ஃ பில்மிநாட்டி என்டர்டைன்மென்ட் சார்பில் காயத்ரி சுரேஷோடு சேர்ந்து, விவேகானந்தனின் இணை தயாரிப்போடு விவேக் குமார் கண்ணன் தயாரித்து எழுதி இயக்க,
ஜாக்கி ஷெராப் , சன்னி லியோன் பிரியா மணி, சாரா அர்ஜுன், அஷ்ரஃப் மல்லிசேரி, சாமுவேல் ஒஜ்க்வு, ஜெயபிரகாஷ் , அக்சயா , பிரதீப் சுப்பிரமணியன், கியரா, சோனல், விஷ்ணு வாரியர், சதிந்தர், ஷிரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங் பகுதி 1 (QUOTATION GANG part 1 )’
அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு, ட்ரம்ஸ் சிவமணியின் இசை , கே ஜே வெங்கட்ராமனின் படத் தொகுப்பு, ஓம் பிரகாஷின் சண்டை இயக்கம் , தசரதனின் சிறப்பு ஒப்பனை ஆகியவற்றால் வளர்ந்திருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவேக் குமார் கண்ணன், காயத்ரி சுரேஷ், விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
படத்தின் முன்னோட்டம் மனிதர்களின் இருண்ட வாழ்க்கையைப் படம் பிடிக்கும் வகையில் தீவிரமாக இருந்தது .
டிரம்ஸ் சிவமணி இசையில் உருவான ஒரு பாடல் ஈர்ப்பாக இருந்தது. . அதன் மெட்டில் வரும் தீம் மியூசிக்கும் அருமையாக இருந்தது .
இதுவரை குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட சாரா அர்ஜுன் , இளம் பெண்ணாக போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் பெண்ணாக கவர்ச்சியைக் கொட்டி நடித்திருப்பது பாட்டில் லிரிக் வீடியோவில் வந்த புகைப்படங்கள் மூலம் தெரிந்தது .
தொழில் நுட்ப ரீதியாகவும் லிரிக் வீடியோ சிறப்பாக இருந்தது
படம் பற்றிப் பேசிய இயக்குனரும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான விவேக் குமார் கண்ணன் , ” நான் வட சென்னையை சேர்ந்தவன் . எனவே அந்தப் பின்னணியில் கேங்க்ஸ்டர் படம் ஒன்று செய்ய நினைத்தேன். வட சென்னை என்றாலே கேங்க்ஸ்டர் என்றுதான் காட்டவேண்டும் என்று அவசியம் இல்லைதான் . ஆனால் இந்தப் படம் சில நிஜ சம்பவங்களின் உத்வேகத்தில் எழுதப்பட்டது .
கேரளாவில் கொட்டேஷன் கேங். (QUOTATION GANG ) என்ற பெயரில் ஒரு கொலை செய்ய அஞ்சாத கூட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. எதைப் பற்றியும் யோசிக்காமல் தமது தேவைக்கான ஆயிரம் இரண்டாயிரத்துக்கு கூட, கொலை செய்பவர்கள் அவர்கள். அவர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் தொழில் . அதைத் தவிர வேறு ஒன்றும் அவர்களுக்கு விசயமில்லை.
இந்த கதைப் போக்கு மட்டுமின்றி, போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் ஓர் இளம்பெண் , அதனால் நொந்து போகும் ஒரு தந்தை என்று ஒரு கதைப் போக்கும் உண்டு . அந்த இளம்பெண் கேரக்டரில் சாரா அர்ஜுன் நடிக்க வைக்கப்பட்டார். ஆரம்பத்தில் அவரது தந்தைக்கு அதில் விருப்பம் இல்லை. கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்தோம் .
இதைத் தவிர ஒரு காதல் கதையும் உண்டு
பல்வேறு தளங்களை களங்களை சேர்ந்த மனிதர்களையும் இதில் நீங்கள் பார்க்கலாம் . ஜாக்கி ஷெராப் ப்ரியா மணி , சன்னி லியோன் எல்லோரும் சிறப்பான கேரக்டர்களில் அருமையாக நடித்துள்ளார்கள். இது படத்தின் முதல் பகுதிதான் . இரண்டாம் பகுதிக்கு கொஞ்சம் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது . இந்த முதல் பாகம் வெளிவந்த பிறகு மிச்ச படப்பிடிப்பு துவங்கும் ” என்றார் .
ஃ பில்மிநாட்டி என்டர்டைன்மென்ட் சார்பில் காயத்ரி சுரேஷ் , ” அந்தக் காதலர் கதைப் போக்கை காஷ்மீரில் படமாக்கி உள்ளோம் . மற்ற இரண்டு கதைப் போக்குகளில் இருந்து அது வேறு மாதிரி இருக்கும் . போதைப் பழக்கத்தின் கொடுமைகளை இந்தப் படம் சொல்வதை ஒரு முக்கிய விசயமாக நினைக்கிறேன் ” என்றார் .
இணை தயாரிப்பாளர் விவேகானந்தன் , ” படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி மொழிகளில் விரைவில் வெளிவரும் “என்றார் .
காட்டப்பட்ட காட்சிகளில் இயக்குனர் விவேக் குமார் கண்ணனின் நேர்த்தியான இயக்கத் திறமை வெளிப்பட்டதைக் கண்டிப்பாகப் பாரட்ட வேண்டும்.