வளரி கலைக்கூடம் சார்பில் ஆர் பி பாண்டியன் தயாரிக்க, வர்மன் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக நேஹா, மற்றும் வேல. ராமமூர்த்தி ,கஞ்சா கருப்பு,
அருளானந்தம், பிளாக் பாண்டி நடிப்பில் அகரம் காமுரா இயக்கி இருக்கும் படம் பிரான்மலை . மலையா ? மடுவா? பேசலாம்
பிரான்மலை என்ற கிராமத்தின் பெரிய மனிதரும் ஆதிக்க சாதி உணர்வாளருமான ஒரு தயவு தாட்சண்யமற்ற மனிதரின் ( வேல. ராம மூர்த்தி)
மகனான ஓர் இளைஞன்(வர்மன்) ! அங்குள்ள அநாதை ஆசிரமத்தில் தங்கிப் படிக்கும் இளம்பெண் ஒருத்தி ( நேஹா) !

நாயகியின் சேவை உணர்வை கிண்டல் செய்யும் ஒருவன் (மணிமாறன்) அவளிடம் தப்பாக நடந்து கொள்ள முயல ,
நாயகன் அதை கண்டிக்க, விளைவாக நாயகனுக்கும் அவளுக்கும் ஏற்படும் பழக்கம் காதலாகிறது .
நாயகி தங்கி இருக்கும் அநாதை ஆசிரம நிர்வாகிகள் அங்குள்ள மற்ற இளம்பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க முயல,
அதை கண்டு பிடிக்கும் நாயகி, நாயகனிடம் சொல்ல , அவன் மூலம் குற்றவாளிகள் பிடிபடுகின்றனர் .

அதே நேரம் காதல் ஜோடி மீது வஞ்சம் வைக்கின்றனர் குற்றவாளிகள் !
அதன் விளைவாக காதல் ஜோடி உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு, திருமணமும் செய்து கொள்கின்றனர் .
சாதி ஆதிக்க உணர்வு கொண்ட அப்பா அதை ஏற்கமாட்டார் என்பதால் ரகசிய திருமணம் !
அப்பாவுக்கு தெரியாமல் மனைவியுடன் நாயகன் வாழ்கிறான் . வறுமை. கஷ்டம் பின்னர் வேலை, வசதி ! மனைவி கர்ப்பம் அடைகிறாள் .
நாயகனின் காதல் திருமணத்தால் அவனுக்கு தன் மகளை கட்டி வைக்கும் கனவில் இருந்த

நாயகனின் அத்தை மாமா , மற்றும் உறவுகள் சாதிக்காரர்கள் கோபப் படுகின்றனர்.
ஒரு நிலையில் நாயகனின் அப்பாவை தவிர அனைவரும் கணவன் மனைவியை பார்க்க வருகின்றனர் .
சுமூகமாகப் பேசி , ‘விரைவில் உன் அப்பாவும் மனம் மாறுவார்’ என்று சொல்லிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் நாயகனின் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதாக தகவல் வர, நாயகனும் நாயகியும் ஊருக்கு போகின்றனர் .
“எந்த ஊரில் பிறந்தேன் என்று தெரியாத எனக்கு இனி இந்த ஊர்தான் சொந்த ஊர்”என்று அந்த ஊர் மண்ணில் கால் வைத்ததும் விழுந்து வணங்குகிறாள் நாயகி

அவளை நாயகனின் உறவுகள் அன்பாக வரவேற்க, அடுத்து நடந்தது என்ன என்பதே இந்த பிரான்மலை .
சாதி ஆணவக் கொலையின் இன்னொரு கோர முகத்தை அதிரும்படி சொல்கிறது இந்த பிரான்மலை .
ஆணவக் கொலையை ஊரறிய நடுரோட்டில் வெட்டிப் போட்டுதான் செய்ய வேண்டும் என்று இல்லை ;
இப்படி நம்ப வைத்துக் கழுத்தறுத்து செய்வதும் உண்டு என்ற உண்மை முகத்தில் பேயறை அறைகிறது .
அது தொடர்பான காட்சிகள் தடதடக்க வைக்கின்றன .

நாயகனாக வர்மன் இயல்பாக நடித்து இருக்கிறார் .முதல் பகுதி காதல் காட்சிகளை விட
இரண்டாம் பகுதி காட்சிகளில் மிக சிறப்பாக பொருந்துகிறார் .(ஆனால் படத்தை விட நேரில் இன்னும் இளைஞனாக இருக்கிறார் )
காதல் , கோபம், தோல்வியில் துவளுதல் , சோகம் இவற்றை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் , கடைசி காட்சிகளில் கனமான நடிப்பு .
நேஹா ஓகே.
வேல ராமமூர்த்தி வழக்கம் போல முறுக்கிக் கொண்டு நடித்துள்ளார்.

இரண்டாம் பாதியில் சிறிதும் பெரிதான கேரக்டர்களில் வரும் மண் சார்ந்த முகங்கள் மிக சிறப்பாக நடித்துள்ளனர் .
கஞ்சா கருப்புவும் பிளாக் பாண்டியும் சிரிக்க வைக்க முயன்று சிரிப்பாய் சிரிக்கிறார்கள் .
படையப்பா, அவ்வை ஷண்முகி, வில்லன் படங்களில் பணிபுரிந்த எஸ் மூர்த்தியின் ஒளிப்பதிவு மிக சிறப்பு .
பாரதி விஸ்கார் இசையில் வைரமுத்து வரிகளில் வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றன . குறிப்பாக அந்த அம்மா பாடல்! பின்னணி இசையும் நாட் பேட்.

சுரேஷ் அர்ஸ் செய்திருக்கும் படத் தொகுப்பு, இயக்குனரின் தவறுகளை மறைக்க போராடி இருக்கிறது .
வஞ்சகத்துக்கு வலை விரிக்கும் காட்சிகளில் திரைக்கதை வெகு சிறப்பு
இரண்டாம் பகுதியில் காட்டி இருக்கும் சிரத்தையை முதல் பாதியில் காட்டி இருந்தால் இந்த படம் ,
பாலாஜி சக்திவேலின் காதல் படம் போல சிறப்பாக வந்திருக்கும் .

இதுதான் நடக்கப் போகிறது என்று யூகிக்க முடிந்தும் அந்த காட்சிகள் வரும்போது பதை பதைத்துப் போகிறோமே .. அதுதான் இந்தப் படத்தின் கெத்து .
மொத்தத்தில் பிரான்மலை …. ஆணவக் கொலையின் கோரம் சொல்லும் சினிமா மலை .