
முதல் பிரதி அடிப்படையில் தனது பைனரி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து கதை த வசனம் எழுதி இயக்க, யூ டி வி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்க, ரோகாந்த் திரைக்கதை அமைக்க, ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா ஆகியோர் நடித்து இருக்கும் படம், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. நல்ல ரசனைக்கு உடமையாகுமா இந்தப் படம்?
இதயம் இல்லாத அரசு இயந்திரத்தின் கண் மூடித்தனமான செயல்பாடுகளால், உணவுக் கிடங்கில் அடுக்கப்பட்டு மட்கிப் போவதற்கென்றே ரயிலில் கொண்டு செல்லும் உணவுப் பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்ததால், ரயிலை மறித்து அரசுப் பொருளைக் கொள்ளை அடித்த கொள்ளைக்காரன் என்றும் ….
ஆதிக்க நாடுகள் தங்கள் அணு ஆயுத ராணுவக் கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக இந்தியாவைப் பயன்படுத்த நமது அரசு அனுமதிப்பதை எதிர்த்து, காஷ்மீர் பனிமலையில் மனித வெடிகுண்டாக தன்னை மாய்த்துக் கொள்ள முயன்று, ராணுவத்தால் மடக்கப்பட்டு சட்டத்தால் தீவிரவாதி என்றும் ….
இப்படி மக்களின் நலனுக்காக செய்த பல செயல்பாடுகளால் தேசத் துரோகி என்று குற்றம் சாட்டப்பட்டு, மூன்று தூக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் தீவிர கம்யூனிஸ்டு பாலுசாமி (ஆர்யா) .
பாலுசாமியுடன் இயக்கத் தோழராக பணியாற்றிய நிலையில், இப்போது அவரை சிறையில் இருந்து மீட்க முயலும் பெண் போராளி குயிலி.(கார்த்திகா)
எதுவும் சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்ற கொள்கை காரணமாக, எப்படியாவது பாலுசாமிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று தீவிரமாக இயங்கும் ஜெயிலர் மெக்காலே (ஷாம் ).
கடந்த இரண்டு தலைமுறையாக சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் ஊழியராகப் பணியாற்றும் குடும்பத்தில் பிள்ளையாக பிறந்து, மீசை முளைத்த வயதிலேயே ஒரு கைதியை தூக்கில் போடும் வேலையை செய்து , ‘ நான் நிரபராதி’ என்று அந்த கைதி கூறியதை நினைத்துப் பார்த்து பின்னால் மனம் வருந்தி, அந்த சம்பவத்தையே மறக்க முயன்றபடி , தென்னக ரயில்வே கலாசி தொழிலாளியாகவ பணியாற்றும் குடிகார எமலிங்கம் (விஜய் சேதுபதி )
இந்த நான்கு வலுவான கதாபாத்திரங்களின் வீரப் போர்தான் இந்தப் படம்.
சட்டப்படி முறைப்படி தூக்கில் போடும் பணிக்கு இப்போதுள்ள சூழ் நிலையில் எமலிங்கத்தை விட்டால் வேறு ஆள் இல்லாத நிலையில், அவனை தாஜா செய்து சம்மதிக்க வைக்க முயல்கிறார் ஜெயிலர் மெக்காலே .
‘எம லிங்கத்தை கொன்று விட்டால் தூக்குத் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப் போகும் .அதற்குள் பாலுசாமியை காப்பாற்றி விடலாம்’ என்று எண்ணும் குயிலி அவனைப் பின் தொடர , அவன் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் வேலையை செய்ய விரும்பாமல் தவிப்பதை அறிகிறாள்.
எம லிங்கத்தின் துணையுடனேயே பாலுசாமியை காப்பாற்ற முடிவு செய்கிறாள் . அந்தப் பணிக்கு சந்தோஷமாக சம்மதிக்கிறான் எம லிங்கம். அயல் நாட்டுக் கைதிகளும் இருக்கும் முக்கியமான அந்த சிறையில் உள்ள பலத்த பாதுகாப்புக் கெடுபிடிகள் , எமகாதக ஜெயிலர் மெக்காலே இவர்களை மீறி….
வீரம், தைரியம் , விஞ்ஞான உபகரணங்கள், இவற்றுடன் எம லிங்கம், துணை புரியும் கைதிகள் மற்றும் சில சிறைக் காவலர்கள் ஆகியோரின் துணையோடு…. பாலு சாமியை மீட்க குயிலில் முயல கடைசி நேரத்தில் மழை காரணமாக அது முடியாமல் போகிறது .
பாலு சாமியின் தூக்குக்கு நாள் குறிக்கப்பட, தூக்கை நிறைவேற்றும் எம லிங்கத்தின் மூலம் கடைசி நேரத்தில் தூக்குக் குழியில் இருந்து பாலுசாமியை காப்பாற்ற குயிலி திட்டமிட , அதை உணர்ந்து மெக்காலே காய் நகர்த்த , மக்கள் போராளி பாலுசாமி தப்பித்தாரா ? அல்லது…….
— இதுதான் , தமிழ் சினிமாவின் தங்க மகுடத்தில் வைரப்பதக்கமாக பொறிக்கப்படும் சிறப்போடு வந்திருக்கும் ‘புறம்போக்கு என்ற பொதுவுடைமை’ படத்தின் கதை .
வழிகாட்டப்பட வேண்டிய மக்கள் அதிகம் இருக்கிற ஒரு இனத்தில் , மாநிலத்தில் , தேசத்தில்… கலை , விஞ்ஞானம் உள்ளிட்ட அனைத்துமே மக்களுக்காக மட்டுமே என்று நம்பும் எல்லோரும் … இதைப் படிக்கும் யாராக இருந்தாலும்……. உங்கள் நிறங்களை , வர்க்கங்களை , இது போன்ற பிரிவினைகளை எல்லாம் மறந்து விட்டு ….
அயல் நாட்டில் இறந்து வந்த குப்பைக் கழிவில் இருந்த வெடிகுண்டை , ஒரு குப்பை அள்ளும் சிறுமி கால் வயிற்றுக் கஞ்சிக்காக பழைய இரும்பு என்று எண்ணி சேகரிக்க முயல, அந்த டைம் பாம் வெடித்து பல அநாதை சிறுவர்கள் இறந்த — உத்திரப் பிரதேசத்தில் நடந்த — உண்மை சம்பவத்தில் துவங்குகிறது படம் .
சோஷலிச உணர்வை வெளிப்படையாகவும் தமிழ் தேசிய உணர்வை இல்லை மறை காயாக அதே நேரம் ஆழமாகவும் பேசும் வகையில் சிகரம் தொடுகிறது படம்.
பாலுசாமிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது பற்றி செய்தி வாசிக்கப்படும் தொலைக்காட்சியில் அடிப்பாகததில் நகரும் எழுத்துச் செய்திகளில் ‘அடுத்த உலகத் தமிழ் மாநாட்டை கனடாவில் நடத்த வேண்டும் — கனடா வாழ் தமிழர்கள் ஆர்வம் ‘ என்றும் “தமிழ் யுனிகோடில் கிரந்த எழுத்துக்களை சேர்க்க தமிழ் அறிஞர்கள் எதிர்ப்பு ” என்றும் ஓடும் செய்திகள் இதற்கு உன்னதமான உதாரணம்.
அதே நேரம் ”வர்க்க முரண்பாட்டுக்கு முற்றிலும் தீர்வு காணாமல் எந்த தேசிய இனத்தின் விடுதலையையும் வென்றெடுக்க முடியாது” என்ற வசனத்தில், ஈழத்துத் தொப்புள் கொடி உறவுகள் சறுக்கிய இடத்தையும் கம்பீரமாக சுட்டிக்காட்டி , பேராண்மையுடன் நிமிர்ந்து நிற்கிறது இயக்குனர் தோழர் ஜனநாதனின் எழுத்துச் செங்கோல் !
ஒரிஸ்ஸாவில் ஒரு தமிழருக்கு இழைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை ஒரு காட்சியில் வைத்திருக்கிறார் ஜனநாதன்.
அங்கே பதிமூன்று வயதுப் பெண் ஒருத்தி கற்பழித்துக் கொல்லப்பட, குற்றவாளியை பிடிக்க துப்பு இல்லாத ஒரிஸ்ஸா போலீஸ், கூலி வேலைக்குப் போய் பிளாட்பாரத்தில் படுத்துக் கிடந்த தமிழ்நாட்டு இளைஞனைப் பிடித்து குற்றாவாளியாக்கி அடித்தே அவனை ஒப்புக் கொள்ள வைத்து தூக்குத் தண்டனைக் கைதியாக்கி விடுகிறது . ஒரு நிலையில் “நீதான் உண்மையிலேயே நீதான் கொலை செய்தாயா /” என்று நீதிபதி கேட்கும்போது ” ஆமாம்யா … எப்படிக் கற்பழிச்சுக் கொலை பண்ணேன்னு பல தடவை போலீஸ்கிட்ட நடிச்சுக் காட்டிட்டேன். இன்னொரு தடவை நடிச்சுக் காட்டாவா ?” என்று அவன் கேட்க,
“இல்லப்பா அவன் நிரபராதி என்பது இப்போதுதான் தெரிய வந்தது. உன்னை ஒத்துக்க வச்ச இன்ஸ்பெக்டரே சொல்லிட்டார் ” என்று நீதிபதி கூறும்போது “எனக்கு விடுதலை கொடுத்தீங்க . ஆனா நான் உண்மையிலேயே ஒரு பொண்ணைக் கற்பழிச்சிட்டேன்னு நம்பிட்ட ஜனங்க முன்னாடி அவமானப்பட்டு தூக்குல தொங்கிட்ட என் பொண்டாட்டி உசுரையும் மகல் உசுரையும் யாரு கொடுப்பா ” அவன் கதறும் அந்த ஒரு காட்சி …
இந்தப் படத்துக்கு கொடுக்க தகுதியான விருது எந்த நாட்டிலும் இல்லையே.
எம லிங்கத்தின் வீட்டில் ஒட்டி இருக்கும் ஒரு போஸ்டரில் இருக்கும் “கலாசி தொழிலாளியாகவே ஒய்வு பெறும்…” என்ற வார்த்தை ரயில்வேயில் உள்ள பதவி உயர்வுக் குளறுபடிகளை போகிற போக்கில் பரிகாசமாகச் சொல்கிறது.
எம லிங்கத்தின் தாய் அவன் நண்பனிடம் “அவன் கூட டான்ஸ் ஆடிகிட்டு சுத்துற பொண்ணுகள்ல யாரையாவது பாருடா. அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று சொல்ல “அதுங்க எல்லாம் ஒரு மாதிரி தொழில் பண்ற பொண்ணுங்கம்மா “என்று நண்பன் சொல்ல, “கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுல கொண்டு வந்து வச்சா , மறுபடியும் குடும்பப் பொண்ணுங்களா ஆய்ட்டு போகுது ” என்று அம்மா சொல்லும் காட்சியில்….
வறுமை காரணமாக விபசாரத்தில் வீழ்ந்த பெண்களின் மனதில் உள்ள ஆறாக் காயத்துக்கு ஆற்றும் மருந்தை இடுகிறார் ஜனநாதன்.
பாலு சாமியாக ஆர்யாவின் கடைசி குளோசப்பில் நமக்கு ஞாபகம் வரும் முகம் , குயிலி நீராவிப் படகில் ஏறி கடலில் சீறிப் பாய்ந்து மறைவது போன்ற காட்சிகளில் ஈழ விடுதலைப் போருக்கு வீர வணக்கம் செலுத்துகிறார் ஜனநாதன்.
இப்படி கருத்தியல் ரீதியாக இந்தப் படத்தை பாராட்ட வேண்டும் என்றால் படத்தில் வருகிற ஒவ்வொரு காட்சியையும் கொண்டாடிக் கோபுரம் ஏற்றலாம்.
இந்த விமர்சனத்தை நீங்கள் படித்து முடிக்க இன்னும் பல மணி நேரம் ஆகலாம் .
இன்னொரு பக்கம் எம லிங்கம் கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு பல விசயங்களை வெடித்துச் சிரிக்க வைக்கும் காமெடியாகவும் விமர்சனம் செய்து ஜனரஞ்சகப்படுத்தவும் மறக்கவில்லை ஜன நாதன் . உதாரணம் டாஸ்மாக் பாரில் வாங்கித் தின்ற சைடு டிஷ்கான கடன் அக்கவுண்டு நோட்டில் எமலிங்கம் கையெழுத்துப் போடப் போகும்போது அவன் கையைப் பிடித்து போலீஸ் இழுக்க அவன் கேட்கும் “இந்த நாட்டில் எழுத்து சுதந்திரம் இல்லையா ?”‘ என்ற குசும்பு வசனம்
எப்படிப்பட்ட கைதியாக இருந்தாலும் வாகனத்தில் கூட்டிச் செல்லும்போது கை விலங்கு மாட்டி இருக்கக் கூடாது ; ஜெனீவா ஒப்பந்தப்படி ஜெயிலில் கைதிகளை அடிக்கக் கூடாது என்பது போன்ற அடிப்படைச் சட்ட அறிவுகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் இந்தப் படத்தின் சமூக அக்கறையை என்ன சொல்லிப் பாராட்ட?
