யாருக்கு உரியது …. கால காலமாக சாமி கும்பிடும் கோவிலில் யாருக்கு முதலில் கும்பிடும் உரிமை…  என்று பகைக்கு பல காரணங்கள் . 
 
மேல் சாதிப் பெண் தேவகி (சங்கீதா கல்யாண்)  , தாழ்த்தப்பட்ட சாதி இளைஞன் மாறனை ( ஹரி சங்கர்) காதலிக்கிறாள். அது அவள் முறைமாமன் வேடிக்கும் ( ராஜேந்திரன்), மற்ற  மேல் சாதியினருக்கும் பிடிக்கவில்லை. 
 
ஒரு நிலையில் எல்லோரும் பிழைப்பு தேடி பெங்களூருக்கு  வேலைக்குப் போக, அங்கே கன்னட வெறி அமைப்பு ஒன்று எல்லோரையும் ‘தமிழன் தானேடா…’  என்று அடிக்க, 
 
அப்போதும் வேடி,  தேவகி – மாறனின் காதலை உடைக்க, கன்னட அமைப்புக்கு துணை போக,  நடந்தது என்ன என்பதே படம் 
 
அடிப்படையில் நல்ல கதை . 
 
எளிமையான முகங்கள் , பின்புலம் , காட்சி அமைப்புகள் . கிளைமாக்ஸ் காட்சியை அதிரும் வண்ணம் எடுத்து இருக்கிறார் இயக்குனர்  பாராட்டுகள் . 
 
அதே நேரம், இயற்கையாகக் காட்டும் அதீத  முயற்சி, பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறி ,செயற்கையான காட்சிகளாக மாறியதும்  படத்தில் நடந்திருக்கிறது.   
 
சங்கீதா கல்யாண், ஹரி சங்கர் , ராஜேந்திரன் மூவரும் சிறப்பாக நடித்துள்ளனர் 
 
 
ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் , சுகுமாரின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது 
 
இதுதான் கதை என்று ஆன பிறகு,  மேல் சாதி தரப்பை இவ்வளவு கேவலமாக சுத்தபத்தமில்லாத காட்டுமிராண்டிக் கூட்டம் போல காட்டத் தேவை இல்லை.எல்லோரையும் சமமாக எண்ணுவோருக்கே இது முகச் சுளிப்பையே தரும் 
 
தான் கட்டிக்கப் போகும் மாமன் பெண்ணிடம் கர்நாடக ஆட்கள் தப்பாக நடந்தும் அவளது மாமன் அவளையே குறை சொல்கிறான் . கர்நாடகா தரப்புக்கு தகவல்கள் தருகிறான் என்பது எல்லாம் உச்சபட்ச செயற்கை மற்றும் நாடகத்தனம் 
 
”நீ உன் ஊரில் பக்கத்து தெருக்காரனுக்கு தனி தரலன்னா,  கன்னடன் உனக்கு எப்படி தண்ணி தருவான்/” என்பதே படம் மறைமுகமாகக்  கேட்கும் கேள்வி . 
 
எல்லோரும் சமம் ; தாழ்த்தப்பட்டோருக்கான உரிமையும் அந்தஸ்தும் தரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 
 
ஆனால்…. 
 
 
ஒவ்வொரு முறை காவிரி பிரச்னை வரும்போது, நன்றாகத் தமிழ் தெரிந்த வேற்று  மொழிக் கூட்டம் ஒன்றும் அதை மடத்தனமாக நம்பும் அரைவேக்காடு கூட்ட்ம் ஒன்றும் இதே போல ” நீ மழை நீரை சேகரிக்காம கடலில் வீணா கொட்டுற. ஆனா அவன் கிட்ட தண்ணி கேட்டு சண்டை போட்டா என்ன நியாயம் ? என்று யோக்கியம் போலக் கேட்கும். 
 
கேடுகெட்ட கேள்வி இது . அப்படி ஒரு கேள்விக்கு சோரம் போகும் படம் இது. 
 
“நீ கூடத்தான் வேலைக்குப் போகாம ஊரை சுத்துற . இப்படி வெட்டி நியாயம் பேசற. அதனால உன் பாட்டன் சொத்துல உனக்கு வர வேண்டிய பாதிப் பங்கை பங்காளிக்கே கொடுத்துரலாமா?”  என்று அவர்களிடம் திருப்பிக்  கேளுங்கள் . ஒத்துக்குவானுகளா?
 
கடமையைச் செய்யச் சொல்லி கழட்டிக் கூட அடிக்கலாம். தப்பில்லை . ஆனால் உரிமையை மறுப்பதை ஏற்க முடியாது . 
 
மழை நீரைத் தேக்குவது கடமை . ஆனால் நதி  நீர் நம் உரிமை 
 
நதி  நீர் வராவிட்டால் அது எல்லா சமூக மக்களுக்கும் தான் கஷ்டம் . அதனால் ஆதிக்க சாதி மட்டும்தானா கஷ்டப்படும். ?
 
 எல்லா தரப்பையும் தண்ணி இல்லாமல் தவிக்க வைக்க விரும்பும் வஞ்சகன்தான் அந்தக் கேள்வியைக் கேட்பான்
 
 
எல்லாவற்றையும் விட முக்கியமாக , ஊரு உலக நியாயம் எல்லாம் பேசும் இந்தப் படத்தில், ஒரு கன்னட கேரக்டர் ” பெங்களூர் எங்க மண்ணு எங்க உரிமை. தமிழனுக்கு இங்க என்ன வேலை?’ என்று கேட்டுக் கொண்டே ஏ ஏ ஏ ஏ ….இருக்கிறது 
 
பதிலுக்கு ஒரு கேரக்டர் கூட, ”பெங்களூர் பெரும்பாலும் தமிழர்கள் காலகாலமாக வாழ்ந்த பகுதி . மொழி வாரி மாநிலப்  பிரிப்பின்போது திராவிட, தேசிய, கம்யூனிச துரோகத்தால் தமிழகம் இழந்த பகுதி ” என்ற உண்மையை…
 
 படத்தில் ஒரு காட்சியில் கூட ஒரு பயுள்ள கூட , அவுட் பிளாக்கில் கூடச் சொல்லவில்லை . 
 
அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் போல ஒரு பெரிய கொடுமைதான். 
 
எனவே , பராரி…. பஞ்சை . 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *