சதுரங்க வேட்டை @விமர்சனம்

sathurangavettai still
அநேகமாக பின்வரும் கதையை சின்ன வயசில் உங்களுக்கு உங்கள் பாட்டி சொல்லி இருக்கலாம் .
பூலோகத்தில் ஒரு தீயவன் இருந்தான் . அவன் பண்ணாத பாவங்களே இல்லை . அவன் செத்து மேலோகம் போனபோது அவனது பாவக் கணக்கை சித்திரகுப்தன் எமனுக்கு காட்ட,  எமன் அந்த தீயவனை நரகத்தில் எண்ணெய் செக்கில்  போட்டு ஆட்ட முடிவு செய்தான் . அப்படி ஆட்ட முயலும் போது ஒரு திருவோடு வந்து எண்ணெய் செக்கின்  கலத்துக்கும் அதன்  நடுவில் உள்ள உலக்கைக்கும் இடையே  விழ, செக்கு நின்று விட்டது .

அந்த தீயவனுக்கு  எந்த ஆபத்தும் நிகழவில்லை. அதிர்ந்து போன எமன் அந்த திருவோட்டை எடுத்துப் பார்த்ததும் ஆடி விட்டான் . ஏன் என்றால் அது சிவபெருமானின் திருவோடு .

அப்போது அங்கே பிரசன்னமான சிவபெருமான் எண்ணெய் கொப்பரையில் திருவோடு விழுந்ததற்கு காரணம் சொன்னார். அதாகப் பட்டது….. அந்த தீயவன் பூமியில் வாழும்போது ஒரு முறை சிவபெருமான் மனித ரூபம் எடுத்து பூமிக்கு வந்தாராம் . மனித ரூபம் எடுத்ததால் அவருக்கு பசியும் வந்ததாம் . பலபேரிடம் தர்மம் கேட்டும் யாரும் கொடுக்க வில்லை.

பசியால் காதடைத்துப் போன சிவபெருமான் அந்த தீயவனிடம் வந்து பசிக்குது என்று கேட்க , அந்த தீயவன் முதல் நாள் தின்று மீதம் வைத்து ஊசிப் போய் வீடு முழுக்க நாறிக் கொண்டிருந்த சோற்றை எடுத்து சிவபெருமான் திருவோட்டில் போட , வேறு வழியின்றி அதை தின்று பசியாறினாரம் சிவபெருமான். அந்த திருவோடுதான் இப்போது செக்கில் விழுந்து தீயவனை காப்பாற்றியதாம்.

பிறருக்கு உதவும் குணத்தை எளிமையாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்தும் இந்தக் கதைதான்……

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும் மனோபாலாவின் பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து வழங்க , இந்தியைக் கலக்கும் நம்ம ஊர் ஒளிப்பதிவாளர்  நட்ராஜ்  முத்துக்கு முத்தாக படத்துக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க ,கதாநாயகியாக இஷாரா சொந்தக் குரலில் பேசி நடிக்க , வினோத் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி இருக்கும் சதுரங்க வேட்டை  படத்துக்கு அடிப்படை விதை.

still from the film sathurangavettai
இங்கே எல்லோருமே ‘கிங்’தான்

லட்சியக் கனவுகளோடும் நேர்மை குறித்த அடிப்படை நம்பிக்கையோடும் வாழ்கிற காந்திபாபு ஒர் ஏழை சிறுவனை இந்த உலகம் சுய நலத்தால் கிழித்துக் கீரை விதைக்கிறது .

பெற்றோரோடு அவன் குடியிருந்த குடிசை, தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் கூட்டு சுயநலத்தால்  எரிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்து துரத்தப்பட்டு பிளாட்பாரத்தில் தூங்கும்போது,  ஒரு குடிகாரனின் கார் அவனது தந்தையை கொல்கிறது .

உடம்பு சரி இல்லாமல் மருத்துவமனையில் கிடக்கும் தாயையும் காந்திபாபுவையும் அணுகும் ஒரு ‘சமூக சேவை’ அமைப்புப் பெண்மணி , குடிசை விவகாரத்தில் நீதி வாங்கித் தருகிறேன் என்று அன்பொழுக பேசி , இவர்களை வைத்து வழக்குப் போட்டு , அந்தக் குற்றவாளிகளை மிரட்டி பெரும்பணம்  வாங்கிக் கொண்டு ஒரு பைசா கூட இவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டு போகிறாள் .