எவ்வளவு காலம்தான் மக்களுக்கு என்று உழைத்தாலும் மக்கள் கம்யூனிஸ்டுகளை தீவிரவாதிகளாகவே பார்க்கிறார்களே என்ற கேள்விக்கு குயிலி சொல்லும் பதில் கம்யூனிசத் தோழர்களுக்கு தெளிவு மருந்து .
ஆப்கானில் உள்ள போராளிகள் அனைவரும் இஸ்லாமியப் பழமைவாதிகள் என்ற அடையாளப் படுத்தப்படும் நிலையில் அங்குள்ள போராளிகளை கம்யூனிஸ்டுகளாகவும் அடையாளப் படுத்தும் விதம் .. தமிழ் தெரிந்த இந்தோ ஆப்பிரிக்க கைதி கதாபாத்திரத்தின் மூலம் நிறவெறிக்கு எதிரான தனது குரலையும் பதிவு செய்து , முதலாளிதத்துவ ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான பூடக எதிர்ப்பாக வெளிப்படுத்துவது…..
இப்படி ஜன நாதனின் உலக அரசியல் பார்வை நமக்கு ஒரு வியப்பூட்டும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
ஏதோ சில கேரக்டர்களை வைத்துக் கொண்டு என்ன சொல்வது என்றே தெரியாமல் திணறும் திரைக்கதைகளை பார்த்து புளித்த நமக்கு … இப்படி படம் ஓடும் ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆக்கபூர்வமான அதிசயத்தைப் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை .
இன்னொரு பக்கம் விசயமே இல்லாத காட்சிகளுக்கு எல்லாம் வளவளவென்று பேசும் கதாபாத்திரங்களைப் பல திரைப்படங்களில் பார்த்து சலித்துக் கிடக்கும் நமக்கு , இந்தப் படத்தில் இப்படி நிறைய நிறைய பேசும் வாய்ப்புள்ள கதையை எடுத்துக் கொண்டு இருந்தாலும்….
இரண்டாம் பாகத்தில் வசனங்களை பெரிய அளவுக்கு குறைத்து இதயத் துடிப்பை எகிற வைக்கும் வகையில் கதைப் போக்கை அமைத்தது …. கணிப்பொறியின் நவீன வீடியோ தொழில் நுட்பத்தை காட்சிகளில் சிறப்பாக பயன்படுத்தியது … என்ன நடக்குமோ என்று பதறும் அளவுக்கு காட்சிகளை அமைத்தது என்று…
ஒரு பக்கம் கருத்தியல் செறிந்த கதை வசனகர்த்தாவாக முதல் பாதியில் ஜொலிக்கும் ஜனநாதன் , இரண்டாம் பாதியில் அந்த சிறப்பை தக்க வைத்துக் கொள்ளும் அதே நேரம் அட்டகாசமான தொழில் நுட்ப சிறப்பு கொண்ட இயக்குனராகவும் ஜொலிக்கிறார் .
தனது தூக்குக்கான கயிறு பரிசீலிக்கப்படும் காட்சியில் டம்மி எடைக்கு பதிலாக பாலுசாமியே தொங்கிப் பரிசோதிக்கும் காட்சி , காட்சி அமைக்கும் திறனுக்கு சான்று என்றால் , ‘என்னிடம் கருணை மனு கொடு. உனக்கு தூக்குத் தணடனையை ரத்து செய்கிறேன் ” என்று மெக்காலே சொல்லும்போது அதை மறுத்து அப்போதே தூக்கு மேடைக்கு பாலு சாமி அழைக்கும் காட்சி கதாபாத்திர வடிவமைப்புத் திறனுக்கு சான்று.
அழுதும் தீர்க்க முடியாத ஆறாத சோகத்தை ஏற்படுத்தும் அந்த கிளைமாக்ஸ் … எம லிங்கத்தின் முடிவு …. அதை முழுமையாக எழுத்தில் சொல்ல முடியாது . பார்த்துதான் உணர முடியும் .
சற்றே பிசகினாலும் வில்லனாகப் போய்விடக் கூடிய ஆனால் அப்படிப் போகக் கூடாத ஒரு வித்தியாசமான கேரக்டரை அற்புதமாக உள்வாங்கி அழுத்தமாக செய்து சபாஷ் போட வைக்கிறார் மெக்காலே ஆக வரும் ஷாம்.
