பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் சினிஷ் தயாரிப்பில், ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இளவரசு, இளங்கோ நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்கும் படம்.
மனைவி (ரமா ) ஒரு டீன் ஏஜ் மகள் (பிரார்த்தனா) ஆகியோரோடு ஒரு வாடகை வீட்டில் பல வருடங்களாக வசிக்கிறார் நடுத்தர வயது அரசு ஊழியர் (எம் எஸ் பாஸ்கர்) ஒருவர் . அதே வீட்டின் மேல் மாடிக்கு , கர்ப்பிணி மனைவியுடன் ( இந்துஜா) வாடகைக்கு குடி வருகிறார் – ஐ டி நிறுவன ஊழியர் ( ஹரீஷ் கல்யான்) ஒருவர் . வீட்டு உரிமையாளர் (இளவரசு) அங்கே இல்லை.
ஆரம்பத்தில் சம்பிரதாய அறிமுகம் , நல விசாரிப்புகள், தினசரி ஹாய்கள், ஒரே வீட்டில் சாப்பாடு என்று போகிற சூழல், ஐ டி ஊழியர் கார் வாங்கியபோது மாறுகிறது . இடம் போதாமை, ஐடி ஊழியரின் அலட்சியமான கார் நிறுத்தல்கள் காரணமாக, அரசு ஊழியருக்கு தனது இரு சக்கர வாகனத்தை வெளியே எடுப்பதும் உள்ளே நிறுத்துவதும் சிரமமாகிறது . அப்படி ஒரு முறை நடக்கும்போது, தெரியாமல் இரு சக்கர வாகனம் உரசி காரில் கீறல் விழ, ஐ டி ஊழியன் தனது தரப்பு நியாயத்தை மட்டும் பேச,
வாக்கு வாதம் தடித்து, சண்டையாகி, அடிதடியாகி, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய், வன்மமான அவமானம் மற்றும் கொலை முயற்சிகள் போக, அப்புறம் என்ன என்பதே பார்க்கிங்

அப்பார்ட்மென்ட்கள், ஒண்டுக் குடித்தனங்கள், மட்டுமல்ல சொந்த வீட்டில் கூட சக உறவினர்களோடு பார்க்கிங் பிரச்னை உண்டு என்பதால் எல்லோரும் இயல்பாக தங்கள் அனுபவங்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்கிற கதையை எழுதி, இயக்கி இருக்கிறார் ராம் குமார் பாலகிருஷ்ணன். படமாக்கல் மற்றும் இயக்கமும் சிறப்பு. காரின் சக்கரம் சுழல்வதைக் காட்டி விட்டு அடுத்த ஷாட் ஆக, அமர்ந்து இருக்கும் எம் எஸ் பாஸ்கர் திரையில் கடிகாரச் சுழற்சியில் சுழலும் ஷாட் ஒரு உதாரணம் . அதே போல அந்த டேப் ரிக்கார்டரை கடைசியில் ஹரீஷ் கல்யாண் உடைப்பது …. சபாஷ்.
கதாபாத்திர வடிவமைப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும் மிக அழகாக அட்டகாசமாக உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார் ஹரீஷ் கல்யான். தோற்றப் பொலிவும் ஐ டி இளைஞன் கேரக்டருக்கு அப்படியே பொருந்துகிறது. வாழ்த்துகள் . கேரக்டர் வடிவமைப்பு மட்டும் சரியாக இருந்திருந்தால் இந்தப் படம் ஹரீஷ் கல்யாணுக்கு தந்திருக்க வாய்ப்புள்ள உயரமே வேறு.
அதே போல மிகப் பெரிய கேரக்டர் அசாசினேஷனுக்கு ஆளாக்கப்பட்ட கேரக்டர் என்றாலும் எம் எஸ் பாஸ்கர் நுண்ணிய உணர்வுகளைக் கூட மிக அருமையாக வெளிப்படுத்தி மிக சிறப்பாக நடித்துள்ளார்.

இந்துஜா கதாபாத்திரமாகவே பொருந்தி நடித்திருக்கிறார் . மிகச் சிறப்பான நடிப்பு .
ரமா, பிரார்த்தனாவும் ஒகே.
சாம் சி எஸ் இசை படத்துக்கு பெரிய பலம். அதே போல ஜிஜூ சன்னியின் ஒளிப்பதிவும் அருமை.
பிலோமின் ராஜ் படத் தொகுப்பும் சிறப்பு
எல்லாம் முதல் பாதி வரை.
இரண்டாம் பகுதியில் ரிவர்ஸ் கியரில் லாக் ஆகி, படத்தை கன்னாபின்னா என்று இடித்து அடித்து உடைத்து நொறுக்கித் தள்ளுகிறது திரைக்கதை என்னும் கார் . டோட்டல் இம்மெச்சூரிட்டி.
அரசு ஊழியராக எவ்வளவோ சக்தி உள்ள ஒரு நடுத்தர வயது நபர் , மனைவியின் தம்பி ரவுடியாக இருக்கும் நிலையில் ஒரு சுண்டக்கா ஐ டி ஊழியனை பழி வாங்க , தனது மகளை அப்படி ஒரு கேவலமான அருவருப்பான விதத்தில் பயன்படுத்துவது கொடுமை . (அதுவும் அந்த ஒரே மகளுக்கு சிறப்பாக கல்யாணம் செய்து வைப்பதற்காக , ரிப்பேர் ஆகும் டேப் ரிக்கார்டர், மிக்சி ஆகியவற்றை தானே கஷ்டப்பட்டு சரி செய்யும் அளவுக்கு சிக்கனமாக இருக்கும் அப்பா)
இன்னொரு பக்கம் இரண்டு தரப்பு பெற்றோரையும் எதிர்த்துக் கல்யாணம் செய்த காரணத்தால் இரு தரப்பும் கை விட்டு விட்ட நிலையில் தனியாக இருக்கும் கர்ப்பிணி மனைவி மீது கொஞ்சமும் அக்கறை இன்றி…