வளர்ந்து இளைஞனாகும் காந்தி பாபு  (நடராஜ் ),  பிறருக்கு சற்றும் உதவ நினைக்காத– ஆனால் பேராசை காரணமாக இருப்பதையும் இழக்க தயாராக இருக்கும் மந்தை மனிதர்களை குறிவைத்து அடிக்கிறான் .  மிக நல்லவளான பானுவின்  (இஷாரா) அன்புக்கும் பாத்திரமாகிறான். கோடி கோடியாக சம்பாதிக்கிறான். பானுவையும் பணத்தால் அளந்து, அதனால்  பிரிகிறான் .

ஒரு நிலையில் போலீசிடம் சிக்கி சித்திரவதை அனுபவித்தும் பணத்தின் மூலம் வழக்கை உடைத்து தப்பிக்கிறான். ஆனால் அதற்குள் அவனுக்கு உருவாகும் எத்ரிகள் அவனை நசுக்க முயல , எப்போதோ விளம்பரத்துக்காக உதவி செய்த ஒரு அநாதை இல்ல நிர்வாகியாலும் அங்கே இருக்கும் அந்த அன்பான பெண்ணாலும் காப்பாற்றப்படுகிறான்.

இனி தப்பே செய்யாமல் உழைத்துப் பிழைக்க முடிவு செய்து கல்யாணம் குடும்ப  வாழ்க்கை , மனைவியின் வயிற்றில் வாரிசு என்று நிம்மதியாக இருக்கையில் , இவனால் ஏமாற்றப்பட்ட ஒரு ரவுடி கும்பல் மீண்டும் அவனை தப்பு செய்ய அழைக்கிறது. கர்ப்பிணி மனைவியை கண்காணிக்க ஒரு கொலைகாரன் அங்கேயே தங்க வைக்கப்பட , தவறான கும்பலோடு மீண்டும் தப்பு செய்ய நாயகன் கிளம்ப ….

அப்புறம் என்ன ஆச்சு என்பதே சதுரங்க வேட்டை.

natraj , ishara in sadhuranga vettai
ராணியின் திசை ராஜாவின் விசை

பக்கத்தில் ஒருவன் பசியால் செத்துக் கொண்டிருந்தாலும் பார்க்காதது போல ‘டீசண்டாக’ முகம் திருப்பிக் கொள்ளும் சமூகம், பெரும்பணம் கிடைக்கும்  என்ற ஆசை காட்டி யார் எது சொன்னாலும் அறிவுக்கு வேலை கொடுக்காமல் அப்படியே நம்பி இருக்கிற பணத்தை இழக்கத் தயாராக இருப்பதையும் அப்புறம் ஏமாந்த பின் சிக்கிய குற்றவாளிகள் முன்பு ஹீரோயிசம் காட்டும் ‘ஒரு விதமான அயோக்கியத்தனத்தையும்’ அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர் வினோத் .

“பணம் இருந்தா எதையும் செய்யலாம்னா அந்த பணத்தை சம்பாதிக்க நான் ஏன் எதையும் செய்யக் கூடாது ?”

“ஒரு பொய்யை நம்ப வைக்கணும்னா அதுல கொஞ்சம் உண்மையும் இருக்கணும் ”

“ஒருத்தன் உன்னை ஏமாத்திட்டான்னா வருத்தப்படாத. அவன் உனக்கு ஒரு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு போயிருக்கான். அந்த விதத்தில் அவனும் உனக்கு ஒரு குரு ”

— இது போல ஆங்காங்கே வரும் வசனங்களில் ஒரு தீர்மானம் , திட்டவட்டம் .. ஒரு ‘ஃபிரஷ்னஸ் ‘ இருக்கிறது. முடிந்தவரை ஒவ்வொரு கேரக்டரையும் எதோ ஒரு வகையில் வித்தியாசப்படுத்திக் காட்டும் முனைப்பு அபாரம் .