ஒரு ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றும் ஊழியனின் மன நிலையை புழுதியும் சகதியுமாய் , கண்ணீரும் குழப்பமுமாய் மிக அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய சேதுபதி.
கார்த்திகாவுக்கு இனி அவரது கேரியரில் இப்படி ஒரு அற்புதமான கேரக்டர் கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஆக்ஷன் காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து உள்ளார் .
ஆயிரம் காதல் காட்சிகளில் ஆர்யா நடித்து இருப்பதை நாளை சினிமா உலகம் மறந்து விடலாம் . ஆனால் பாலு சாமியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நிலைத்து விட்டார் ஆர்யா . நிச்சயமாக இது அவருக்கு லைஃப்டைம் கேரக்டர்.
சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்கு கூட நடிகர் தேர்வில் மோக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் ஜனநாதன் .
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்துக்கு யானை பலம். ம்ஹும் .. ஒரு யானைப் படையின் பலத்தைக் கொடுக்கிறது.
வர்ஷனின் பாடல்கள் இசை எளிமையான இனிமை . பின்னணி இசையில் பிரம்மதப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா . அவரது இசை படத்துக்கு தனியாக டானிக் ஏற்றுகிறது .
ஜெயில் செட்டை சிறப்பாக வடிவமைத்த வகையில் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு உள்ளாகிறார் கலை இயக்குனர் செல்வகுமார் .
கணேஷ் குமாரின் படத் தொகுப்பும் ஒகே .
நவீனன் கிறிஸ்டன் செய்திருக்கும் 3D அனிமேஷன் , பிரிசம் பிக்சல்சின் விஷுவல் எஃபக்டும் சிறப்பு .
பாலுசாமி , மெக்காலே , குயிலி ஆகிய பெயர்களுக்கான காரணங்களை படத்தில் வசனத்தில் வரும்படியாக ஜனநாதன் செய்திருக்க வேண்டும் . (காரணங்களை அறிய படிக்கவும் https://wh1026973.ispot.cc/purambokku-movie-news/)
என்னதான் இந்திய தண்டனை சட்டத்தை வகுத்தவன் என்றாலும் , நமது சிறப்பான பாரம்பரியக் கல்வி முறையை அழித்த அயோக்கியன் மெக்காலேவின் பெயரை , அந்த ஸ்பெஷலான ஜெயிலர் கதாபாத்திரத்துக்கு வைத்திருக்க வேண்டாம் (அந்த மெக்காலேவை இந்த மெக்காலே ஒரு வசனத்தில் விமர்சித்தாலும் கூட !)
பாலுசாமியை முதல் முறை காப்பாற்றும் முயற்சி மழை காரணமாக கெட்டுப் போகிறது என்று சொல்லி இருக்க வேண்டாம் . மழை என்பது நம் நாட்டை பொறுத்தவரை சிறந்த விஷயம் .
பாலுசாமியை மிக வேண்டும் என்பதற்காக, மக்கள் போராளியான குயிலி, சட்டென்று எம லிங்கத்தை கொன்று விடலாம் என்று சொல்லி கிளம்புவது, குயிலியின் கதாபாத்திரத்துக்கு விளைவிக்கப்பட்ட களங்கமாகவே படுகிறது . மாறாக எம லிங்கத்தை கடத்தி தலை மறைவாக வைப்போம் என்று கூறிக் கிளம்பி இருக்கலாம்.
ஆனாலும் என்ன ….
இந்தப் படம் யூ டிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் .
இப்படி எல்லாம் கூட தமிழ் சினிமாவில் படம் எடுக்க முடியும் என்று மக்கள் சினிமாவுக்கான ஒரு ராஜ பாட்டையைப் போட்டிருக்கும் இயக்குனர் எஸ் பி ஜனநாதனுக்கு மக்கள் இயக்குனர் என்ற பட்டத்தை அளிப்பதில் பெருமை அடைகிறேன் . (இப்படிக்கு சு.செந்தில்குமரன் )
ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும் , ஒவ்வொரு கம்யூனிஸ்டும் குடும்பத்தோடு ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் இது .
மொத்தத்தில்
புறம்போக்கு என்கிற பொதுவுடைமை… தமிழ் சினிமாவின் தலை நிமிர்வுக்கான பரம்பரைப் பட்டா என்னும் நமதுடைமை !
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————————
எஸ்.பி.ஜனநாதன் , ரோகாந்த் , ஷாம் , விஜய் சேதுபதி, கார்த்திகா, ஏகாம்பரம் , செல்வகுமார், ஸ்ரீகாந்த் தேவா