மீண்டும் மீண்டும் அடிதடி, வஞ்சக செயல்கள் என்று செய்து கொண்டே இருக்கிறான் அந்த ஐ டி இளைஞன் . கர்ப்பிணி மனைவி பற்றி கவலைப்படாமல் இரவில் எங்கோ குடித்துக் கொண்டு இருக்கிறான். தக்காளி யார்றா நீங்கள்லாம்? உண்மையில் அந்த ஐடி ஊழியன் தனது மனைவியை படம் முழுக்க வார்த்தையால் கொஞ்சுகிறானே ஒழிய, அவள் மீது அரசு ஊழியருக்கு இருக்கும் அக்கறை கூட அவனுக்கு இல்லை.
அதுவும் எல்லாம் சமாதனம் என்ற நிலைக்கு வந்த பிறகும் அரசு ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மாட்டி விட திட்டமிடுகிறான் .
ஒரு நிலையில் இது படம் பார்க்கும் நமைப் போன்ற , இரண்டு இயல்பான மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் பார்க்கிங் பிரச்னை அல்ல. இரண்டு சைக்கோக்கள் அல்லது மன நல மருத்துவமனையில் இருந்து பாதி சிகிச்சையில் மதில் சுவர் குதித்து தப்பி வந்தவர்களுக்கு இடையேயான சண்டை என்று தோன்றுவதால் , படத்தின் மீதான பிடிப்பு போய் விடுகிறது .
பார்க்கிங் பிரச்னை யதார்த்தம்தான் . ஆனால் ஒரே இடத்தில் அருகருகே குடியிருக்கும் இரண்டு குடும்பஸ்தர்கள் இடையே வரும் பார்க்கிங் பிரச்னையில் யதார்த்தமாக என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போமா?
முதலில் உள்ளுக்குள் எரிச்சல். அப்புறம் முணுமுணுப்பு, முகம் திருப்பிக் கொள்வது, அப்புறம் சின்னச் சின்ன நடவடிக்கைகள் மூலம் பேசாமலே புரியவைப்பது . அப்புறம் போலியாக இயல்பாகப் பேசுவது போல நடிப்பது.. அப்புறம் வார்த்தை தடிப்ப்து… இவை எல்லாமோ அல்லது ஒன்றிரண்டு கூடக் குறையவோ நடந்து …

எல்லாம் மீறி, அடிதடி , கைகலப்பு , கத்திக்குத்து , போலீஸ் ஸ்டேசன் என்று …..ஒரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக வெடித்து முடியும். அப்புறம் ஒருவரோ அல்லது இரு தரப்போ காலி செய்வார்கள். அவ்வளவுதான் .
இப்படி இன்ஸ்டால்மென்ட்டில் அடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதுவும் இரண்டு தரப்புமே வாடகைக்கு இருக்கும்போது.
சொல்லப் போனால், இந்தப் படத்தில் காட்டப்படும் எம் எஸ் பாஸ்கர் , ஹரீஷ் கல்யான் கேரக்டர்களின் வடிவமைப்பு சூழல் ஆகியவற்றைப் பார்க்கும்போது , இவர்கள் இந்த அளவுக்குக் கூடப் போக மாட்டார்கள்.
டீசன்சி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது உள்ள அக்கறை காரணமாக அப்பார்ட்மென்ட்டில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டுப் போனவர்கள்கூட இதே சென்னையில் உண்டு .
ஆனால் இந்தப் படத்தில் எம் எஸ் பாஸ்கரும் ஹரீஷ் கல்யாணம் ரெகுலர் இன்டர்வலில் சாரி சொல்லிக் கொள்வதும் அப்புறம் அடித்துக் கொள்வதுமாக இருக்கிறார்கள் கடைசியில் டைம் ஆச்சு ; படத்தை முடிக்க வேண்டும் என்பதால் கடைசியாக ஆளுக்கு ஒரு சாரி சொல்லிப் போகிறார்கள்.

இந்தத் திரைக்கதைப்படி இதற்கு அப்புறமும் ரெண்டு நாள் கழிச்சு எம் எஸ் பாஸ்கரோ , ஹரீஷ் கல்யானோ எதாவது செய்யலாமே . ஏன் சார் அநியாயமா படத்தை முடிச்சீங்க?
மொத்தத்தில் பார்க்கிங் ….
அருமையான ஸ்லாட் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் பார்க்கிங் செய்த விதத்தில்தான் பலத்த விபத்து .