முன்குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் , இதய பலகீனமானவர்கள் இதைப் படிக்க வேண்டாம் . மற்றவர்களும் நல்லதே நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு படிக்கவும்
அடக் கடவுளே !
இப்படி எல்லாம் படம் எடுத்து ரிலீஸ் பண்ண விட்டால் அப்புறம் சினிமா எப்படி உருப்படும் ?
ஒரு கிராமம். நன்றாக படிக்கும் ஏழை மாணவன் .பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லித் தருகிறான் . நல்ல பழக்க வழக்கங்களை வற்புறுத்துகிறான். கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்து உடம்பு சரியில்லாத அம்மாவை காப்பாற்றுகிறான்.அந்த பள்ளியின் மாணவர் தலைவனாக வருகிறான் .
அது பிடிக்காத ஊர் நாட்டாமையின் மகன் தனது அப்பாவிடம் போட்டுக் கொடுக்க , அவனுக்கு யாரும் வேலை தரவிடாமல் தடுக்கிறார் நாட்டாமை . ஆள் வைத்து அடிக்கிறார். அதையும் மீறி படித்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக வருகிறான். விருது வாங்கி விழாவில் கலந்து முடித்து (சும்மா பதிமூணே பேரு நிக்கிற விழாதான்) வருவதற்குள் அம்மா இறந்து விட , அம்மாவைப் புதைத்து விட்டு அந்த மண் மேட்டின் முன்னாள் உட்கார்ந்து விஷ பாட்டிலை திறந்து உணவில் கலந்து …..
‘இது மாதிரி பிள்ளை பிறக்கவே ஒவ்வொரு தாயும் ஆசைப் படுவாள்’ என்று டைட்டில் எல்லாம் போட்டு படத்தை முடிக்கிறார்கள்.
இந்த நொன்னைக்கு ஒரு படம் !

அம்மாவாக வருபவர் வார்த்தைக்கு வார்த்தை இருமிக் கொண்டே இருக்கிறார் . அப்போதுதான் நோயாளி என்று புரியுமாம். ”நான் இருக்கும்போது ஏன்மா கவலைப்படுற?”என்ற வசனத்தை இரண்டு மணிநேர படத்தில் தொண்ணூத்து சொச்சம் தடவையாவது பேசுகிறார் ஹீரோ . அப்போதான் பாசம் புரியுமாம். எப்போதும் கொஞ்சம் நெல்லு சோறும் ரசமும் ஊத்தி அம்மாவுக்கு கொடுக்கிறார் . ஏன்னா அவ்வளவு ஏழையாம். (ஆனா சாப்பிடுற தட்டுமட்டும் பளபளக்கிற தடிமனான எவர் சில்வர் தட்டு !)
இப்படி, படம் முழுக்க அபத்தக் குப்பைகளின் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது .தவிர படத்தில் கருப்பான ஒரு கதாநாயகியும் வெள்ளையான ஒரு கதாநாயகியும் ஹீரோவை மாறி மாறி .. காதலிக்கிறார்கள். படத்தில் நடிக்கிற சகல ஜீவராசிகளும் ஆளுக்கு ஒரு டன் மேக்கப்பை முகத்தில் ஏற்றிக் கொண்டு மூச்சு மூட்ட சுமக்கிறார்கள் .
ஒருவர் பேசி முடிந்து ஒரு மணிநேரம் கழித்தே அவசரமாக சொல்ல வேண்டிய பதிலை அடுத்தவர் சொல்கிறார் . தவிர ஒரு வாக்கியம் பேசுகிறவரே ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு இடைவெளிவிட்டு அடுத்த வார்த்தை பேசுகிறார். ஷூட்டிங்கில் என்னவோ உளறி இருக்கிறார்கள் . டப்பிங்கில் என்னவோ குளறி இருக்கிறார்கள் .
கதாநாயகனும் கதாநாயகியும் டான்ஸ் என்ற பெயரில் அடிக்கிறார்கள் பாருங்கள் கூத்து. கடல் பொங்கி வராமல் இருப்பது கடவுளின் பெருந்தன்மைதான்
.
அவர்களாக காமெடி என்று நினைத்துக் கொண்டு சில பேர் நடித்து ‘வழங்கி’ இருக்கிறார்கள் பாருங்கள். அபோகலிப்டா கும்பலில் மாட்டிக் கொண்ட மாதிரி இருக்கிறது நமக்கு.
கதை என்றால் என்னவென்றே தெரியாமல் எதையோ எழுதி , திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாமல் எதையோ அடுக்கி , வசனம் என்றால் என்னவென்றே தெரியாமல் எதோ பிதற்றி , நடனம்- சண்டைக் காட்சி என்றால் என்னவென்றே தெரியாமல் சொதப்பி, நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல் கேமராவுக்கு முன்னாள் மலங்க மலங்க விழித்து, டைரக்ஷ்ன என்றால் என்னவென்றே தெரியாமல் ஷூட்டிங் போய் …
ஆனா…. ரெண்டு கதாநாயகிகள் காதலிக்கிற கேரக்டர்ல நடிக்கணும் என்பதில் மட்டும் பயபுள்ள பக்கா தெளிவு.

இப்படி ஒரு படம் எடுத்து அழிக்கிற காசை எப்படியெல்லாம் உருப்படியா செலவு பண்ணி இருக்கலாம் ! எத்தனை அநாதை ஆசிரமங்கள் முதியோர் இல்லங்கள் இருக்கு ! எத்தனை பேர் ஆர்வம் இருந்தும் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறாங்க ! எத்தனை பேரு உலகம் முழுக்க ஒருவேளை சோறு இல்லாம தவிக்கிறாங்க. அவங்களுக்கு எல்லாம் கொடுத்து இருக்கலாம் .
விருப்பம் இல்லன்னா அன்றைய அமைச்சர் ஒருத்தர் செஞ்ச மாதிரி கட்டுக்கட்டா எரிச்சு காவிரி ஆத்துல கூட விடுங்கப்பா. ஆனால் படம் எடுக்கறேன்னு சொல்லி சினிமாவுக்கு இருக்கற மரியாதையையும் ஆத்துல விட்றாதீங்க.
இதுல இந்தப் படத்தை நடிச்சு தயாரிச்சு இயக்கிய கோபி காந்திக்கு கோல்டு ஸ்டார்னு பட்டம் வேற .
அய்யா சினிமாக்கார பெரியவங்களே . படத்துக்கு சென்சார் பண்றது எல்லாம் அப்புறம்.
முதல்ல…புதுசா படம் எடுக்கறேன்னு இப்படி அந்தர கந்தர கோலம் பண்ற ஆளுக எடுத்து ;முடிச்சு; ரிலீஸ் பண்ண துடிக்கிற பப்படங்களை எல்லாம் பார்த்து, ‘இதை வெளிய விட்டா அது சினிமாத் தொழிலுக்கே கேவலம்’னு இருக்கற படங்கள வெளியே வர விடாமல் தடுப்பதற்கு ஒரு வழி செய்யக் கூடாதா?
காசு கொடுத்து நம்மள வாழ வைக்கும் ஜனங்க பாவம் இல்லியா ?
யாராவது தப்பித் தவறி இந்த படத்துக்கு போய்ட்டா …. அவங்க கதியை நினைச்சாலே அடிவயிறு கலங்குதுங்க .
இறைவா ..
குப்பைப் படங்களில் இருந்து ரசிகர்களை காப்பாற்று .
நல்ல படங்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்