நாயகனாக அற்புதமாக நடித்து இருக்கிறார் நடராஜ். கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம்! இஷாரா சிறப்பாக நடித்து இருப்பதுடன் ஈரக் குரலுடன் அருமையாக பின்னணி பேசி இருக்கிறார்.

சான் ரோல்டனின் பின்னணி இசை இரண்டாம் பகுதியில் ஸ்கோர் செய்கிறது. கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவும் அருமை .

natraj ishara in sathuranga vettai
இரண்டே சதுரத்தில் இருவரும்

சொல்லப்படும் பட்ஜெட்டுக்கு மிக நிறைவான படமாக்கலை கொடுத்து இருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதே நேரம்….

படத்தின் அடிப்படைக் கதை சற்று பலவீனமாக இருப்பதை சொல்லாமல் இருப்பதற்கில்லை. ஒரு அயோக்கியன் ஒரு நிலையில் திருந்தி வாழ முயல்வதும் அதற்கு வரும் இடையூறுகளும் கடைசியில் சுபமா சோகமா என்பதும் , கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களும் நடித்து முடித்த ஒரு கதைதான். நான் ஏன் திருட  ஆரம்பித்தேன் என்பதை நீதிக்குத் தலைவணங்கு படத்தில் எம்ஜி ஆர் கடைசியாக சொல்வார். இதில் நடராஜ் முன்பே சொல்கிறார். அவ்வளவுதான்.

நாயகன் தப்பு செய்யும் காட்சிகளில் புதிய சிந்தனைகள் , ஈர்ப்பான வசனங்கள் என்று உற்சாகம் கொப்பளிக்க களம் ஆடி இருக்கும் இயக்குனர் இரண்டாம் பகுதியில் அதை பேலன்ஸ் செய்ய வேண்டிய பகுதியில்…. நாயகன்  அடிபட்டுக் கதாநாயகியால் காப்பாற்றப்படுவது, காட்டில் களை வெட்டுவது , கர்ப்பிணி மனைவியை விட்டு விட்டுப் போவது என்று வழக்கமான விசயங்களில் சிக்கிக் கொள்கிறார் . நாயகனின் கர்ப்பிணி மனைவி காப்பாற்றும் அயோக்கியன் என்பது பழையதொரு பாலச்சந்தர் படத்தை நினைவு படுத்துகிறது.

நாயகியின் திருமண சம்மதம், திருந்தும் கத்தி ரவுடி என்பது எல்லாம் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை. பாடல்கள் படத்துக்கு வேகத்தடை.

படத்தை விறுவிறுப்பாக கொண்டு போக வேண்டும்தான். அதற்காக நின்று நிதானித்து அழுத்தமாக சொல்ல வேண்டிய விசயங்களை கூட சடசடவென்று சொல்வதால் கிடைக்க வேண்டிய எமோஷன் மிஸ் ஆகிறது.

வேட்டி கட்டினாலே யாரையாவது ஏமாத்தத் தோணுதுல்ல என்ற வசனம்….. கொடூரமான அயோக்கிய வில்லன் எப்போதும் தூய தமிழில் பேசுவது … இதெல்லாம் வித்தியாசம் என்ற பெயரில்…. இயக்குனரின் அரைவேக்காட்டுத்தனம்.

ishara , nattu in sadhuranga vettai
நிம்மதியே வெற்றி

எனினும் ….தமிழகத்தில் மண்ணுளிப் பாம்பு, மல்டி லெவல் மார்கெட்டிங் மூலம் விற்கப்படும் வெட்டிப் பொருட்கள், ஈமு கோழி வளர்ப்பு , கோபுரக் கலச ரைஸ் புல்லிங் இரிடியம் இது போன்ற சீட்டிங் எல்லாம் எப்படி எதனால் எவ்வாறு எங்ஙனம் நடக்கிறது என்பதை அட்டகாசமாக சொல்லி இருக்கும் வகையில் முதல் படத்தையே ஒரு பெரிய சமூக விழிப்புணர்ச்சிப் படமாக கொடுத்து இருக்கிறார்கள் தயாரிப்பாளர் மனோபாலாவும்  இயக்குனர் வினோத்தும் . பாராட்டுகள்! வாழ்த்துகள் .

சதுரங்க வேட்டை ….. ராஜா – சிப்பாய் ஆட்டம் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →