இசைக்கருவிகள் கடை ஒன்றை நடத்தி வரும் பாடகன் கதிர் (விஜய சேதுபதி). அவனை கண்டவுடன் காதலிக்கிறாள் , பாட்டு ஆசிரியையான மீரா (காயத்ரி).
கதிரின் நண்பன் அவன் கம்பெனி முதலாளியின் மனைவியோடு காமமாக இருப்பது முகநூலில் புகைப்படமாக வெளிப்பட ,
அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வது … அந்த நண்பன் ( முதலாளியின் மனைவி அல்ல ).ஆச்சா ?
மீரா குடியிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவளை யாரோ பின் தொடரும் உணர்வு அவளுக்கு . இந்த நிலையில் மீரா உடை மாற்றும் காணொளி ஒன்று ,
கதிரின் அலைபேசிக்கு வருகிறது . பதறும் அவன் ஒரு நிலையில் தவிர்க்க முடியாமல் அவளிடம் சொல்ல,உடைந்து போகிறாள் .
எனவே கதிரின் வீட்டுக்கே வந்து தங்குகிறாள் . அங்கே அவள் குளிப்பதும் கதிரோடு அந்தரங்கமாக இருப்பதும் கூட அவனுக்கு காணொளியாக வருகிறது .
கதிரின் இன்னொரு நண்பன் நட்சத்திர விடுதி குடியாட்ட அரை ஒன்றில் கஞ்சா கை மாற்றுவது,
அந்த அலை பேசி எண் மூலம் காணொளியாக வந்து சமூக வலை தளங்களில் பரவ , அந்த நண்பனை காவல் துறை கைது செய்கிறது.
சம்மந்தப்பட்ட அலைபேசி எண்ணை தேடிப் போனால், அது பல வருடம் முன்பே இறந்து போன மிருதுளா (?) என்ற பெண்ணின் ( மகிமா நம்பியார்) பெயரில் இருக்கிறது .
போலீசிடம் போனால் அவர்கள் மீராவின் ஆபாச காணொளிகளைப் பார்க்க ஆசைப்படுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்
இந்நிலையில் அந்த அலைபேசி எண்ணில் இருந்து வரும் கட்டளை ஒன்று கதிரை பகலில் பொது இடத்தில்,
அம்மணமாக நிற்கச் சொல்கிறது . ‘நிர்வாணமாக நிற்பதன் வலி இப்போது உனக்கு புரியும்’ என்று செய்தி அனுப்புகிறது .
சில பல சில்லறைப் பதட்டங்களுக்குப் பிறகு தெரிய வரும் விஷயம் என்னவென்றால் …
பல வருடங்கள் முன்பு மேற்படி புள்ளிகள் பலரும் கல்லூரியில் படிக்கும்போது இசைப் போட்டி ஒன்றில் பல கல்லூரிகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.
அப்போது மிருதுளாவின் போனை எடுக்கும் கதிரின் நண்பர்கள் , அதில் மிருதுளாவை அரைகுறை உடையில் மீரா எடுத்திருந்த காணொளி ஒன்றை ,
தங்கள் அலைபேசிகளில் பதிந்து அதை சமூக வலை தளங்களில் பரப்பி விடுகின்றனர் .
அவமானம் மற்றும் பெற்றோரின் புறக்கணிப்பு காரணமாக மிருதுளா அநியாயமாக தற்கொலை செய்து கொள்கிறாள் .
காரணமான நண்பர்களை பழிவாங்க இப்போது கதிரை காதலித்து அதன் மூலம் எல்லோரிடமும் பழகி ,
நண்பர்களின் தவறுகளை மறைந்து இருந்து படம் எடுத்து எடுத்து சமூக வலை தளங்களில் போட்டு அவர்களை தண்டிக்கிறாள் மீரா . போச்சா?
அந்த தவறை தடுக்காமல் வேடிக்கை பார்த்த கதிரை காதலிக்கும் மீரா தன்னைத் தானே ஆபாசமாகப் படம் எடுத்து ,
மிருதுளாவின் அலைபேசி மூலம் கதிருக்கே அனுப்பி பதட்டப் பட வைத்து அவனை துடிக்க வைக்கிறாள் .
காரணம் …. ” இப்போ உனக்கு வேண்டிய ஒருத்திக்கு இப்படி அவமானம் நடக்கும்போது இப்படி துடிக்கிறியே .
ஆனா அன்னிக்கு மிருதுளாவை உன் நண்பர்கள் அவமானப் படுத்தியபோது துடிச்சியா ? தடுத்தியா ?.
தக்காளி உனக்கு வந்தா ரத்தம் . அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளிச் சட்னியா ?” என்ற நியாயமான கேள்வி .
ஆனால் இந்த சிறப்பான கேள்விக்குரிய கதைக்கு ஏற்ற திரைக்கதை அமைக்க தெரியாமல் சொதப்பி சொம்படித்து இருக்கிறார்கள் .
எப்படி என்று சொல்வதற்கு முன் சில விஷயங்கள் ….
முதல் காட்சியில் ஒரு பெண் மாடியில் இருந்து குதித்து காற்றில் பறந்து பக்கவாட்டில் அலையாடி கீழே வந்து “தொம்ம்மம்மம்ம்ம்ம்…….” என்று விழுந்து,
ரத்தம் தெறிக்கும் காட்சி அடி மனதை அதிர வைக்கிறது . . இயக்குனர் ரஞ்சித்தின் ஜெயக்கொடியின் படமாக்கல் கொடி பறக்கும் இடம் இது .
கதிர் அணியும் சிவப்பு உடை மழை நீரில் கரையக் கரைய வண்ணம் இழந்து நிர்வாணம் காட்டும் அந்த யோசனையும் சிறப்பு
பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவும் பரவாயில்லை . ஆனால் எதுக்கெடுத்தாலும் தேவையே இல்லாமல் தலைக்கு மேலே பாய்கிறது காட்சி .
சாலையில் நிற்கும் பேருந்தைக் காட்டும்போது கூட அதன் உச்சியில் போய் முடிக்கிறார்கள் . ஏங்க , ஏன் ?
இன்னொரு பக்கம் ஒலி வடிவமைப்பாளர் தேவை இல்லாமல் டம் டும் என்று சத்தம் போட்டு கொல்கிறார் . இதய நோயாளிகள் கவனம் .
‘அடடா விஜய் சேதுபதிக்கு தம்பி ஒருத்தர் இருக்கிறாரா ? அவர் எப்போ நடிக்க வந்தார் .சொல்லாமலே மறைச்சுட்டாங்களே .’ என்று செல்லமாகக் கோபம் வருது .
அப்புறம் பார்த்தால் .. அது நம்ம விஜய் சேதுபதியேதான் . எடுத்து அத்தனை வருஷம் ஆச்சு . இருக்கட்டும் . அது ஒன்றும் படைப்பாளிகளின் குற்றம் இல்லை .
ஆனால் பழிவாங்கும் யோக்கியதை மீராவுக்கு இருக்கிறதா ?
தன் தோழியின் மரணத்துக்குக் காரணமான — கதிரின் நண்பனை பழிவாங்கும் மீரா , அதற்காக,
அவனது முதலாளியின் மனைவி என்ற இன்னொரு பெண்ணின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவது என்ன நியாயம் ?
அவள் சோரம் போனாள் அதனால்தான் செய்தேன் என்றால் கூட அதற்காக ஊரறிய அவளை அம்பலப்படுத்துவதா ?
சோரம் போனால் அம்பலப்படுத்தலாம் என்றால் , தன் தோழியின் அந்தரங்கத்தை மீரா கேமராவில் படம் எடுத்தது என்ன நியாயம் ?
(அந்த காட்சியே செயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட ஓர் அரைவேக்காட்டுக் காட்சி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் )
அவள் அனுமதியோடுதான் எடுத்தேன் என்றாலும் அதை அழிக்காமல் வைத்து இருந்தது என்ன நியாயம் ?
இப்படி பிரச்னைக்கு அடிப்படைக் காரணமாக இருந்து விட்டு உத்தமி போல பேசுவது என்ன நியாயம் மீரா ?
இதை விட பெரிய கொடுமை .. ” ஏண்டா உன்ன நம்பி என் வீட்டில் விட்டேன் . என் பொண்டாட்டிய மயக்கி,
அசிங்கப்படுத்தி என் மானத்தையும் வாங்கிட்டியேடா ” என்கிறார் முதலாளி . ” சார் .. இது என் பர்சனல்மேட்டர். அதுல நீங்க தலையிடாதீங்க ” என்கிறான் நண்பன் .
எது ? அவர் பொண்டாட்டியை கெடுத்து அசிங்கப்படுத்தி ஊரு பாக்க வைப்பது இவன் ‘பர்சனல்’ மேட்டராம் .
இத்தனைக்கும் இது அந்த நண்பனின் குணாதிசயம் சொல்லும் வசனமாகவும் அமைக்கப்படவில்லை
என்ன மன நிலையில் என்ன மிதப்பில் இந்த வசனத்தை எழுதி இருப்பார்கள் என்றே தெரியவில்லை . அடப் பாவிகளா !
அந்த நண்பர்கள் காணொளியை எடுத்து வலைதளங்களில் ஏற்றியது மிகப் பெரிய குற்றம் .அதை தடுக்க கதிர் தவறியதும் பெரும் குற்றமே . அதில் சந்தேகமே இல்லை .
ஆனால் கதிர் கதாபாத்திரம் அப்படியா அறிமுகப்படுத்தப்படுகிறது ?
மற்ற நண்பர்கள் எல்லாம் மோசமானவர்கள் ; கதிர் மிக நல்லவன் என்று ஆரம்பத்தில் கூறப்படும் நிலையில் கதிர் அந்த பெண்ணின் அலை பேசியை,
திருட்டுத்தனமாக எடுப்பவனாக — காணொளியை பார்ப்பவனாக –நண்பர்கள் அலைபேசியில் அதை ஏற்றிக் கொள்ள அனுமதிப்பவனாக,
எப்படி இருப்பான் ? அதை சமூக வலைதளங்களில் ஏற்றுபவனை கொன்று இருக்க மாட்டானா ?
இதுதான் கதை என்றால் அப்படி அறிமுகம் அந்தக் கதாபாத்திரத்துக்கு எதற்கு ? மாறாக ஒரு வழிப்பாதையில் எதிரில் வருபவனை திட்டுபவனாக —
ஆனால் தனக்கு தேவை என்றால் போகிறவன் என்றாவதுதானே குறைந்த பட்சம் கதிரின் கதாபாத்திரததைக் காட்டி இருக்க வேண்டும் ?
அதை விடுத்து அவனை உலகமகா யோக்கியனாக ஏன் காட்ட வேண்டும் ?
இது எல்லாவற்றையும் விட பெரிய கேவலம் ஒரு பெண்ணின் உடல் வீடியோவில் பதிவாகி எல்லோரின் பார்வைக்கும் போய் விட்டது என்பதை பெரிய அவமானம் என்று,
பெண்களின் சிந்தனைக்குள் இன்னும் புகுத்துவது . இத்தனைக்கும் அந்த வீடியோவில் மிருதுளா காம ரீதியாகக் கூட ஒன்றும் செய்யவில்லை .
போகிறபோக்கைப் பார்த்தால் ‘ஆடிக் காற்றில் மாராப்பு விலகியது பெரிய அவமானம். எனவே தற்கொலை செய்துகொள்’ என்று மறைமுகமாக சொல்வார்கள்போல இருக்கிறது.
ஒழுக்கம் என்பது என்பது எதிர்பாராத விதமாக உடல் பாகங்கள் தெரிவதால் கெட்டுப் போகிற தக்காளி சட்னி இல்லை என்பது இதுகளுக்கு எல்லாம் எப்பதான் புரியுமோ ?
முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள் .இதுவோ முதலில் இருந்து முற்றும் வரை கோணலாக இருப்பதால் , எரிச்சலே மிஞ்சுகிறது
புரியாத புதிர் … வீணான பதர் !