ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்க,
இனிகோ மற்றும் மாதையன் மகன் செங்குட்டுவன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, முறையே ஸ்ரீ பிரியங்கா மற்றும் அனுஷ்கா அவர்தம் ஜோடியாக நடிக்க ,
யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்திரன், பால சரவணன், ரமேஷ் திலக், காளி வெங்கட் ஆகியோர் உடன் நடிக்க ,
ஐயப்பன் இயக்கி இருக்கும் படம் பிச்சுவா கத்தி
“கிராமத்தில் மகிழ்சியாக சுற்றித் திரியும் மூன்று இளைஞர்கள் விளையாட்டாய் ஒரு தவறு செய்கின்றனர். அதற்கான தண்டணையை அனுபவிக்க காவல் நிலையம் செல்கின்றனர்.
காவல் நிலையத்திலுள்ள அதிகாரி இவர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கேட்கிறார். இவர்கள் மறுக்கவே, அவர் மிரட்டுகிறார்.
இதனால் தங்களை காப்பாற்றிக் கொள்ள கெட்ட வழியில் ஈடுபட்டு பணத்தை தருகின்றனர்.
ருசிகண்ட பூனை போல தீய செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறனர். ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளாகவே மாறிப் போகிறானர். இறுதியில் அவர்கள் வாழ்க்கை மீண்டதா?
இவர்களின் வாழ்வை திசை திருப்பிய அந்த அதிகாரி என்னவானார் ? ,ஒரு சிறு தவறு அவர்களை எப்படி திசை மாற்றியது என்பதை எல்லாம் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்கிறோம் ” என்கிறார் இயக்குனர்
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பேரரசு, எஸ் ஆர் பிரபாகரன் , பாக்கியராஜ் கண்ணன் , தயாரிப்பாளர் சங்க கவுரவச் செயலாளர் கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டன.
இரண்டு இளைஞர்கள் அவர்களது இணை … இவர்களின் காதல் , இளைஞர்களுக்கு வரும் பகை என்று படம் போவது முன்னோட்டத்தில் தெரிந்தது .
என் ஆர் ரகுநந்தன் இசையில் யுக பாரதி வரிகளில் அமைந்து திரையிடப்பட்ட இரண்டு பாடல்கள் இனிமையாக இருந்தன . சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தன .
நிகழ்ச்சியில் பேசிய நடிகர்கள் காளி வெங்கட் பால சரவணன் ஆகியோர் தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தை முன் கூட்டியே கொடுத்ததற்காக தயாரிப்பாளரைப் பாராட்டினர் .
இவர்களும் ரமேஷ் திலக்கும்” தயாரிப்பாளர் மகன் என்ற பந்தா இல்லாமல் செங்குட்டுவன் எளிமையாக பழகியது மறக்க முடியாதது ” என்று பாராட்டினர் .
நிகழ்வில் பேசிய இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்
“நான் இயக்கிய சுந்தர பாண்டியன் படத்தில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இனிகோ தான் .
சசிகுமார் ஹீரோவாக முடிவான பிறகு இனிகோ இன்னொரு கேரக்டரில் நடித்தார். திறமைசாலியான இனிகோவுக்கு இந்தப் படம் சுந்தர பாண்டியனாக அமையட்டும் .
தமிழ்ப் படத்தின் கதாநாயகிகள் பலரும் தமிழர்களாக இல்லை என்பது வருத்தமான விஷயம் . இந்தப் படத்தின் கதாநாயகி ஸ்ரீ பிரியங்கா ஒரு தமிழ்ப் பெண் . பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் .
இதுவரை தமிழ்ப் பெண்கள் அதிகம் நடிக்க வராததற்குக் காரணம் ஒழுக்க மீறல் குறித்த பயம்தான் . ஆனால் இப்போது அப்படி இல்லை.
எல்லோருமே நட்புடன்தான் பழகுகின்றனர் . எனவே இன்னும் நிறைய தமிழ்ப் பெண்கள் கதாநாயகிகளாக நடிக்க வர வேண்டும் ” என்றார் .
இயக்குனர் பேரரசு தன் பேச்சில்
” வருடத்த்க்கு இரண்டு படம் என்று கொடுத்துக் கொண்டு இருந்தேன் . கடைசி இரண்டு படங்களில் மட்டும் ரெண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று ஆனது .
இப்போ இந்த பிச்சுவா கத்தி படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது உடனே படம் ஆரம்பிக்கணும் என்று முடிவு செய்து விட்டேன் . விரைவில் அறிவிப்பு வரும் .
டிரைலர் அவ்ளோ நல்லா இருக்கு . பிரபாகரன் பேசியதுபோல தமிழ்ப் பெண்ணான ஸ்ரீ பிரியங்கா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்து இருப்பது சந்தோஷமான விசயம் .
இன்னும் நிறைய தமிழ்ப் பெண்கள் நாயகியாக நடிக்க வர வேண்டும் ” என்றார்
நாயகன் செங்குட்டுவன் பேசும்போது 
” நான் நாயகனாக நடிக்க என் அப்பா தயாரித்த முதல் படம் சரியாக அமையவில்லை. சிலரை நம்பி ஏமாந்தோம் .
அடுத்து படம் எல்லாம் எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன் . ஆனால் என் அப்பா எனக்காக இந்தப் படத்தை எடுத்துள்ளார் . படப்பிடிப்பில் ரமேஷ் திலக் நடிப்பில் எனக்கு நிறைய உதவிகள் செய்தார் .
காளி வெங்கட் , பால சரவணன் ஆகியோரும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தனர் . அனைவருக்கும் நன்றி “: என்றார் .
” நிகழ்ச்சிக்கு வந்த எஸ் ஆர் பிரபாகரன், பேரரசு ஆகியோருக்கு நன்றி . என்னை மிக அழகாகக் காட்டியுள்ள ஒளிப்பதிவாளர் கே ஜி வெங்கடேஷுக்கு நன்றி .
படம் மிக நன்றாக வந்துள்ளது ” என்றார் .
படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா பேசும்போது
” தமிழ்ப் படங்களில் தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பது பற்றி நான் பல முறை பேசி இருக்கிறேன் .
இப்போது பிரபாகரன் பேரரசு போன்ற இயக்குனர்கள் அதை பேசி இருப்பது ரொம்ப சந்தோசம் . இனி நான் பேச ஒன்றும் இல்லை .
படம் சிறப்பாக வந்துள்ளது . எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .









